225 கீமி ரேஞ்ச்.. மணிக்கு 125 கி.மீ வேகம்! மலிவு விலையில் மின்சார கார் கனவு இருக்கா? அப்போ இந்த காரை பாருங்க
Renault Kwid EV: பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட், தனது பிரபலமான க்விட் காரின் முழுமையான மின்சார மாடலை இந்திய சந்தைக்கு கொண்டு வர தயாராகி வருகிறது

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் தனது முழு மின்சார காரான க்விட்டின் சோதனை ஓட்டத்தை தொடங்கிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதன் காரில் என்னென்ன அம்சங்கள் வர என்னென்ன வாய்ப்புள்ளது என்பதை காணலாம்.
ரெனால்ட் நிறுவனம்:
பிரெஞ்சு கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட், தனது பிரபலமான க்விட் காரின் முழுமையான மின்சார மாடலை இந்திய சந்தைக்கு கொண்டு வர தயாராகி வருகிறது. இதற்கான சோதனை ஓட்டம் சமீபத்தில் இந்திய சாலைகளில் நடைபெற தொடங்கியுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் பேட்டரி மூலம் இயக்கப்படும் தனது முதல் காரை அறிமுகப்படுத்தும் தயாரிப்பாளராகவும், உலகளவில் மலிவு விலையில் கிடைக்கும் EV காராகவும் க்விட் EV களம் காண இருக்கிறது.
ஐரோப்பாவில் டேசியா ஸ்பிரிங்... இந்தியாவில் க்விட் EV!:
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்திய முன்மாதிரியின் மேம்பட்ட வடிவமாகவே க்விட் EV உருவாகிறது. ஐரோப்பிய சந்தையில் ‘டேசியா ஸ்பிரிங் EV’ என பெயரிட்டு விற்பனை செய்யப்படும் மாடலின் அடிப்படையிலேயே இந்தியா சந்தைக்கு க்விட் EV வடிவமைக்கப்பட்டுள்ளது.
எப்படி இருக்கும் க்விட் EV?
முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டம் செய்யப்படும் ரெனால்ட் க்விட் EV, வெளியே பார்க்கும்போது பெட்ரோல் இயங்கும் க்விட் காரை ஒத்த தோற்றத்துடன் காணப்பட்டது. ஆனால், சில முக்கியமான மாற்றங்கள் தெளிவாக கவனிக்கப்பட்டன. இந்த மின்சார மாடலில் ரைட் உயரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் சக்கரங்களுக்கு இடையிலான இடைவெளி பெரிதாக காணப்படுகிறது. பின்புறம் மற்றும் பக்கவாட்டுப் பகுதிகளை மட்டுமே , முன்புற வடிவமைப்பு மற்றும் உள்ளமைப்புகள் இன்னும் தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், ஐரோப்பிய சந்தையில் விற்பனை செய்யப்படும் டேசியா ஸ்பிரிங் EV-வில் இடம்பெறும் 10-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் 7-இன்ச் டிஜிட்டல் கிளஸ்டர் போன்ற அம்சங்கள் இந்தியா மாடலிலும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பிலும் புதிய மாற்றங்கள்..
- கார் பாதுகாப்பு அம்சங்களில் எந்த ஒரு இழப்பும் இல்லாமல்:
- ஆறு ஏர்பேக்குகள்
- ABS
- ESC (மின்னணு நிலைத்தன்மை கட்டுப்பாடு)
- TPMS (டயர் அழுத்த கண்காணிப்பு முறை)
- ISOFIX சீட் மவுண்ட்
- அவசர கால அழைப்பு வசதி ஆகியவை வழங்கப்படலாம்.
பவர்டிரெயின் மற்றும் ரேஞ்ச் விவரம்:
ஐரோப்பிய ஸ்பெக் மாடலின் பவர்டிரெயின் இருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்:
- 26.8 kWh பேட்டரி
- 33 kW முன்சக்கர இயக்கும் மோட்டார்
- 225 கிமீ வரை ஓட்டக்கூடிய ரேஞ்ச்
- அதிகபட்ச வேகம் 125 கிமீ / மணிக்கு
0-100 கிமீ வேகத்தை 19.2 வினாடிகளில் எட்டக்கூடியதாக இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன. மேலும் 30 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மூலம், 20% முதல் 80% வரை சார்ஜ் செய்ய 45 நிமிடங்கள் மட்டுமே தேவைப்படும்.
விற்பனை எப்போது?
ரெனால்ட் நிறுவனம் இதற்கான வெளியீட்டு தேதியை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், சோதனை ஓட்டம் தீவிரமடைந்துள்ளதால், 2025 இறுதிக்குள் க்விட் EV இந்தியாவில் அறிமுகமாகும் எனத் தெரிகிறது.
க்விட்டின் மின்சார மாறுபாடு முதன்முதலில் சீனாவில் 2019 இல் ரெனால்ட் சிட்டி K-ZE என அறிமுகப்படுத்தப்பட்டது. இது 2021 இல் டேசியா ஸ்பிரிங் EV என்ற பெயரில் ஐரோப்பிய அறிமுகமானது. லத்தீன் அமெரிக்காவில், இது ரெனால்ட் க்விட் E-டெக் எலக்ட்ரிக் என சந்தைப்படுத்தப்படுகிறது.






















