Sony Zee Merger: இணையும் இரு பெரு நிறுவனங்கள் - புதிய சிக்கல் என்ன?
தற்போது இந்தியாவில் டிஸ்னி+ஹாட் ஸ்டார் முக்கியமான ஓடிடியாக இருக்கிறது. 3.9 கோடி சந்தாதார்கள் உள்ளனர். ஆனால் சோனிக்கு 68 லட்சம் மற்றும் ஜீ5-க்கு 50 லட்சம் சந்தாதார்கள் உள்ளனர்.
இணையும் இரு பெரு நிறுவனங்கள்
மீடியா துறையில் கடந்த வாரம் மிகப்பெரிய மாற்றம் நடந்தது. ஜீ குழுமம் மற்றும் சோனி குழுமம் ஆகிய இரு நிறுவனங்களும் கடந்த புதன் கிழமை இணைவதாக அறிவித்தன. இந்திய சாட்டிலைட் துறையின் முன்னோடி என்றால் ஜீ குழுமம்தான். ஆனால் கடன் பிரச்சினையால் நிறுவனத்தில் உள்ள பங்குகளை விற்க வேண்டிய சூழல் இருந்தது. 2019-ம் ஆண்டு முதல் இந்த சிக்கல் இருந்தது. அப்போதே சோனி குழுமத்துடன் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அப்போது சந்தை மதிப்பில் உள்ள வேறுபாடுகள் காரணமாக அந்த பேச்சு வார்த்தை தொடரமுடியவில்லை. அதனால் ஜீ குழுமத்தில் கணிசமான பங்குகளை இன்வெஸ்கோ நிறுவனத்திடம் விற்றது.
ஜீ குழுமத்துடான பேச்சுவார்த்தை முறிந்த நிலையில் ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த வயாகாம் நிறுவனத்தை வாங்குவதற்கு 2019-ம் ஆண்டே சோனி முடிவு செய்தது. ஆனால் அந்த இணைப்பும் நடக்கவில்லை.
இந்த சூழலில் கடந்த செவ்வாய் அன்று இரவு நடந்த இயக்குநர் குழு கூட்டத்தில் சோனி குழுமமும் ஜீ குழுமம் ஆகிய இரு நிறுவனங்களும் இணைவதாக முடிவெடுத்திருக்கின்றன. இனி இரு குழுமமும் ஒரே நிறுவனமாக செயல்படும் இணைக்கப்பட்ட நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக அடுத்த ஐந்தாண்டுகளுக்கு புனீத் கோயங்கா செயல்பாடுவார் என அறிவிக்கபப்ட்டிருக்கிறது.
இணைக்கப்பட்ட நிறுவனத்தில் சோனி குழுமத்துக்கு 53 சதவீதமும் ஜீ குழும பங்குதாரர்களுக்கு( பட்டியலிடப்பட்ட குழுமம் என்பதால் பல முதலீட்டாளர்கள் உள்ளனர்) 47 சதவீத பங்குகளும் இருக்கும்.
சந்தை மதிப்பு அடிப்படையில் ஜீ குழுமத்துக்கு அதிக சதவீத பங்குகள் வர வேண்டும் என்றாலும் இணைக்கப்பட்ட நிறுவனத்தில் 157 கோடி டாலர் தொகையை சோனி முதலீடு செய்ய இருப்பதால் இணைக்கப்பட்ட நிறுவனத்தில் அதிக பங்குகள் ஒதுக்கப்படுகிறது. மேலும் கூடுதல் இயக்குநர்கள் நியமனம் செய்வதற்கும் சோனிக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.
சிறப்பான இணைப்பு
இரு நிறுவனங்களுக்கும் தனித்தனியான சிறப்புகள் உள்ளன. ஹிந்தி ஜெனரல் எண்டர்டெயிண்ட் துறையில் (ஜிஇசி) சோனி பலமாக இருக்கிறது. இது தவிர ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கும் இருக்கிறது. அதேபோல திரைப்பட உரிமைகள் மற்றும் மாநில மொழிகளில் ஜீ பலமாக இருக்கிறது. இந்த இரு குழுமங்களும் இணையும்போது பெரிய குழுமமாக மாறும் என சந்தை வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இரு குழுமங்களும் இணையும்போது 75 சானல்கள், இரு ஓடிடி( சோனி லிவ் மற்றும் ஜீ5 ) இரண்டு திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் ( ஜீ ஸ்டூடியோ மற்றும் சோனி பிக்சர்ஸ்) என மிகப்பெரிய குழுமமாக மாறும். தவிர டிஜிட்டல் கண்டெண்ட் ஸ்டூடியோ நிறுவனமாக ஸ்டுடியோ என்.எக்ஸ்.டியும் இருக்கும்.
