திருச்சி அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்து ரவுடிகளுக்கு விற்றவர் கைது
திருச்சி மாவட்டத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து ரவுடிகளுக்கு விற்றவரை அதிரடியாக போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் தாளக்குடி பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் அள்ளி கடத்தப்பட்டு வருகிறது. இதில் மணல் கடத்துபவர்களுக்கும், அதனை தட்டிக்கேட்ட அப்பகுதியினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த மாதம் 12-ந்தேதி சமயபுரத்தை அடுத்த அகிலாண்டபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் இருதரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் நாட்டு வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டதால், அது அவர்களுக்கு எப்படி கிடைத்தது என்று போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜீயபுரம் பகுதியில் உள்ள இளைஞர்கள் நாட்டு வெடிகுண்டு தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக ஸ்ரீரங்கம் பெருகமணி காந்திநகர் பகுதியை சேர்ந்த தீனதயாளன் (வயது 37) என்பவரை பெட்டவாய்த்தலை போலீசார் கைது செய்தனர். மேலும், தீனதயாளனுடன் அணலை பெரியார் நகரை சேர்ந்த 6 பேர் வாத்தலை பகுதியில் சித்தாம்பூர் வெடி கடையில் வெடிபொருட்கள் வாங்கி வந்து நாட்டு வெடிகுண்டுகளாகவும், வெங்காய வெடிகளாகவும் மாற்றி திருச்சி மாவட்டம் மற்றும் மாநகரத்தில் உள்ள ரவுடிகளுக்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார், லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம் தலைமையிலான போலீசார் வாத்தலைக்கு நேற்று சென்று அந்த வெடி கடையில் சோதனை நடத்தினர். மேலும் அந்த கடை உரிமையாளரான முகமதுசாசிதீன் (62) என்பவரிடம் விசாரணை செய்த போது, அவர் உரிமம் பெற்று, திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் வெடி பொருட்களை பெற்று வந்து வாத்தலை பகுதியில் விற்பனை செய்து வருவது தெரியவந்தது. பின்னர் அந்த கடையில் இருந்து 50 நாட்டுவெடிகளை கைப்பற்றி போலீசார் சோதனைக்காக எடுத்து சென்றனர். மேலும் தீனதயாளனுடன் தொடர்பில் இருந்த 6 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில்.. திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை தொடர் குற்றசெயல்களில் ஈடுபடுவோர், அரசினால் தடை செய்யபட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள், என தொடர்ந்து கண்காணித்து கைது நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக திருச்சி புறநகர் பகுதிகளில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து விற்பனை நடைபெறுவதாக புகார்கள் வந்தது. அதன்படி தனிப்படை போலீஸ் நியமனம் செய்து அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் திருச்சி அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்து விற்பனை செய்தவர் கைது செய்துள்ளோம். இதனை தொடர்ந்து சட்டத்திற்கு எதிராக தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர்களின் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என எச்சரிக்கை விடுத்தனர்.