Gold hall marking: இன்று முதல் அமலுக்கு வரும் ஹால் மார்கிங்; தங்கப் பிரியர்கள் கட்டாயம் இதை படிங்க!
இன்று முதல் ஹால் மார்கிங் செய்த தங்க ஆபாரணங்களை மட்டும் விற்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.ஹால் மார்கிங் என்றால் என்ன? அதனால் வாடிக்கையாளர்களுக்கு என்ன பயன் என்பதை விரிவாக பார்க்கலாம்.
இந்திய மக்கள் நல்ல முதலீடாக பார்த்து வருவது தங்க நகைகள் தான். ஏனென்றால், மக்கள் தங்களின் சேமிப்பை பெரும்பாலும் வங்கியில் போடுவதற்கு பதிலாக தங்க நகைகளை வாங்கியே சேர்ப்பார்கள். அத்துடன் தங்க நகைகள் நமக்கு எப்போதும் நல்ல வருவாயை தரும். கடன் தொல்லை என்றால் அதை அடகு வைத்து கடனை செலுத்தலாம். மேலும் மற்ற பிரச்னை என்றால் உடனே அதை விற்றும் கூட தங்களது பிரச்னையை சரி செய்து கொள்வார்கள். இதன் காரணமாக இந்தியாவில் அதிகளவில் தங்க நகை வாங்கப்படுகின்றன.
இந்நிலையில் தங்க நகை விற்பனைக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதன்படி கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தங்க நகைகள் விற்பனைக்கு ஹால் மார்க்கிங் வரும் ஜனவரி 1 2021 முதல் கட்டாயம் என்று தெரிவித்திருந்தது. ஆனால் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் அந்த காலக் கெடுவை ஜூன் 1ஆக மாற்றியது. எனினும் அதிலிருந்தும் ஒரு 15 நாட்கள் விலக்கு அளித்தது. இந்தச் சூழலில் அந்தப் புதிய உத்தரவு இன்று முதல் அமலுக்கு வர உள்ளது.
இது தொடர்பாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் உணவுத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், "தங்க விற்பனைக்கு ஹால் மார்க்கிங் கட்டாயம் என்ற நடைமுறை இன்று முதல் படிப்படியாக அமல்படுத்தப்படும். வரும் ஆகஸ்ட் மாதம் வரை ஹால் மார்க்கிங் இல்லாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படாது. அதற்கு பின் கண்டிபாக ஹால் மார்க்கிங் இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
ஹால் மார்க்கிங் என்றால் என்ன?
தங்க ஹால் மார்க்கிங் என்பது தங்கத்தின் தரம் மற்றும் சுத்தத்தை ஆய்வு செய்து தரப்படும் மதிப்பீடு ஆகும். தற்போது வரை இந்தியாவில் தங்கத்திற்கு ஹால் மார்க்கிங் வாங்குவது கட்டாயம் இல்லை. இதனால் பலர் அதிக கலப்படும் செய்து தங்க நகைகளை விற்று வந்தனர். மேலும் இந்தியாவில் விற்கப்பட்டு வந்த 60 சதவிகித தங்க நகைகள் ஹால் மார்க்கிங் இல்லாமல் விற்கப்பட்டு வந்தது. அத்துடன் இந்தியாவில் இருக்கும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட நகை கடைகளில் வெறும் 35,879 நகை கடைகள் மட்டும் ஹால் மார்க்கிங் பெற்று தங்கத்தை விற்று வருவதாக உலக தங்க கவுன்சிலின் தரவுகள் தெரிவிக்கின்றன.
புதிய உத்தரவால் என்ன பயன்?
மத்திய அரசின் புதிய உத்தரவு காரணமாக தங்க நகை கடைகள் இனி ஹால் மார்க்கிங் பெற்று 14 கேரட், 18 கேரட் மற்றும் 22 கேரட் தங்கத்தை மட்டுமே விற்பனை செய்ய முடியும். இதன் மூலம் கலப்படம் செய்யப்படுவதிலிருந்து வாடிக்கையாளர்கள் காப்பாற்ற படுவார்கள். தங்க நகைகளுக்கு பிஐஎஸ் ஹால் மார்க்கிங் 2000ஆம் ஆண்டு முதல் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஹால் மார்க்கிங் பெற இனி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆகஸ்ட் மாதத்திற்கு இந்தியாவில் உள்ள அனைத்து கடைகளும் ஹால் மார்க்கிங் செய்த தங்கத்தை விற்க வேண்டும். இந்தியாவில் உள்ள பரிசோதனை மையங்கள் எண்ணிக்கையை வைத்து பார்த்தால் ஒரு ஆண்டிற்கு சராசரியாக 14 லட்சம் தங்க நகைகள் வரை சோதனை செய்து ஹால் மார்க்கிங் தர முடியும்.
மேலும் படிக்க: அம்பானிக்கு சவால் விடும் அதானி.. கோடிகளை குவிப்பது எப்படி?