TVS Apache rtr 310: புத்தாண்டு ஸ்பெஷல்: புதிய அப்பாச்சி ஆர்.டி.ஆர் 310 மாடலை வெளியிடும் டிவிஎஸ்?
டிவிஎஸ் நிறுவனம் ஜனவரி மாத இறுதிக்குள் இந்தியாவில் புதிய அப்பாச்சி ஆர்டிஆர் 310 மாடலை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய இருசக்கர வாகன ஆட்டோமொபைல் சந்தையில், டிவிஎஸ் நிறுவனம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை உணர்ந்து, புதுப்புது மாடல் வாகனங்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தான் கடந்த 2017ம் ஆண்டு டிவிஎஸ் நிறுவனம், அப்பாச்சி ஆர்ஆர் 310 மாடலை கடந்த 2017ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் அதன் மேம்படுத்தப்பட்ட ஸ்ட்ரீட் ஃபைட்டர் வெர்ஷனாக அப்பாச்சி ஆர்டிஆர் 310 மடலாக இந்த மாத இறுதியில் சந்தைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய மாடல், BMW G 310 R-ஐ தழுவி உருவாக்கப்பட்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடிவமைப்பு:
ஆர்டிஆர் 310 இன் ஸ்டைலிங் 2014ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்ட டிரேகன் கான்செப்ட்டை அடிப்படையாக கொண்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே, முன்பக்கத்தில் ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கான முகப்பு விளக்குகளுடன் கூடிய ஆக்ரோஷமான தோற்றம் கொண்ட இந்த நேக்ட் வெர்ஷன் மோட்டார் சைக்கிளில், ஒரு குறுகிய வால் பகுதி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஜின் விவரங்கள்
RTR 310 மோட்டர் சைக்கிளில் BMW G 310 R-ல் இடம்பெற்றுள்ள அதே, 313cc ஒற்றை சிலிண்டர் இன்ஜின் பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது 33.5 BHP மற்றும் 27.3 Nm திறனை வெளிப்படுத்தும். அதோடு, ஸ்லிப்பர் கிளட்ச் வழியாக 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், டிவிஎஸ் இன்ஜின் ஒரு சிறந்த இடைப்பட்ட கிராண்டிற்கு மாற்றியமைக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த பைக் ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சமாக 158 கி.மீ. வேகத்தில் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதர விவரங்கள்:
அம்சங்கள் மற்றும் உபகரணங்களைப் பொறுத்தவரை, புதிய மாடல் RR 310 இன் செங்குத்து கருவி கன்சோலைப் பெறாமல் போகலாம். அதற்கு பதிலாக, RTR 310 ஆனது புளூடூத் இணைப்பை வழங்கும் கிடைமட்ட TFT திரையைப் பெறலாம். அதோடு, அப்சைடு டவுன் ஃபோர்க்குகள், பிரீ-லோட் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷன், டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளிட்டவை ஸ்டாண்டர்டு அம்சங்களாக வழங்கப்பட வாய்ப்புள்ளது.
விலை விவரங்கள்:
புதிய டிவிஎஸ் அப்பாச்சி RTR 310 மாடலின் விலை RR 310-ஐ விட ரூ. 15 ஆயிரத்தில் இருந்து ரூ. 20 ஆயிரம் வரை குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. அதன்படி, அப்பாச்சி RTR 310 விலை ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம், என நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
BMW - டிவிஎஸ் திட்டம்:
கடந்த சில மாதங்களுக்கு முன் அப்பாச்சி RR 310 மாடலை சார்ந்து உருவாக்கப்பட்ட G310 RR பைக்கை பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்தது. ஜெர்மனியை சேர்ந்த பிஎம்பிள்யூ நிறுவனத்திற்கு அதிக விற்பனையை ஈட்டித் தரும் மாடலாக RR-310 சார்ந்த பிஎம்பிள்யூ G310 RR உள்ளது. இந்தியா மட்டுமின்றி சர்வதேச சந்தைக்கும் இந்த மோட்டார்சைக்கிள் ஓசூரில் உள்ள டிவிஎஸ் உற்பத்தி ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் தான், பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனத்தின் G310 R மாடலை தழுவி டிவிஎஸ்ஸின் புதிய அப்பாச்சி RTR 310 மாடல் மோட்டார்சைக்கிள் உருவாக்கப்பட்டுள்ளது.