Gold rate today: தங்கம் சவரனுக்கு 5,280 ரூபாய் குறைந்தது.! 4 நாட்களில் தலைகீழ் மாற்றம் - சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் நகை பிரியர்கள்
Gold rate today: தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், கடந்த 4 நாட்களில் அதிரடியாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக நகைப்பிரியர்கள் குஷியில் உள்ளனர்.

தங்கத்தின் மீது இந்திய மக்களின் ஆர்வம்
தங்கநகைகளை மீது இந்திய மக்கள் அதீத ஆர்வம் கொண்டுள்ளனர். இதன் காரணமாகவே தங்க நகைகளின் விலை கூடினாலும் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக திருமண நிகழ்வுகள், விஷேச நாட்களில் தங்கத்திற்கு அதிக அளவு முக்கியத்துவம் இந்தியாவில் கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் தான் தங்கத்தின் விலையானது கடந்த ஒரு வருடத்தில் புதியபுதிய உச்சத்தை தொட்டது. கடந்த 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் 59ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான தங்கம் தற்போது ஒரு லட்சம் ரூபாயை எட்டியுள்ளது. இதன் காரணமாக நடுத்தர வர்க்கமக்களால் தங்க நகைகளை வாங்குவதை நினைத்து கூட பார்க்க முடியாத நிலை உருவானது.
4 நாட்களாக சரியும் தங்கம் விலை
இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக தங்கத்தின் விலையானது சரிந்து வருகிறது. இதன் படி கடந்த 29ஆம் தேதி தங்கம் கிராம் ஒன்றுக்கு 80 ரூபாய் குறைந்து 13ஆயிரத்து 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரனுக்கு 640 ரூபாயும் குறைந்தது ஒரு லட்சத்து 4ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த 30ஆம் தேதி ஒரு கிராமுக்கு அதிரடியாக 420 ரூபாயும், சவரனுக்கு 3360 ரூபாய் குறைந்தது. இதன் படி ஒரு கிராம் 12ஆயிரத்து 600 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31ஆம் தேதி தங்கத்தின் விலை இரண்டு முறை சரிந்தது. ஒரு கிராமுக்கு 120 ரூபாய் குறைந்து 12ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 960 ரூபாய் குறைந்து மீண்டும் ஒரு லட்சத்திற்க்கு கீழ் வந்த தங்கம் சவரனுக்கு 99ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையானது.
4 நாட்களில் 5,280 ரூபாய் குறைந்த தங்கம் விலை
இந்த நிலையில் நகைப்பிரியர்களுக்கு ஆண்டின் தொடக்கமே குஷியாக அமைந்துள்ளது. அந்த வகையில் இன்றும் 4வது நாளாக தங்கத்தின் விலை குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 12ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 99ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 4 நாட்களில் 5280 ரூபாய் தங்கம் விலை குறைந்திருப்பதால் நகைப்பிரியர்கள் நகைக்கடைகளை நோக்கி படையெடுக்க தொங்கியுள்ளனர். தற்போது குறைந்து வரும் தங்கத்தின் விலையானது எப்போது வேண்டும் ஏன்றாலும் ஏறும் என நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.





















