Renault Kwid EV: ரெனால்டின் குட்டிப்பையன்.. மின்சார எடிஷனில் க்விட் - ப்ரீமியம் அம்சங்கள் நிறைந்த அர்பன் ஹேட்ச்
Renault Kwid EV: ரெனால்ட் நிறுவனம் தனது சிறிய ஹேட்ச்பேக் ஆன க்விட் கார் மாடலை, மின்சார எடிஷனில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Renault Kwid EV: நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்ற ரெனால்ட் க்விட் மின்சார எடிஷன், 180 கிமீ ரேஞ்ச் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெனால்ட் க்விட் மின்சார எடிஷன்:
ரெனால்ட் நிறுவனம் தனது முற்றிலும் புதிய மின்சார எடிஷனான க்விட் கார் மாடலை, E-Tech என்ற பேட்ஜுடன் பிரேசிலில் அறிமுகப்படுத்தியுள்ளது. நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்ற இந்த சிறிய ஹேட்ச்பேக்கானது, அதன் நடைமுறைத்தன்மை, எளிய அணுகல் ஆகியவற்றிற்காக மிகவும் அறியப்பட்டது. தற்போது பேட்டரி அடிப்படையில் இயங்குவதாக மாற்றம் கண்டு இருப்பது, வளர்ந்து வரும் மின்சார கார்களுக்கான சந்தையான இந்தியாவிற்கு சிறந்த தேர்வாக காரை மாற்றியுள்ளது.
ரெனால்ட் க்விட் EV - வெளிப்புற வடிவமைப்பு
வழக்கமான க்விட் கார் மாடலை போன்று இல்லாமல், புதிய மின்சார எடிஷனானது எதிர்கால அம்சங்கள் நிறைந்த முகப்பினை கொண்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே இருந்த ஏர் இண்டேக் க்ரில் ஆனது தற்போது சீல்ட் க்ரில்லாக மாற்றப்பட்டுள்ளது. முன்பக்கத்திலேயே சார்ஜிங் போர்ட்டும் பொருத்தப்பட்டுள்ளது.
ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகளுக்கு மேலே தனித்துவமான பகல் நேரங்களில் ஒளிரும் விளக்குகள் உள்ளன. அதே நேரத்தில் கருப்பு வீல்-ஆர்ச் கிளாடிங், எதிரெதிரான பாடி மோல்டிங்ஸ் மற்றும் 14-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் ஆகியவை காருக்கு வலுவான தோற்றத்தை அளிக்கின்றன. பின்புறத்தில் நுட்பமான "E-Tech" மற்றும் "E-Kwid" போன்ற பேட்ஜ்கள் உள்ளன. இது ஒரு பரபரப்பான தோற்றமுடைய LED டெயில் லேம்ப் கிளஸ்டர் மற்றும் ரிஃப்ளெக்டார்ஸ்களுடன் கூடிய கருப்பு பம்பரையும் கொண்டுள்ளது.
ரெனால்ட் க்விட் EV - உட்புற வசதிகள்
கேபின் மற்றும் தொழில்நுட்பம் அடிப்படையில் ரெனால்டின் க்விட் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளது. வயர்லெஸ் ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஒருங்கிணைப்புடன் கூடிய, 10.1 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமானது டேஷ்போர்டில் ஆதிக்கம் செலுத்துகிறது. இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டரானது முற்றிலும் டிஜிட்டல் மயமான 7 இன்ச் ஸ்க்ரீனை கொண்டுள்ளது.
வழக்கமான கியர் லீவர் ஆனது கன்சோலில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு சிறிய மின்-ஷிஃப்டருடன் மாற்றப்பட்டுள்ளது. மற்றபடி ஃபிளாட்-பாட்டம் மல்டிஃபங்க்ஸ்னல் ஸ்டீயரிங் வீல், இரட்டை USB டைப்-சி சார்ஜிங் போர்ட்கள், உயரத்தை சரிசெய்யக்கூடிய ஸ்டீயரிங் வீல் மற்றும் 290 லிட்டர் விசாலமான பூட்ஸ்பேஸ் ஆகியவையும் அடங்கும்.
ரெனால்ட் க்விட் EV - பாதுகாப்பு அம்சங்கள்
ரெனால்ட் நிறுவனமானது பாதுகாப்பு அம்சங்களிலும் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, 6 ஏர் பேக்குகள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ESP, ISOFIX இருக்கைகள், டயர் பிரெஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் ரியர் கேமரா ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக கூடுதலாக லேன் டிபார்ட்சுர் அலெர்ட் மற்றும் ஸ்பீட் லிமிட்டர் உள்ளிட்ட, 11 செயல்முறைகளை உள்ளடக்கிய லெவல் 1 ADAS தொழில்நுட்பமும் இணைக்கப்பட்டுள்ளது.
ரெனால்ட் க்விட் EV - பேட்டரி, ரேஞ்ச்
ரெனால்ட் க்விட் மின்சார எடிஷனானது 48 KW மின்சார மோட்டாரை இயக்கக் கூடிய, 26.8 KWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. இதன் மூலம் 64PS மற்றும் 113Nm ஆற்றலை உற்பத்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர பயன்பாட்டிற்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரானது, பூஜ்ஜியத்திலிருந்து 50 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 4.1 விநாடிகளில் எட்டும் என கூறப்படுகிறது. அதேநேரம், பூஜ்ஜியத்திலிருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 14.6 விநாடிகளில் எட்டும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 180 கிமீ ரேஞ்ச் அளிக்கும். ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 15 முதல் 80 சதவிகிதத்தினை 40 நிமிடங்களில் எட்ட முடியும்.
ரெனால்ட் க்விட் EV - விலை, இந்திய அறிமுகம்?
ரெனால்ட் க்விட் மின்சார எடிஷனானது இந்திய மதிப்பில் ரூ.16 லட்சம் என்ற விலையில், பிரேசிலில் சந்தைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த கார் விற்பனைக்கு வருமா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் தற்போது இல்லை. அதேநேரம், அடுத்த தலைமுறை டஸ்டர் மற்றும் அதன் 7 சீட்டர் எடிஷனின் அறிமுகத்தை தொடர்ந்து, ரெனால்ட் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட A-பிரிவு மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த காரானது க்விட் EVயின் வழித்தோன்றலாக இருக்கும் என கூறப்படுகிறது.




















