‛டீமில் கருப்பு ஆடு... ஆப்ரேஷன் எல்லாம் ஃபெய்லியர்...’ உயர் அதிகாரிகளிடம் முறையிடும் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை!
‛உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு ஸ்பெஷல் டீமை கட்டுப்படுத்தினால் மட்டுமே, மீண்டும் ரவுடிகள் தலை தூக்குவதை கட்டுப்படுத்த முடியும் என்றும், தொழில் நிறுவனங்கள் நிம்மதியாக பணியாற்ற முடியும்’
சென்னையை ஒட்டிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கட்டப்பஞ்சாயத்து, மாமூல் வசூல், ரவுடியிசம் கொடி கட்டி பறந்து வந்தது. இதைத் தொடர்ந்து, அதை கட்டுப்படுத்த காஞ்சிபுரம் கூடுதல் எஸ்.பி., வெள்ளத்துரை தலைமையில் ஸ்பெஷல் டீம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரையின் நியமனம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தை கலக்கிக் கொண்டிருந்த ரவுடிகளுக்கு பீதியை ஏற்படுத்தியது. நினைத்ததைப் போலவே, அவரும் களத்தில் இறங்கி ரவுடிகளை விரட்டத் தொடங்கினர். படப்பை குணா உள்ளிட்ட பிரபல ரவுடிகளுக்கு வலை வீசப்பட்ட நிலையில் குணா உள்ளிட்ட பலரும் அதில் பிடிபட்டனர். கைதானவர்கள், சரணடைந்தவர்கள் என அனைவரும் சிறையில் இருக்கும் நிலையில், படப்பை குணாவின் உறவினரான போந்தூர் மோகனை பிடிக்க வெள்ளத்துரை விரித்த வியூகம் அனைத்தும் எடுபடவில்லை.
வெள்ளத்துரைக்கு உதவியாக அமைக்கப்பட்ட ஸ்பெஷல் டீமில் இருந்து, போந்தூர் மோகனுக்கு அனைத்து நகர்வுகளும் பகிரப்படுகிறதாம். 5 முறை சரியான தகவல் கிடைத்தும், கிட்ட நெருங்கியும், போந்தூர் மோகனை வெள்ளத்துரையால் கைது செய்ய முடியவில்லையாம். அதன் பின்னணியில், ஸ்பெஷல் டீமில் உள்ள சில போலீசாரின் சாதிய பற்றும், மோகனிடம் இருக்கும் நெருக்கமும் தான், போந்தூர் மோகனை பிடிக்க வெள்ளத்துரை போட்ட அத்தனை ஆபரேஷனும் பெயிலியர் ஆக காரணமாம்.
இதனால் நொந்து போன வெள்ளத்துரை, தனது அணியில் உள்ள கருப்பு ஆடுகளை நீக்கி விட்டு, வெவ்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த சிறப்பான அதிகாரிகள் மூலம் அணியை கட்டமைக்க கோரிக்கை வைத்துள்ளார். துவக்கத்தில் பரபரப்பாக இருந்த தேடுதல் வேட்டை, பின்னாளில் சோர்ந்து விட்டதாகவும், கைதாகும் ரவுடிகள் மீது கறார் நடவடிக்கை எதுவும் இல்லாததால், அவர்கள் திரும்ப வந்து தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவார்கள் என்ற பயத்தில், ‛இன்பார்மர்கள்’ ஒதுங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விசயத்தையும் வெள்ளத்துரை, உயர்அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு ஸ்பெஷல் டீமை கட்டுப்படுத்தினால் மட்டுமே, மீண்டும் ரவுடிகள் தலை தூக்குவதை கட்டுப்படுத்த முடியும் என்றும், தொழில் நிறுவனங்கள் நிம்மதியாக பணியாற்ற முடியும் என்றம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இரும்பு கரம் கொண்டு அடக்கும் நடவடிக்கைகளை தொடர வேண்டும் என்றும், அப்போது தான் மக்கள் அச்சமின்றி வாழ முடியும் என்றும் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை சார்பில், உயர்அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்