உணவுப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்வு... காரணம் ஏன்? தமிழகத்தின் நிலை என்ன?
எளிமையாக கூற வேண்டுமானால், பணவீக்கம் என்பது கிடைக்கபெறும் பணத்துடன் ஒப்பிடும்போது காலப்போக்கில் ஏற்படும் விலை உயர்வு.
நாட்டின் சில்லறை பணவீக்கம் தொடர்ந்து மூன்று மாதங்களாக குறைந்து வந்த நிலையில், இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அது 7 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
எளிமையாக கூற வேண்டுமானால், பணவீக்கம் என்பது கிடைக்கபெறும் பணத்துடன் ஒப்பிடும்போது காலப்போக்கில் ஏற்படும் விலை உயர்வு. இன்னும், புரியும்படி சொல்ல வேண்டுமானால், ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொண்டு பல ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் வாங்கிய ஒரு பொருளை இப்போது நீங்கள் வாங்கும் போது அதன் விலை அதிகரித்திருக்கலாம்.
உணவு சில்லறை பணவீக்கம் அதிகரித்திருப்பதன் விளைவாகவே நாட்டின் சில்லறை பணவீக்கமும் உயர்ந்துள்ளது. அதாவது, விலைவாசி அதிகரித்துள்ளது. ஜூலை மாதம், உணவு பண வீக்கம் 6.7 விழுக்காடாக குறைந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் இது 7.6 விழுக்காடாக மீண்டும் உயர்ந்தது. தானியங்களின் விலை 9.5 விழுக்காடாக உயர்ந்ததால் இதன் எதிரொலியாக உணவு பணவீக்கம் உயர்ந்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதத்தை அடுத்து தானியங்களின் விலை பெரும் உயர்வதை சந்தித்துள்ளது.
ஒட்டுமொத்த உணவுப் பணவீக்கம் அதிகமாக இருந்தாலும், பெரிய மாநிலங்களில் வேறுபாடு காணப்பட்டன. குறிப்பாக, தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களில் இந்தப் போக்குக் குறைக்கப்பட்டு ஆகஸ்ட் மாதத்தில் உணவுப் பணவீக்கம் மிகக் குறைந்த அளவில் பதிவாகியுள்ளன.
சில்லறை உணவுப் பணவீக்கத்தை பொறுத்தவரை, பெரிய மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் பட்டியலில் கீழே இருந்தன. இந்த நான்கு மாநிலங்களில், ஆகஸ்ட் மாத உணவுப் பணவீக்கமானது 5 விழுக்காடு அல்லது குறைவாக இருந்தது. தெலுங்கானாவிலும் உணவுப் பணவீக்கம் தேசிய சராசரியை விட (6%) குறைவாக பதிவாகியுள்ளது.
இதற்கு மாறாக, ஆகஸ்ட் மாதத்தில் 10% சில்லறை உணவுப் பணவீக்கத்துடன் மேற்கு மாநிலங்களான குஜராத் (11.5%) மற்றும் ராஜஸ்தான் (10.4%) ஆகியவை பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. உணவுப் பணவீக்கம் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ள மாநிலங்களில் மேற்கு வங்கம் (10.3%), உத்தரப்பிரதேசம் (9.2%), மகாராஷ்டிரா மற்றும் உத்தரகண்ட் (8.5%) ஆகியவை அடங்கும்.
ஒட்டுமொத்த சில்லறை பணவீக்கம், 2022 ஏப்ரலில் 7.79% ஆக உயர்ந்த பிறகு, தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு குறைந்தது. ஆனால், ஆகஸ்ட் 2022 இல் சில்லறை பணவீக்கம் 7% ஐ தொட்டதன் மூலம் இந்த போக்கு தலைகீழாக மாறியது. உணவு மற்றும் பானங்களின் சில்லறை பணவீக்கம், 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு 2022 ஏப்ரலில் 8.1% ஆக அதிகரித்த பிறகு, தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு குறைந்தது. ஆனால், சில்லறை பணவீக்கத்தைப் போலவே, இங்கேயும் ஆகஸ்ட் மாதத்தில் போக்கு மீண்டும் மாறியது.
உள்ளூர் விலை உயர்வு காரணமாக, உடைந்த அரிசியின் ஏற்றுமதிக்கு அரசு செப்டம்பர் 9 ஆம் தேதி தடை விதித்தது. பல்வேறு தர அரிசிகளுக்கு 20% ஏற்றுமதி வரியை கட்டாயமாக்கியது. மே மாதத்தின் நடுப்பகுதியில் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்ட பிறகு, இந்திய கோதுமை மாவுக்கான தேவை அதிகரித்தது, உள்ளூர் விலைகளை உயர்த்தியது. எனவே, ஆகஸ்ட் மாத இறுதியில், கோதுமை மாவுக்கும் கட்டுப்பாடுகள் விதித்து, விலையைக் கட்டுப்படுத்தியது.
இறைச்சி, மீன், மற்றும் காய்கறிகளின் விலையே பெரிய அளவில் உணவு பணவீக்கத்தை தீர்மானிக்கிறது. கேரளாவை தவிர, மற்ற தென் மாநிலங்கள் அனைத்தும் குறைந்த சில்லறை பணவீக்கத்தை பதிவு செய்துள்ளன.
இதுகுறித்து மாநில திட்டக் குழுவின் துணை தலைவர் ஜெயரஞ்சன் கூறுகையில், "தமிழ்நாட்டில் வலுவான பொது விநியோக திட்டத்தால் உணவு பொருள்களின் விலை கட்டுக்குள் உள்ளது" என்றார்.