Ratan Tata: ஏன் ரத்தன் டாடா அனைவராலும் நேசிக்கப்படுகிறார்.?
Ratan Tata: மிகப் பெரிய பணக்கார தொழிலளிதபரான ரத்தன் டாடா, எப்படி பாமர மக்களும் நேசிக்கும் படியான தலைவராக பார்க்கப்படுகிறார்.
1937 ஆம் ஆண்டு புகழ்பெற்ற டாடா குடும்பத்தில் பிறந்த ரத்தன் டாடா, 10 வயதில் பெற்றோரைப் பிரிந்ததாலும், பாட்டியால் வளர்க்கப்பட்டதாலும் ஆரம்பத்தில் தனிப்பட்ட சவால்களை எதிர்கொண்டார்.
இளமைக் காலம்:
ஒரு ஆடம்பரமான வீட்டில் வளர்ந்து அவர், கார்னெல் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் மற்றும் ஹார்வர்ட் அட்வான்ஸ்டு மேனேஜ்மென்ட் திட்டத்தில் பட்டம் பெற்றிருந்தாலும், ரத்தன் டாடா IBM இன் வேலை வாய்ப்பை நிராகரித்தார். இதையடுத்து, அவர் 1962 டாடா அங்கத்தில் உள்ள டெல்கோவின் கடைநிலை பணியாளராக வேலை செய்யத் தொடங்கினார்.
அவர் தனது வாழ்க்கையை அடித்தளத்தில் இருந்து கட்டமைத்தார், டாடா குழுமத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்தார், இறுதியில் 1971 இல் நேஷனல் ரேடியோ மற்றும் எலக்ட்ரானிக்ஸ் (NELCO) இயக்குநரானார். தொழிற்பயிற்சியில் இருந்து இயக்குநராக மாற அவருக்கு ஒன்பது ஆண்டுகள் பிடித்தன, ஆனால் அவர் ஒருபோதும் பின்வாங்கவில்லை. இந்த அனுபவம் அடிமட்ட தொழிலாளர்களின் நிலையை புரிந்து கொள்ள மிகவும் உதவியது என்று சொல்லலாம்.
இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சென்றாலும் டாடா நிறுவனத்தின் பொருட்களை பார்க்க முடியாமல் இருப்பது கடினம், காலையில் எழுந்து டீ அருந்தும் டீ தூள் பிராண்டில் இருந்து, விமான சேவை ஏர் இந்தியா வரை இருக்கிறது.
டாடா நிறுவனம் குடும்ப நிறுவனமாக இருந்தாலும், அதை இந்தியாவிலிருந்து உலகம் முழுக்க வளர முக்கிய பங்காற்றியதில் ரத்தன் டாடாவின் பங்கு முக்கியமானது.
ஏன் நேசிக்கப்படுகிறார்.
பல எதிர்ப்புகள், இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் இண்டிகா என்ற காரை உருவாக்கினார். இது ,உலக அரங்கில் இந்தியர்களை திரும்பி பார்க்க வைத்தது.
இந்தியாவின் மிகப்பெரிய தொண்டு நிறுவனங்களில் ஒன்றான டாடா அறக்கட்டளை, மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கும், சுகாதாரம், கல்வி, கிராமப்புற மேம்பாடு தொடர்பான திட்டங்களுக்கு ஆதரவளிப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
புற்றுநோய் தொடர்பான சிகிச்சைக்கான மருத்துவத்தின் கட்டணம் அதிகமாக இருந்ததால், எளிய மக்களும் பயன்பெறும் வகையில் , புற்றுநோய் மருத்துவமனையை ஏற்படுத்தினார்.
உலகம் கொடிய தொற்றுநோயை எதிர்த்துப் போராடிய போது அவர் ரூ. 500 கோடி நன்கொடை அளித்தார், இது அவருக்கு ஏராளமான பாராட்டுகளைப் பெற்றது.
பாமர மக்கள் பயன்படும் வகையில் , ரூ. 1 லட்சம் மதிப்பிலான டாடா நானோ காரை உருவாக்கினார். ஆனால், இந்த காரை வைத்திருப்பவர்கள் ஏழை மக்கள் என்ற விளம்பரபடுத்தியதால், கார் விற்பனையானது சரிந்ததாக தெரிவித்தார் ரத்தன்.
ரத்தன் டாடாவின் தாராள மனப்பான்மை இந்தியாவுக்கு அப்பாலும் பரவியது. கல்வி நிறுவனமான ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலுக்கு, ஒரு நிர்வாக மையத்தை நிறுவுவதற்காக, 50 மில்லியனை அமெரிக்க டாலர்களை நன்கொடையாக அளித்தார். இதன் மூலம் எதிர்காலத் தலைவர்களை வடிவமைக்கும் கல்வியின் ஆற்றல் மீதான நம்பிக்கையை ரத்தன் டாடா வலுப்படுத்தினார்.
டாடா நானோ கார் தயாரிப்பு குறித்து ரத்தன் டாட்டா தெரிவிக்கையில் "பரபரப்பாக இயங்கி கொண்டிருந்த பம்பாய் சாலையில் மழையில் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தை இருசக்கர வாகனத்தில் செல்வதை பார்த்த அவர், தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் இந்தக் குடும்பங்களுக்கு, ஏதாவது செய்ய விரும்பியதாகவும், அதன் காரணமாகவே சிறிய வடிவில் நானோ காரை வடிவமைத்ததாகவும் தெரிவித்தார்.
ரத்தன் டாடாவின் தொழில் பார்வையானது லாபத்திற்கு அப்பால் இருந்தது என்றே சொல்லலாம். அவர் முதலாளித்துவத்தின் தொழிலாளியாக இருந்தாலும் சமூகப் பொறுப்புடன் செயல்பட்டார். இந்த பண்பே, அனைத்து மக்களும் நேசிக்கும் தன்மையை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.