பி. ஓபுல் ரெட்டி நூற்றாண்டு விழா: சிறப்பு தபால் தலை வெளியிட்ட இந்திய அஞ்சல் துறை
மறைந்த தொழிலதிபர் ஓபுல் ரெட்டியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்திய அஞ்சல்துறை சிறப்பு தபால் தலை வெளியிட்டுள்ளது.

தென்னிந்தியாவின் மிகவும் மதிப்பிற்குரிய தொழிலதிபர், வள்ளல் மற்றும் இந்தியப் பாரம்பரியக் கலைகளின் புரவலராகத் திகழ்ந்த பொட்டிப்பட்டி ஓபுல் ரெட்டியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், இந்திய அஞ்சல் துறை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நினைவு ‘மை ஸ்டாம்ப்’ அஞ்சல் தலையை வெளியிட்டது.
ஓபுல் ரெட்டிக்கு அஞ்சல் தலை:
சென்னையில் நடைபெற்ற சிறப்பு நூற்றாண்டு விழாவில், அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவருமான பத்ம விபூஷன் டாக்டர் பிரதாப் சி. ரெட்டி முன்னிலையில், சென்னை அஞ்சல் சேவைகள் இயக்குநர் மேஜர் மனோஜ் எம். இந்தத் தபால்தலையை வெளியிட்டார்.
பி. ஓபுல் ரெட்டி, மகத்தான தொழில்துறை சாதனையாளர். அவர் ஒரு தொலைநோக்குச் சிந்தனை கொண்ட தொழில்துறையின் ஜாம்பவான் ஆவார். 1972-ல் ஜப்பானின் மட்சுஷிடா (பானாசோனிக்) நிறுவனத்துடனான இவரது முன்னோடித்துவமிக்க கூட்டு செயல்பாடு, ‘இந்தோ நேஷனல் லிமிடெட்’ (நிப்போ பேட்டரிஸ்) நிறுவனம் உருவாக வழிவகுத்தது.
நிப்போ:
இவரது தலைமையின் கீழ், நிப்போ இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய ‘டிரை-செல்’ ப்ராண்ட்களில் ஒன்றாக உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது. 'நிப்போ ஹைப்பர்' மற்றும் 'நிப்போ ஸ்பெஷல்' போன்ற புதுமையான தயாரிப்புகளை இவர் இந்தியாவில் முதன்முறையாக அறிமுகப்படுத்தினார்.
தொலைதூரத்தில் உள்ள கிராமப்புற மக்களும் எளிதில் வாங்கும் விலையில் தயாரிப்புகளை வழங்கினார். இது அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியது. இன்று வருடத்திற்கு சுமார் 80 கோடிப் பேட்டரிகளை உற்பத்தி செய்யும் இந்நிறுவனம், இந்தியாவின் இரண்டாவது பெரிய உலர்-மின்கல உற்பத்தியாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
டாக்டர் பிரதாப் சி. ரெட்டி புகழாரம்:
அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டி பேசும்போது, "ஸ்ரீ பி. ஓபுல் ரெட்டி தொழில்துறையில் முன்னோடித்துவமிக்க தொலைநோக்கு, எல்லோரிடத்திலும் அன்பு காட்டும் மனிதநேயம் மற்றும் ஆழ்ந்த கலாச்சார ஈடுபாடு ஆகியவற்றின் அரிய கலவையாகத் திகழ்ந்தார்.
தொழில் ரீதியாக, அப்போலோ மருத்துவமனையின் ஆரம்ப கால இயக்குநர்களில் ஒருவராக அவர் எங்களுடன் கைக்கோர்த்து நின்றார். எங்களது நோக்கத்தின் மீதான அவரது நம்பிக்கை மற்றும் ஊக்கம், அவரளித்த ஆலோசனைகள் வெறும் கற்பனைக்கும் அப்பாற்பட்டவை. அப்போலோ மருத்துவமனையின் பயணத்தை வடிவமைப்பதில் அவரது ஆதரவு என்றும் வரலாற்றில் நினைவுகூரப்படும்.
தனிப்பட்ட முறையில், அவரது அன்பும் கனிவும் என்னை நெகிழச் செய்துள்ளன. நிறுவனங்களைத் தாண்டிய நட்புறவை எங்கள் குடும்பங்கள் பகிர்ந்து கொண்டன. வாழ்க்கையின் முக்கிய மைல்கற்களில் அவர் எங்களுடன் நின்ற அந்த அருமையான நாட்களை நான் என்றென்றும் மறக்க மாட்டேன். இந்தோ நேஷனல் கூட்டுமுயற்சியில் அவர் ஆற்றிய பணியையும், நேர்மையையும், நோக்கத்தையும் முன்னிறுத்தினால் இந்தியத் தொழில் துறை எதைச் சாதிக்க முடியும் என்பதைக் காட்டியுள்ளது.
