அப்பளமாய் நொறுங்கிய ஆட்டோ.. முன்னும், பின்னும் வந்த எமன்! நடுரோட்டில் நடந்தது என்ன?
பெங்களூருவில் இரண்டு அரசுப் பேருந்துகளுக்கு இடையே மாட்டிக்கொண்ட ஆட்டோ உருக்குலைந்ததால் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் பயணி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தியாவின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் பெங்களூரும் ஒன்று. போக்குவரத்து நெரசில் மிகுந்த பெங்களூரில் அமைந்துள்ளது பனசங்கரி. இங்குள்ள 80 அடி சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
திடீரென ப்ரேக் போட்ட டிரைவர்:
இந்த சாலையில் கிரிநகர் பகுதி அருகே உள்ள சீதா வளைவு அருகே அரசுப்பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து ஓட்டுனர் திடீரென ப்ரேக் போட்டார். அப்போது, பின்னால் வந்த ஆட்டோ பேருந்து மீது மோதியது. இதனால், ஆட்டோவின் முன்பக்கம் சேதம் அடைந்தது.
அப்போது, ஆட்டோவிற்கு பின்னால் மற்றொரு அரசுப்பேருந்து வந்து கொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த பேருந்து நிறுத்தப்பட்டு, அதன் மீது ஆட்டோ மோதியதை சற்றும் எதிர்பார்க்காத பேருந்து ஓட்டுனர் தனக்கு முன்னால் நிகழ்ந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்தார். அவர் பேருந்தை நிறுத்த முயற்சித்தார்.
அப்பளம் போல நொறுங்கிய ஆட்டோ:
ஆனால், அதற்குள் அரசுப்பேருந்தும் ஆட்டோ மீது மோதியது. இதனால், இரண்டு அரசுப்பேருந்துகளுக்கு மத்தியில் சிக்கிக்கொண்ட ஆட்டோ அப்பளம் போல நொறுங்கியது. இதில் ஆட்டோ ஓட்டுநரும், ஆட்டோவில் பயணித்த பயணியும் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர்.
போலீசார் விசாரணையில் ஆட்டோ ஓட்டுனர் பெயர் விஜய்குமார் ( அவருக்கு வயது 50) என்றும் அவரது ஆட்டோவில் பயணித்த பயணியின் பெயர் விஷ்ணு பாட்டியா ( அவருக்கு வயது 80) என்றும் தெரியவந்தது. விஷ்ணு பாட்டியா சித்த மருத்துவர் என்றும் தெரியவந்துள்ளது.
ஓட்டுநர், மருத்துவர் மரணம்:
ஆட்டோ ஓட்டுநர் விஜய்குமாருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். மருத்துவர் விஷ்ணு பாட்டியாவிற்கு நேற்று முன்தினம்தான் தன்னுடைய 80வது பிறந்தநாளை கொண்டாடினார். அமெரிக்கா சென்றுள்ள அவரது மகன் தனது தந்தையின் மரண செய்தியறிந்து இந்தியா திரும்பி கொண்டிருக்கிறார்.
உயிரிழந்த இருவரது உடலையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

