Bank Working days: வாரத்திற்கு இனி 5 நாள் மட்டும்தான் வங்கி செயல்படுமா..? விரைவில் அறிவிப்பு வருகிறதா?
இனி வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும் என்ற அறிவிப்பு விரைவில் வரலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
Bank Working days: இனி வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும் என்ற அறிவிப்பு விரைவில் வரலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
வங்கி சேவை:
தொழில் நிறுவனங்கள், வர்த்தகர்கள், அரசு கருவூலங்கள் மற்றும் பொதுமக்களின் தினசரி பணப் பரிவர்த்தனைக்கு வங்கிகள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. ஒரு நாள் வங்கிக்கு விடுமுறை விடப்பட்டாலே பணப் பரிவர்த்தனை, காசோலை சேவைகள் பாதிக்கப்படுகின்றன. அத்துடன் மறுநாள் அனைத்து வங்கிகளிலும் கூட்டம் அலைமோதும்.
இந்நிலையில், வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை, 2 நாட்கள் விடுமுறை என்பது வங்கி ஊழியர்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையாக இருந்து வருகிறது. இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு, இனி வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும் என்ற அறிவிப்பு விரைவில் வரலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
எப்போது அமல்?
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமை விடுமுறை என அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும் என்றது ஊழியர்களின் தொடர் கோரிக்கையாக இருந்தது. கோரிக்கை குறித்து மத்திய அரசும் பரிசீலனையும் செய்து வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் ஜூலை 28ஆம் தேதி அன்று நடைபெற்ற இந்திய வங்கிகள் சங்கத்தின் (ஐபிஏ) கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனை இந்திய வங்கிகள் சங்கம், நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளது. வங்கிச் சங்கத்தின் இந்த கோரிக்கையில் எவ்வித சிக்கலும் இல்லையென்றால் மத்திய நிதி அமைச்சகம் இதற்கான ஒப்புதலை அளிக்கும். மத்திய நிதி அமைச்சகமும் ஒப்புதல் அளித்தால், வங்கிகள் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே செயல்படும்.
வேலை நேரம் அதிகமா?
ஆனால் அதே நேரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரையிலான வேலை நேரத்தில் மாற்றம் இருக்கும் என்றும் ஒவ்வொரு நாளும் சுமார் 40 நிமிடங்கள் வரை அதிக வேலை நேரமாக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை தற்போதுள்ள வேலை நேரத்தில் இருந்து 40 நிமிடங்கள் நேரம் அதிகமாக்கி, அதற்கு பதிலாக அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறையாக்கும் திட்டம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எந்தெந்த வங்கிகளுக்கு விடுமுறை?
பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், உள்ளூர் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்திற்கும் சனிக்கிழமை விடுமுறை பொருந்தும் என்று கூறப்படுகிறது. அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு பொது விடுமுறை என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற தகவல் வங்கி ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க