அவரது ஈகைக் குணம், கர்நாடக இசையின் மீதான அவரது பற்று போன்ற குணங்கள் சமூகத்திற்குத் திருப்பிக் கொடுப்பதில் அவருக்கிருந்த ஈடுபாட்டைப் பிரதிபலிக்கின்றன. இந்த நூற்றாண்டு விழா அவரை நாம் மனதார நினைவு கூரும் தருணமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், அவர் அழகாக வெளிப்படுத்திய மதிப்புகளின்படி வாழ வேண்டும் என்பதற்கான ஒரு புதிய அழைப்பாகும். இவ்வாறு அவர் பேசினார்.
சமூக சேவை மற்றும் கலை ஆர்வம்:
ஸ்ரீ ஓபுல் ரெட்டி தொழில்துறையைத் தாண்டி, எளிமை, நேர்மை மற்றும் சேவை மனப்பான்மைக்கு பெயர் பெற்றவர். கல்வி, முதியோர் பராமரிப்பு, சுகாதாரம் மற்றும் சமூக நலன் ஆகியவற்றிற்கு அவர் எந்தவிதமான விளம்பரமும் இல்லாமல் அமைதியாக ஆற்றிய பங்களிப்புகள் சமூக அடித்தளத்தை வலுப்படுத்தின.
கர்நாடக இசையின் மீது அவருக்கு ஆழ்ந்த ஈடுபாடு இருந்தது. தியாகராஜ சுவாமிகளின் தீவிர பக்தரான இவர், அவரது பாரம்பரியத்தைப் பாதுகாக்கப் பாடுபட்டார். 'ஸ்ரீ தியாகராஜ சேவா சமிதி'யை நிறுவியதோடு, இசைக்கலைஞர்கள் மற்றும் சபாக்களுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து கலாச்சாரம் அடுத்த தலைமுறைகளுக்கும் தொடரச் செய்தார்.
தொழில், சமூக மேம்பாடு மற்றும் கலை ஆகிய துறைகளில் ஓபுல் ரெட்டி பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் நடைபெறும் ஓராண்டு கால நூற்றாண்டு கொண்டாட்டங்களின் முக்கிய நிகழ்வாக இந்த ‘மை ஸ்டாம்ப்’ வெளியீடு அமைந்தது. அவரது அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நடைபெற்ற இவ்விழாவில் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அப்போலோ மருத்துவமனை பற்றி:
1983 -ல் டாக்டர் பிரதாப் சி ரெட்டி சென்னையில் முதல் அப்போலோ மருத்துவமனையைத் [Apollo Hospitals Enterprise Ltd. (Apollo)] தொடங்கியதன் மூலம், இந்திய மருத்துவ உலகில் அப்போலோ ஒரு மிகப் பெரிய மருத்துவப் புரட்சியை ஏற்படுத்தியது. இன்று இந்தியாவின் மிகவும் நம்பகமான ஒருங்கிணைந்த மருத்துவ நல குழுமமாக திகழும் அப்போலோ மருத்துவமனைகள், 10,400-க்கும் அதிகமான படுக்கை வசதிகளுடன், 74 மருத்துவமனைகள், 6,600-க்கும் அதிகமான மருந்தகங்கள், 264--க்கும் அதிகமான கிளினிக்குகள், 2,182 பரிசோதனை மையங்கள் மற்றும் 800-க்கும் அதிகமான டெலி மெடிசின் மையங்கள் என இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மருத்துவ சேவை வழங்கும் நிறுவனமாக அப்போலோ முன்னணியில் உள்ளது.
3,00,000க்கும் அதிகமான அஞ்சியோப்ளாஸ்ட்களும், 2,00,000க்கும் அதிகமான இதய அறுவைச் சிகிச்சைகளையும் செய்திருப்பதன் மூலம் உலகின் முன்னணி இதய நோய் சிகிச்சை மையமாக முக்கியத்துவம் பெற்றிருப்பதோடு, புற்று நோய் சிகிச்சையில் உலகின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனையாகவும் திகழ்கிறது.
நவீன கால தொழில்நுட்பங்கள், மருத்துவ கருவிகள், சிகிச்சை நடைமுறைகளின் மூலம் உலகத்திலேயே சிறந்த ஆரோக்கிய சேவையை நோயாளிகள் பெறும்வண்ணம் அப்போலோ ஆராய்ச்சிகளில் தொடர்ந்து பெரும் முதலீடு செய்து வருகிறது. அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் 1,20,000 உறுப்பினர்கள் நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சைகளைத் தந்து வருகின்றனர்.






















