Yamaha Electric R3: யமஹா எலெக்ட்ரிக் பைக்கில் இடம்பெற உள்ள உயிர் காக்கும் புதிய அம்சம்..! இதை படிங்க முதல்ல..
யமஹா நிறுவனம் தனது பைக்குகளில் புதிய மேம்படுத்தப்பட்ட மோட்டார்சைக்கிள் ஸ்டேபிலிட்டி அசிஸ்ட் சிஸ்டம் எனும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
மோட்டார்சைக்கிள்கள் இளைஞர்களின் இன்றியமையா ஒரு அங்கமாக மாறியுள்ளது. அடிப்படை விலை முதற்கொண்டு சொகுசு விலை வரையில் பல்வேறு நிறுவனங்கள் தங்களது, மோட்டார் சைக்கிள் மாடலை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகின்றன. அவற்றை இளைஞர்கள் ஆர்வமுடன் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். அதேநேரம் இந்தியாவில் நேரும் விபத்துகளில் மோட்டர் சைக்கிளில் ஏற்படும் விபத்துகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 70 சதவிகித மோட்டார் சைக்கிள் விபத்துகள் வெறும் இரண்டே விநாடிகளில் நடைபெறுகின்றன எனவும் சில தரவுகள் தெரிவிக்கின்றன. இதற்காக தான், ஆட்டோமொபைல் நிறுவனங்களும், பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், அவ்வப்போது தங்களது வாகனங்களில் பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகின்றன.
புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் யமஹா:
அந்த வரிசையில் தான், ஜப்பானை சேர்ந்த யமஹா நிறுவனம் இருசக்கர வாகன பாதுகாப்பை கருத்தில் கொண்டு புது தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. AMSAS என அழைக்கப்படும் அட்வான்ஸ்டு மோட்டார்சைக்கிள் ஸ்டேபிலிட்டி அசிஸ்ட் சிஸ்டம் எனும் இந்த தொழில்நுட்பம் யமஹா பைக்கின் எலெக்ட்ரிக் R3 பைக்கில் சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. புதிய எலெக்ட்ரிக் R3 மாடலின் தோற்றம் அதன் பெட்ரோல் மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், முன்புற சக்கரம் மற்றும் ஸ்டீரிங் ஹெட் உள்ளிட்டவைகளில் இரண்டு மோட்டார்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இவற்றில் உள்ள ஆக்டுவேட்டர்கள் வாகனம் கீழே விழாமல் இருக்க வலது, இடது, முன்புறம் மற்றும் பின்புறம் என எந்த பக்கம் சாய வேண்டும் என்ற தகவலை மோட்டார்சைக்கிளுக்கு வழங்குகிறது.
யமஹா நிறுவனத்தின் புதிய முயற்சி:
முன்னதாக 2015 மோட்டோபாட் மற்றும் 2017 மோட்டோராய்டு நிகழ்வுகளில் இந்த தொழில்நுட்பம் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால், இதுபோன்று மேம்பட்ட தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வது யமஹா நிறுவனத்திற்கு இதுவே முதல் முறை ஆகும். இதில் உள்ள AMSAS பைக்கை பேலன்ஸ் செய்து அதிகபட்சம் மணிக்கு 5 கிலோமீட்டர் வேகம் வரை நிலையாக வைத்துக் கொள்கிறது. இதில் 6-ஆக்சிஸ் இனர்ஷியல் மெஷர்மெண்ட் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால், தற்போது வரை இந்த AMSAS தொழில்நுட்பம் அதன் தொடக்க சோதனை கட்டத்திலேயே உள்ளது.
புதிய அம்சத்தின் பயன் என்ன?
வாடிக்கையாளர்கள் குறைந்த வேகத்தில் வாகனத்தை செலுத்தும்போது நிலை தடுமாறி கீழே விழுவதை தடுக்கும் நோக்கில், இந்த புதிய தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைந்த வேகத்தில் வாகனத்தை செலுத்தும்போது வாகன ஓட்டி கையை கொண்டு கட்டுப்படுத்தாவிட்டாலும், புதிய தொழில்நுட்பம் வாகனத்தை நிலையாக செலுத்த உதவும். நொடி நேரங்களில் ஏற்படக்கூடிய பல விபத்துகள் புதிய AMSAS தொழில்நுட்பம் மூலம் தவிர்க்கப்படும் என யமஹா நிறுவனம் தெரிவித்துள்ளது
அனுபவம் வாய்ந்த வாகன ஓட்டிகளுக்கு இது அநாவசியாமாக கருதப்பட்டாலும், தொடக்க கால ஓட்டுனர்களுக்கு இது உதவிகரமான அம்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, யமஹா மட்டுமின்றி ஹோண்டா நிறுவனமும் பாதுகாப்பை வழங்கும் சிஸ்டம்களை உருவாக்கி வருகிறது. ஹோண்டா நிறுவனம் செமி ஆட்டோனோமஸ் ரைடிங் மற்றும் ஏர்பேக் சிஸ்டம்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.