”கிரெடிட் கார்ட் வழங்குபவர்கள் வாடிக்கையாளர்களை துன்புறுத்த கூடாது “ - RBI இன் அதிரடி ரூல்ஸ்!
கிரெடிட் கார்ட் வழங்குதல் மற்றும் அதனை மேம்படுத்துதல் இந்த இரண்டுமே வாடிக்கையாளர்களின் விருப்பம் இல்லாமல் செய்தல் கூடாது.
கிரெடிட் கார்ட் வினியோகிப்பது மற்றும் நிலுவை தொகை வசூலிப்பது தொடர்பாக ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது.
அவசர தேவைக்காக பணம் வேண்டும் என விரும்பும் நபர்கள், எந்தவொரு புரிதலும் இல்லாம கிரெடிட் கார்டை வாங்கி , பணத்தை உரிய நேரத்தில் செலுத்தாமல் சிக்கிக்கொள்கின்றனர். வங்கிகளும் கிரெடிட் கார்டை வழங்குவதற்கு முன்னதாக அதன் சாதக பாதங்கள் குறித்து விளக்க தவறிவிடுகின்றனர். இது பலருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக மாறிவிடுகிறது. இதனை தடுக்கும் விதமாகத்தான் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா , வங்கிகள் மற்றும் நிலுவை தொகையை வசூலிக்கு இடைத்தரகர்களுக்கு புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. அவற்றை கீழே காணலாம்.
கிரெடிட் கார்டு வழங்குபவர்கள் மற்றும் மூன்றாம் தரப்பு முகவர்கள் நிலுவைத் தொகையை வசூலிக்கும்போது வாடிக்கையாளர்களை மிரட்டுவது அல்லது துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது. குறிப்பாக இடையில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் உள்ளிட்டவர்களை நாடுவது தனியுரிமையை பகிரங்கமாக அவமானப்படுத்தும் செயலாகும். எனவே முறையான வழியை பின்பற்ற வேண்டும்.
கிரெடிட் கார்ட் கார்டுக்கான விண்ணப்பத்துடன் வட்டி விகிதம், கட்டணம் , நிலுவை தொகையை செலுத்தும் இறுதி தேதி குறித்த தெளிவான தகவல்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை இணைத்து கொடுக்க வேண்டும்.
வாடிக்கையாளர்கள் விரும்பி கிரெடிட் கார்டிற்கு விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவர்களது விண்ணப்பம்
நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணம் என்னவென்று எழுத்துபூர்வமாக கிரெடிட் கார்டு வழங்குபவர்கள் தெரிவிக்க வேண்டும்.
கிரெடிட் கார்ட் வழங்குதல் மற்றும் அதனை மேம்படுத்துதல் இந்த இரண்டுமே வாடிக்கையாளர்களில் விருப்பம் இல்லாமல் செய்தல் கூடாது.
கார்ட் கேட்காமல் வழங்கப்பட்டால், அது முறையாக வாடிக்கையாளர்களின் இல்லத்திற்கு செல்வதற்கு முன்னதாகவே பயன்படுத்தப்பட்டால் அதன் முழு பொறுப்பையும் கார்ட் வழங்கும் நிறுவனங்கள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். அட்டை வழங்குபவர் கட்டணத்தைத் திரும்ப பெற்றுக்கொண்டு, பில் தொகையை விட இரு மடங்கு அபராதம் செலுத்த வேண்டும்.
வருமானத்திற்கு ஏற்ற கடன் தொகையை மட்டுமே , வங்கி மேலாளரின் கண்காணிப்பின் அடிப்படையில் வழங்க வேண்டுமே தவிர அளவுக்கு மீறிய தொகைய வழங்க கூடாது.
கார்டுகள் வழங்கப்பட்டதற்கான ஒப்புதல் மறைமுகமானதாக இல்லாமல் வெளிப்டையானதாக இருக்க வேண்டும். கார்டு பெறுபவரிடம் எழுத்து பூர்வமாக ஒப்புதல் வாங்க வேண்டும்.
டெலிகாம் ரெகுலேட்டரி அத்தாரிட்டி ஆஃப் இந்தியா அடிக்கடி வழங்கும் வழிகாட்டு நெறிமுறைகளை கார்டு வழங்குபவர்கள் பின்பற்ற வேண்டும்.
வழங்கப்படும் கிரெடிட் கார்டுகள் தொலைந்துபோனாலோ அல்லது அந்த கார்டை திருடி மோசடி செய்தாலோ அதனால் ஏற்படும் இழப்பை சரிசெய்ய இழப்பீட்டு தொகை வழங்குவது குறித்து அலோசனை செய்யுங்கள். இது முற்றிலும் வாடிக்கையாளர்களின் விருப்பத்தின் பேரில் இருக்க வேண்டும்” உள்ளிட்ட பல புதிய விதிகளை ஆர்.பி.ஐ விதித்துள்ளது.