காகிதம் விலை டன்னுக்கு ரூ.10 ஆயிரம் உயர்வு
காகிதம் விலை டன்னுக்கு ரூ.10 ஆயிரம் விலை உயர்ந்ததை தொடர்ந்து ஆப்செட் பிரிண்டர்ஸ் உரிமையாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
காகிதம் உற்பத்தி செய்யும் ஆலைகள் முன்னறிவிப்பின்றி 40 சதவீதம் வரை காகித விலையை உயர்த்தியுள்ளனர். முன்பு ஊரடங்கின் போது 20 சதவீதம் விலை குறைப்பு செய்த காகித ஆலைகள் மூலப்பொருட்கள் இறக்குமதி தடையை காரணம் காட்டி தற்போது 40 சதவீதத்திற்கு விலையை அதிகரித்துள்ளனர். இறக்குமதி நிறுத்தம் காரணமாக குறைந்த அளவிலான காகிதங்களே விற்பனைக்கு வருவதால் ‛டிமாண்ட்’ அதிகரித்து விலை உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 15 முதல் படிப்படியாக உயர்த்தப்பட்ட காகித விலை தற்போது உச்சத்திற்கு சென்றுள்ளது. ரூ.27 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட நியூஸ் பிரிண்ட், தற்போது 38 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 26 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட கிராப்ட் பேப்பர் தற்போது 36 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 42 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட ‛டூ பிளஸ் 4’ பேப்பர் தற்போது 52 ஆயிரம் ரூபாய்க்கும், 65 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட மேப் லித்தோ 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
அதிக பட்சமாக 52 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட ஹார்ட் பேப்பர் தற்போது 99 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வை கண்டித்து சேலம் ஆப்செட் பிரிண்டர்ஸ் கூட்டமைப்பு சார்பில் நேற்று கறுப்பு நாள் அனுசரிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து அதிகரித்து வரும் காகித விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என பிரிண்டர்ஸ் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.