KPN Farm Fresh: தள்ளுவண்டியில் தொடங்கப்பட்ட கோவை பழமுதிர் நிலையம்.. ரூ.900 கோடி மதிப்பு.. வெஸ்ட் பிரிட்ஜ் கொடுத்த எண்ட்ரி
தள்ளுவண்டி கடையில் வியாபாரத்தை தொடங்கி 900 கோடி ரூபாய் அளவிலான சந்தை மதிப்பை எட்டிய கோவை பழமுதிர் நிலையத்தின் வரலாற்றை இந்த தொகுப்பில் அறியலாம்.
தள்ளுவண்டி கடையில் வியாபாரத்தை தொடங்கி 900 கோடி ரூபாய் அளவிலான சந்தை மதிப்பை எட்டிய கோவை பழமுதிர் நிலையத்தின் வரலாற்றை இந்த தொகுப்பில் அறியலாம்.
தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் இன்று பழங்கள் மற்றும் காய்கறி வியாபாரத்தை ஆக்கிரமித்து இருக்கும், கோவை பழமுதிர் நிலையம் ஆரம்பகாலத்தில் ஒரு தள்ளுவண்டி கடையாக தான் தனது பயணத்தை தொடங்கியது. தற்போது ஆண்டிற்கு 400 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டும் அந்த நிறுவனத்தில், வெஸ்ட் பிரிட்ஜ் எனும் ஒரு பெரும் நிறுவனம் முதலீடுகளை குவித்துள்ளது.
கோவை பழமுதிர் நிலையம்:
ஒரு குடும்பத்தால் உருவாக்கப்பட்ட வியாபாரம் எப்படி பெரு நிறுவனமாக , மாறக்கூடும் என்பதற்கு கோவை பழமுதிர் நிலையம் (KPN Farm Fresh) ஒரு சிறந்த உதாரணமாகும். 1965-ல் கோவையை சேர்ந்த சகோதரர்களால் வெறும் 300 ரூபாய் முதலீட்டில், தள்ளுவண்டியில் வைத்து தொடங்கப்பட்டது தான் இந்த பழ மற்றும் காய்கறி வியாபாரம். பழமுதிர் நிலையம் எனும் பெயரில் முதலில் காய்கறி கடை தொடங்கப்பட்டது. தந்தை உயிரிழந்த பிறகு குடும்பத்தின் நிதிநிலையை சமாளிப்பதற்காக பள்ளிப்படிப்பை பாதியில் துறந்து, நடராஜன் என்பவர் தனது மூத்த சகோதரர் சின்னசாமி உடன் சேர்ந்து இந்த கடையை தொடங்கினார்.
விற்பனையில் புது முயற்சி:
விற்பனையில் நியாயமான மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விலைகள் என்ற கருத்தை அறிமுகப்படுத்தினர். அதோடு, டசன்களுக்கு என்பதற்கு பதிலாக எடை அடிப்படையில் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் சந்தையில் புரட்சியை ஏற்படுத்தினார்கள். ஆனாலும், ஒரு கட்டத்தில் அவர்களது வியாபாரம் சரிவடையவே, கூடுதலாக பழச்சாறு விற்பனையை தொடங்கினார். அது நல்ல வரவேற்பை பெறத்தொடங்கியதும் பழங்களை மொத்தமாக வாங்கி, சில்லறை விற்பனையில் ஈடுபட்டனர். இதனால், வியாபாரம் பன்மடங்கு பெருகியது.
தமிழ்நாடு முழுவதும் கிளைகள்:
சந்தையில் கிடைத்த பெரும் வெற்றியை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் கோவை பழமுதிர் நிலையம் தனது கிளைகளை திறக்க தொடங்கியது. அதனடிப்படையில், கோவை பழமுதிர் நிலையம் கடந்த 2012-ல் கேபிஎன் பார்ம் பிரஷ் என்ற பெயரில் அது நிறுவனமாக்கப்பட்டது. தற்போது அதன் ஆண்டு வருவாய் ரூ.400 கோடி ஆகும். தற்போது அந்த நிறுவனத்தை நடராஜனின் மகன் செந்தில் என்பவர் நிர்வகித்து வருகிறார்.
வெஸ்ட் பிரிட்ஜ் நிறுவனம்:
இந்ந நிலையில் தான் கோவை பழமுதிர் நிலையத்தில் வெஸ்ட் பிரிட்ஜ் எனும் நிறுவனம் முதலீடுகளை குவித்துள்ளது. இதுதொடர்பான தகவலின் படி, கோவை பழமுதிர் நிலையத்தின் 70 சதவீத பங்குகளை ரூ.600 கோடி மதிப்பில் முதலீட்டு நிறுவனமான வெஸ்ட்பிரிட்ஜ் கேபிடல் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரம், தற்போதைய நிர்வாக இயக்குநர் செந்தில் நடராஜனே தொடர்ந்து நிறுவனத்தை நிர்வகிப்பார் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
யார் இந்த வெஸ்ட் பிரிட்ஜ் நிறுவனம்:
வெஸ்ட்பிரிட்ஜ் கேபிடல் என்பது ஒரு அனுபவமிக்க முதலீட்டு நிறுவனமாகும். தனது மூலதனம் மற்றும் அனுபவம் இரண்டையும் பயன்படுத்தி நிறுவனங்கள் வெற்றிபெற உதவுகிறது. இந்தியாவில் 2.5 பில்லியன் டாலருக்கும் அதிகமான மூலதனத்தை கொண்டுள்ளது. பிரிட்டானியா, ஆக்ஸிக் பேங்க், சியட், காஃபி டே, ஈக்விட்டாஸ் பேங்க், காக்னிசெண்ட், ஃப்ளிப்கார்ட், க்ரீன்லம், க்ரீன்ப்ளே, ஹேவல்ஸ், இண்டியா மார்ட், இண்டிகோ, கஜாரியா, டிவிஎஸ், ரேபிடோ, வாசன் ஹெல்த்கேர், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ், ஷாதி டாட் காம் உள்ளிட்ட 120-க்கும் அதிகமான நிறுவனங்களில் வெஸ்ட்பிரிட்ஜ் கேபிடல் முதலீடு செய்துள்ளது. தற்போது அந்த நிறுவனத்தின் முதலீட்டின் மூலம், கோவை பழமுதிர் நிலையம், தென் இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் தனது கிளைகளை திறக்க உள்ளதாக கூறப்படுகிறது.