இந்த 8 வங்கிகளின் காசோலை இனி செல்லாது
ஏப்ரல் 1 முதல் வாடிக்கையாளர்களின் காசோலைகள் மற்றும் வங்கி புத்தகங்கள் செல்லாதென 8 வங்கிகள் கூட்டாக அறிவித்துள்ளன.
பொதுத்துறை வங்கிகளின் இணைப்பு காரணமாக வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியான அறிவிப்பு ஒன்றை 8 வங்கிகள் அறிவித்துள்ளன. இதன்படி ஏப்ரல் 1 முதல் சம்மந்தப்பட்ட வங்கிகளின் காசோலைகள் மற்றும் வங்கி புத்தகங்கள் வழக்கத்தில் இருக்காதென அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ், யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, அலகாபாத் வங்கி, தேனா வங்கி, விஜயா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திர வங்கி ஆகிய வங்கிகள் இதைக் கூட்டாக அறிவித்துள்ளன.
மேலும் இந்த வங்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ள பிற வங்கிகளின் காசோலைகளும் இனி செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் குறித்து வங்கிகளின் சார்பில் அவற்றின் வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் எம்.ஐ.சி.ஆர் குறியீடு, ஐ.எஃப்.எஸ்.சி குறியீடு போன்றவைகளும் இனி வரும் காலங்களில் செல்லுபடியாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 7 வங்கிகள் எந்த வங்கியுடன் சேர்க்கப்படுகிறார்களோ அதன் எம்ஐசிஆர் குறியீடு, ஐஎப்எஸ்சி குறியீடு போன்றவற்றை வாடிக்கையாளர்கள் இனி பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிண்டிகேட் வங்கி, இதற்கான கெடுவை ஜூன் 30 வரை நீட்டுத்துள்ளதாக வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.