தற்போது இந்தியாவில் டிஸ்னி+ஹாட் ஸ்டார் முக்கியமான ஓடிடியாக இருக்கிறது. 3.9 கோடி சந்தாதார்கள் உள்ளனர். ஆனால் சோனிக்கு 68 லட்சம் மற்றும் ஜீ5-க்கு 50 லட்சம் சந்தாதார்கள் உள்ளனர். இந்த இணைப்பு மூலம் மீடியா துறையில் முக்கியமான நிறுவனமாக சோனி ஜீ இருக்கும்.
இரு நிறுவனங்களின் இணைப்புக்கு பிறகான வருமானம் 13600 கோடியாக இருக்கும். பணியாளர்களின் எண்ணிக்கை 4000-க்கும் மேல் இருக்கும் என தெரிகிறது.
மீண்டும் ஸ்போர்ட்ஸ்
சோனி குழுமம் ஏற்கெனவே டென் ஸ்போர்ட்ஸ் குழுமத்தை நடத்தி வந்தது. ஆனால் 2016-ம் ஆண்டு சோனி குழுமம் விளையாட்டு பிரிவை மட்டும் வாங்கி சோனி டென் என பெயர் மாற்றம் செய்தது. தற்போது 10 விளையாட்டு சானல்கள் உள்ளன. சமீபத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் விளையாட்டு சானலை தொடங்கியது. தற்போது ஸ்போட்ர்ஸ் பிரிவில் ஸ்டார்ட் ஸ்போர்ட்ஸ் அசைக்க முடியாத இடத்தில் இருந்தாலும் இரு நிறுவனங்களும் இணைவதால் சரியான போட்டியாக `சோனி – ஜி’ இருக்க முடியும்.
புதிய சிக்கல் என்ன?
ஜீ நிறுவனர் மீடியா தொழில் இருந்தவர்கள். புதிய நிறுவனத்தில் அவர்களுக்கான பங்கு மிகவும் குறைவாக இருக்கிறது. ஆனால் அவர்கள் அனுபவம் மிக்கவர்கள் என்பதால் போட்டியாக நிறுவனம் தொடங்குவார்கள். போட்டி நிறுவனம் தொடங்க கூடாது என்பதற்காக (non-compete fee) ஆக 2 சதவீத பங்குகள் வழங்குவதாக சோனி அறிவித்திருக்கிறது. இதன் மூலம் ஜீ குழும நிறுவனர் சுபாஷ் சந்திரா குடும்பத்தின் வசம் உள்ள பங்குகள் 4 சதவீதமாக இருக்கும். வரும் காலத்தில் இதனை அதிகபட்சம் 20 சதவீதம் வரை உயர்த்திக்கொள்வதற்கு சோனி அனுமதி அளித்திருக்கிறது.
இந்த இடத்தில்தான் புதிய சிக்கல் உருவாகி இருக்கிறது. கடன் சிக்கல் காரணமாக சுபாஷ் சந்திரா ஜீ குழும பங்குகளை விற்றார். தற்போது ஜீ குழுமத்தில் 17.88 சதவீத பங்குகள் இன்வெஸ்கோ இன்னும் முதலீட்டு நிறுவனம் வசம் உள்ளது.
இந்த சூழலில் ஜீ குழுமத்தில் உள்ள ஒரு பங்குதாரர்களுக்கு ( சுபாஷ் சந்திரா) கூடுதல் முக்கியத்துவத்தை சோனி கொடுப்பதால் இன்வெஸ்கோ அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. ஆகஸ்ட் மாத இறுதியில் 171 ரூபாயில் இருந்த இந்த பங்கு வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் முடிவில் 319 ரூபாயில் முடிவடைந்தது. உச்சபட்சமாக ரூ.349 வரை சென்றது. கடந்த சில ஆண்டுகளாக சரிவில் இருந்த இந்த பங்குகள் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் உற்சாகத்தில் இருந்தாலும் இன்வெஸ்கோ இந்த இணைப்பை தடுத்துவிடுமோ என்னும் அச்சமும் எழுந்திருக்கிறது.