Hero Electric Vehicles: எலெக்ட்ரிக் வாகனத்துக்கு ஹீரோ பெயரை பயன்படுத்த முடியாது - ஏன் தெரியுமா?
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதால் பெயரை யார் பயன்படுத்துவது என்பதில் போட்டி உருவாகி இருக்கிறது.
எலெக்ட்ரிக் வாகனத்துக்கு ஹீரோ பெயரை பயன்படுத்த முடியாது. இதனால் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்துக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஹீரோ பெயரை ஏன் பயன்படுத்த முடியாது என்று பார்ப்பதற்கு முன்பு குடும்ப நிலவரத்தை புரிந்துகொண்டால்தான் இந்த சிக்கல் புரியும். ஹீரோ குழுமம் சுதந்திரத்துக்கு முன்பு தொடங்கப்பட்ட குழுமம். ஆரம்பத்தில் சைக்கிள் விற்பனை செய்த நிறுவனம் பிறகு இரு சக்கர வாகன விற்பனையை தொடங்கினார்கள்.
தற்போது ஹீரோவில் நாம் பயன்படுத்தும் ஐசிஇ வாகனங்கள் அனைத்தும் ஹீரோ மோட்டோ கார்ப் என்னும் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை முஞ்சால் குடும்பத்தை சேர்ந்த பவன் முஞ்சால் நடத்தி வருகிறார்.
இதே குழுமத்தில் ஹீரோ எலெக்ட்ரிக் என்னும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை மற்றொரு குடும்ப உறுப்பினரான நவீன் முஞ்சால் நடத்திவருகிறார்.
தற்போது ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம், இ-வாகன சந்தையில் பெரும் சந்தையை கைவசம் (42%) வைத்திருக்கிறது. 13 புராடக்ட்கள் உள்ளன. தவிர அடுத்த சில ஆண்டுகளில் ரூ.700 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்ய இருக்கிறது. தற்போது ஆண்டுக்கு 75,000 வாகனங்கள் உற்பத்தி செய்யும் சூழலில் இன்னும் சில ஆண்டுகளில் 10 லட்சம் வாகனங்களை தயாரிக்க இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது.
ஆனால் இந்த நிலையில் சகோதர நிறுவனமான ஹீரோமோட்டோ கார்ப் நிறுவனமும் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் ஈடுபட திட்டமிட்டிருக்கிறது. அதுவும் ஹீரோ என்னும் பெயரில். இந்த செய்தி வெளியானவுடன் தற்போது ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் நவீன் முஞ்சால், ஹீரோ எனும் பெயரை பயன்படுத்த முடியாது என தெரிவித்திருக்கிறார்.
குழும நிறுவனங்கள் போட்டி நிறுவனங்களின் தொழிலில் ஈடுபட கூடாது என எந்த ஒப்பந்தமும் இல்லை. ஆனால் ஹீரோ என்னும் பெயரை பயன்படுத்த கூடாது என்னும் விதி இருக்கிறது என நவீன் தெரிவித்திருக்கிறார்.
2010-ம் ஆண்டு குழுமத்தின் முறையான பங்கு பிரிப்பு நடந்தது. அப்போது எலெக்ட்ரிக் வாகன பிரிவு முழுவதும் எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. green technologyக்கு சர்வதேச அனுமதி எங்கள் குழுமத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 2007-ம் ஆண்டு முதல் ஹீரோ எலெக்ட்ரிக் என்னும் நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்த பிரிவு எங்களிடம் இருப்பதால் ஹீரோ மோட்டோ கார்ப் தயாரிக்கும் இரு சக்கர, மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஹீரோ என்னும் பெயரை பயன்படுத்த கூடாது.
விதிமுறைகளில் எந்த குழப்பமும் இல்லை. இப்படி ஒரு விதி இருக்கிறது என்பது ஹீரோமோட்டோ கார்ப் நிறுவனத்துக்கும் தெரியும். விதிகளை மீறும்போது சட்ட நடவடிக்கை எடுப்பதை தவிர வேறு வழியில்லை. என நவீன் தெரிவித்திருக்கிறார்.
வேகம் எடுக்கும் எலெக்ட்ரிக் சந்தை
தற்போது எலெட்க்ரிக் வாகன சந்தை பரபரப்பாகி இருக்கிறது. ஓலா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனத்துக்கான முன்பதிவை தொடங்கி இருக்கிறது. ஒரு லட்சத்துக்கு மேலான வாடிக்கையாளர்கள் இந்த வாகனத்துக்கு பணம் செலுத்தி இருக்கிறார்கள். இதுதவிர டிவிஎஸ் மற்றும் பஜாஜ் ஆகிய நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் ஈடுபட தயாராகி வருகின்றன.
இது தவிர ஏதெர் எனர்ஜி என்னும் எலெக்ட்ரிக் வாகன நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்த நிறுவனத்தில் 35 சதவீத பங்குகளை ஹீரோமோட்டோ கார்ப் வைத்திருக்கிறது. இந்த நிலையில் ஹீரோமோட்டோ கார்ப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனம் 2022-ம் ஆண்டின் முதல் காலாண்டில் வெளியாகும் என நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தார். இதற்காக தைவான் நிறுவனத்துடன் ஹீரோமோட்டோ கார்ப் ஒப்பந்தம் போட்டிருக்கிறது.
கடந்த ஜனவரியில் 10 கோடி வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்திருந்தது ஹீரோமோட்டோ கார்ப். 10 கோடி வாகனம் என்னும் இலக்கை அடைய 37 ஆண்டுகாலம் ஆனது. ஆனால் அடுத்த பத்து கோடி வாகனங்களை அடுத்த பத்தாண்டுகளில் அடைய வேண்டும் என பவன் முஞ்சால் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது எலெக்ட்ரிக் வாகன பிரிவில் ஏற்பட்டிருக்கும் உற்சாகம் காரணமாக ஐசிஇ வாகனங்கள் மூலமாக மட்டுமே இந்த இலக்கை எட்ட முடியாது. அதற்கு எலெக்ட்ரிக் வாகனங்களின் பங்களிப்பும் தேவை என்பதால் இந்த பிரிவில் களம் இறங்க ஹீரோமோட்டோ கார்ப் திட்டமிட்டிருக்கிறது.
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதால் பெயரை யார் பயன்படுத்துவது என்பதில் போட்டி உருவாகி இருக்கிறது. திடீரென எலெக்ட்ரிக் வாகனங்கள் முக்கியத்துவம் பெறுவதற்கு பெட்ரோல் விலையும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது!