Chennai Coronavirus : சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறியதாக நேற்று 5,020 வழக்குகள் பதிவு
சென்னையில் நேற்று மட்டும் ஊரடங்கு விதிகளை மீறியதற்காக 5 ஆயிரத்து 20 வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வரும் நாளை மறுநாள் வரை பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் வருவதற்கும், பணிகள் தொடர்பாக இ-பதிவுடன் வெளியில் வருவதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் விட்ட மாவட்டம் செல்வதற்கு இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்குமாறு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து, காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் மாநகராட்சி பணியாளர்களும் கொரோனா தடுப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்றும் ஆய்வு செய்து வருகின்றனர்.
சென்னை மாகநர காவல் எல்லைக்குட்பட்ட 12 காவல் மாவட்ட எல்லைகளில் 13 எல்லை வாகன தணிக்கைசாவடிகள் மற்றும் அனைத்து காவல் நிலைய எல்லைகள் செக்டார்களாக வகைப்படுத்தி உரிய சாலை தடுப்புகள் மற்றும் வாகனத் தணிக்கைச் சாவடிகள் அமைத்து வாகன ஓட்டிகளை கண்காணித்து வருகின்றனர். இ-பதிவு இல்லாத வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் நேற்று மட்டும், கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதற்காக 5 ஆயிரத்து 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கு விதிகளை மீறியதற்காக 653 இருசக்கர வாகனங்கள், 26 ஆட்டோக்கள் மற்றும் 1 இலகுரக வானங்கள் என மொத்தம் 680 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து காவல்துறையினர் மட்டுமின்றி, சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் மேற்கொண்ட வாகனத் தணிக்கை மற்றும் ரோந்து கண்காணிப்பு சோதனையில் சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறியதற்காக 869 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும், அத்தியாசிய தேவையின்றி வெளியில் சுற்றியதற்காக ஆயிரத்து 44 இருசக்கர வாகனங்கள், 26 ஆட்டோக்கள் மற்றும் 7 இலகுரக வாகனங்கள் மற்றும் 1 இதர வாகனம் என மொத்தம் 1,078 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், சென்னையில் நேற்று மட்டும் முகக்கவசம் அணியாமல் சென்ற 2 ஆயிரத்து 142 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மேலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத காரணத்தால் 125 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி எல்லைக்குட்டப்ப பகுதிகளில் நேற்று மட்டும் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியது தொடர்பாக 5 ஆயிரத்து 889 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி ஆயிரத்து 758 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : Tamil Nadu Lockdown: தமிழ்நாட்டில் பஸ்கள் இயக்க வாய்ப்பு? ஊரடங்கு தொடர்பாக முதல்வர் இன்று ஆலோசனை!