Income Tax Vs TDS: வருமான வரிக்கும் TDSக்கும் என்ன வேறுபாடு? விளக்கம் இங்கே...
வரி செலுத்துவோர் பெரும்பாலும் வருமான வரி, TDS எனப்படும் மூலத்தில் கழிக்கப்பட்ட வரி என்ற சொற்களை அடிக்கடி கேட்பது வழக்கம். வருமான வரி - TDS: என்ன வேறுபாடு?
வரி செலுத்துவோர் பெரும்பாலும் வருமான வரி, TDS எனப்படும் மூலத்தில் கழிக்கப்பட்ட வரி என்ற சொற்களை அடிக்கடி கேட்பது வழக்கம். இரண்டு சொற்களும் சற்றே ஒரே விதமானவை என்பது போல தோன்றினாலும், வருமான வரிக்கும், TDSக்கும் பெரிய வேறுபாடுகள் உண்டு. கணக்கிடும் போது, இந்த இரண்டு வரிகளும் வெவ்வேறு வகையான இயங்கும் முறைகளைக் கொண்டவை.
எனவே வரியை செலுத்துவதற்கு முன்பாக, வரி செலுத்துவோர் இந்த வரிகளுக்கு இடையிலான குழப்பத்தை நீக்கிவிட்டு, அதன் தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும்.
வருமான வரி என்றால் என்ன?
ஒரு தனிநபரின் வருமானத்தின் அளவைப் பொருத்து, அதன்மீது விதிக்கப்படும் கட்டாய வரி பங்களிப்பு வருமான வரி என அழைக்கப்படும். உங்கள் மொத்த வருமானத்தில் இருந்து வரியாக கழிக்கப்படும் தொகைக்கு என்றே தனியாக வருமான வரி விகிதம் வகுக்கப்படுள்ளது. மேலும், ஒரு நிதியாண்டின் இறுதியில் தனிநபரின் வருமானத்தின் அடிப்படையில் வருடாந்திர வரி விதிக்கப்படுகிறது.
TDS என்றால் என்ன?
மூலத்தில் கழிக்கப்பட்ட வரி என்றழைக்கப்படும் TDS eன்பது ஏற்கனவே செலுத்தப்பட்ட வரியாகும். இதனை வருமான வரி, வருமான வரியின் நிலுவை முதலானவற்றிற்கு எதிராக பயன்படுத்தலாம். அரசு எளிதாக வரி வசூல் செய்வதற்கான செயல்முறையில் TDS கணக்கிடப்படுகிறது. எனவே, ஒரு நிறுவனம் தொழிலாளருக்கு ஊதியம் தரும் முன்பு, அவரது பெயரில் வருமான வரித்துறையில் செலுத்தி, ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யும் தொகையே TDS ஆகும்.
வருமான வரி - TDS: என்ன வேறுபாடு?
வெவ்வேறு வகைகளில் வரி வசூல் செய்யும் வடிவங்களே வருமான வரியும், TDS முறையும் ஆகும். ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில் வருமானத்தின் அடிப்படையில் வரி நிர்ணயிக்கப்பட்டு, ஆண்டுதோறும் செலுத்தப்படுவது வருமான வரி. அதே வேளையில் குறிப்பிட்ட ஆண்டில், மூலத்தில் இருந்து கழிக்கப்படுவது TDS ஆகும்.
வருமான வரி நேரடியாக அரசுக்குச் செலுத்தப்படுகிறது. அதே வேளையில்,TDS மூலமாக ஒருவரின் வரி சுமை குறைக்கப்படுகிறது. இதில் வரியைக் கழிப்பவர் அரசுக்கு வரி பெற்றுத் தருபவராக இயங்குகிறார்.
ஒரு நிதியாண்டில் தனிநபர் ஒருவர் ஈட்டிய மொத்த வருமானத்தின் மீது வருமான வரி விதிக்கப்படுகிறது. TDS-ன் கீழ், சில குறிப்பிட்ட பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் குறிப்பிட்ட நபர்களின் மூலத்தில் இருந்து மட்டுமே தொகை கழிக்கப்படும்.
ஒரு நிதியாண்டின் முடிவில், அதன் கால எல்லையைத் தாண்டி குறிப்பிட்ட அளவிலான தொகையை வருமானமாகப் பெறும் தனிநபர்கள், நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது வருமான வரி விதிக்கப்படுகிறது. TDS-ன் கீழ், வரிக் குறைப்பு, வரி செலுத்துதல் முதலானவற்றை வரி செலுத்துபவர் வருமானம் பெறுவதற்கு முன்பே செலுத்தி விடுகிறார்.