காலதாமதத்தைத் தவிர்க்க நகைகளைக் குறையுங்கள்: ஏர் இந்தியா புதிய உத்தரவு
காலதாமதத்தைத் தவிர்க்க அணிகலன்களைக் குறையுங்கள் என ஏர் இந்தியா விமான நிறுவனம் தனது சிப்பந்திகளுக்கு குறைந்த அளவிலான நகைகளை அணியுமாறு வலியுறுத்தியுள்ளது.
காலதாமதத்தைத் தவிர்க்க அணிகலன்களைக் குறையுங்கள் என ஏர் இந்தியா விமான நிறுவனம் தனது சிப்பந்திகள் குறைந்த அளவிலான நகைகளை அணியுமாறு வலியுறுத்தியுள்ளது. இதனால், சுங்கத்துறையினர் சோதனை நேரம் குறையும் என்பதால் இதனைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
கோவிட் தொற்று சூழலுக்கு பின்பு கடந்த ஏப்ரல் மாதம் ஏர் இந்தியாவை விற்பனை செய்யும் முயற்சியை மத்திய அரசு தீவிரப்படுத்தியது. ஏர் இந்தியா நிறுவனத்தை ரூ.18 ஆயிரம் கோடிக்கு டாடா சன்ஸ் துணை நிறுவனமான தலேஸ் பிரைவேட் லிமிடெட் வாங்கும் என அறிவித்தது. இதன்படி, கடந்த ஜனவரி 27 ஆம் தேதியன்று ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கியது.
இந்நிலையில் நட்டத்தில் உள்ள ஏர் இந்தியாவை லாபத்தில் இயக்க பல்வேறு நடவடிக்கைகளையும் அந்நிறுவனம் எடுத்துவருகிறது. முதலில் உணவுத் தரத்தை மேம்படுத்தியது. தற்போது நேர மேலாண்மைக்கு புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இதன் நிமித்தமாக ஒரு சுற்றறிக்கையை ஏர் இந்தியா நிறுவனம் அனுப்பியது.
அதில், ஏர் இந்தியா விமான சிப்பந்திகள் பணியின்போது குறைவான நகைகளை அணிய வேண்டும். இதனால் சுங்கத்துறை சோதனையில் நேரம் குறையும். அதேபோல், சிப்பந்திகள் தங்களின் இமிக்ரேஷன் நடவடிக்கைகளை முடித்த பின்னர் ட்யூட்டி ஃப்ரீ கடைகளில் எவ்வித பொருட்களையும் வாங்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விமானப் பயணங்களில் நேர மேலாண்மை மிகவும் முக்கியம். ஆன் டைம் பெர்ஃபார்மன்ஸ் எனப்படும் விமானங்கள் புறப்படும், ஓரிடத்திற்கு வந்துசேரும் நேரத்தை பயண அட்டவணையில் குறிப்பிட்டுள்ளதுபோல் துல்லியமாகப் பின்பற்றும் வகையில் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன.
விமான ஊழியர்கள் சீருடை விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். குறைந்த நகைகள் அதில் முதலிடம் பெறுகிறது. இமிக்ரேஷன் நடவடிக்கைகள் முடிந்த பின்னர் ட்யூட்டி ஃப்ரீ ஷாப்களில் பர்சேஸ் கூடாது என்பது இரண்டாவது விதிமுறை. அதேபோல் விமானத்தில் ஏறிய பின்னர் ஊழியர்கள் பிபிஇ கிட்களை அணிய வேண்டும். அதற்கும் குறைவான நேரத்தையே செலவிட வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை ஏர் இந்தியா நிறுவனத்தின் இன்ஃப்ளைட் சர்வீசஸ் நிர்வாக இயக்குநர் வசுந்தா சந்தனா இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
ஏர் இந்தியாவுக்கு புதிய சிஇஓ:
இதற்கிடையில், டாடா நிறுவனத்தின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அந்தக் கூட்டம் ஏர் இந்தியாவின் புதிய தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநரை தேர்ந்தெடுக்க நடைபெற்றது. அதில் ஏர் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரியாக இல்கர் அய்சியை நிர்வாகிகள் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.