RE Himalayan 452: ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் 452 மோட்டார்சைக்கிள்.. 40HP ஆற்றல், கூடுதல் உயரம் & அகலம்
ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் அடுத்து மோட்டார் சைக்கிளான, ஹிமாலயன் 452 மாடல் 40 (40hp) குதிரைகளின் சக்தியை பெற்று இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் அடுத்து மோட்டார் சைக்கிளான, ஹிமாலயன் 452 மாடல் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகி வாடிக்கையாளர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
ஹிமாலயன் 452:
ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் தேவைகளை உணர்ந்து தொடர்ந்து, பல்வேறு புதிய மாடல் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்கிறது. காலத்திற்கேற்றவாறு தொடர்ந்து தன்னை அப்டேட் செய்து வருவதே, ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் வெற்றிக்கான மிகப்பெரிய காரணமாகும். அந்த வகையில், ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் அடுத்ததாக ஹிமாலயன் 452 மாடல் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்த உள்ளது. தொடக்கத்தில் இது ஹிமாஹலயன் 450 என்றே அழைக்கப்பட்டாலும், அதன் இன்ஜின் திறன் 451.65 சிசி ஆக மேம்படுத்தப்பட்டதை தொடர்ந்து, ஹிமாலயன் 452 என்ற பெயரை பெற்றுள்ளது.
40HP திறன் கொண்ட இன்ஜின்
ஹிமாலயன் 452 வாகனம் எப்போது வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லவிட்டாலும், அதுதொடர்பான தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தான், அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களின் மூலம் ராயல் என்ஃபீல்டின் ஹிமாலயன் 450 வாகனம் தொடர்பான பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஆவணங்களிலேயே இந்த வாகனம் ஹிமாலயன் 452 என்றே குறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு பெரிய தகவல் என்னவென்றால், இந்த இன்ஜின் 8,000rpm இல் 29.44kW அற்றலை உற்பத்தி செய்யும். அதாவது 40.02hp எனும் குதிரைகளின் சக்தியை உற்பத்தி செய்கிறது. தற்போது சந்தையில் உள்ள ஹிமாலயன் 411 மோட்டர்சைக்கிள் ஆனது 24.3hp அளவிலான ஆற்றலை மட்டுமே உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சுவாரஸ்யமாக அண்மையில் வெளியான புதிய ட்ரையம்ப் ஸ்பீடு 400 அதே 8,000rpm இல் இதேபோன்ற 40hp ஆற்றலை உருவாக்குகிறது.
வாகன வடிவமைப்பு:
ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் ஆவணங்களின்படி, “ஹிமாலயன் 452 மாடலானது 1,510 மிமீ வீல்பேஸைக் கொண்டிருக்கும். இது தற்போதைய ஹிமாலயன் 411 இன் 1,465 மிமீ வீல்பேஸை விட பெரிய அதிகரிப்பு ஆகும். நீளம் 2,190 மிமீ முதல் 2,245 மிமீ வரை அதிகரித்துள்ளது மற்றும் பைக்கில் விருப்பமான ஹேண்ட்கார்டுகளை நிறுவியிருந்தால் அகலமும் 840 மிமீ முதல் 852 மிமீ - 900 மிமீ வரை உயர்ந்துள்ளது. இதன் மூலம் தற்போது உள்ள மாடலை விட புதிய ஹிமாலயன் அளவில் பெரியதாக இருக்கும் என கருதபடுகிறது. தற்போது உள்ள மாடலின் எடை 199 கிலோ ஆகும். புதிய வாகனத்தின் எடை இதை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்ப்புகள் என்ன?
ட்ரையம்ப் மோட்டார் மிகவும் வலுவான மிட் ரேஞ்சைக் கொண்டுள்ளது, ஆனால் புதிய ஹிமாலயன் அதன் ஆஃப்-ரோடிங் பயணத்தில் சிறந்த அனுபவத்தை பெற சிறந்த கீழ்-இறுதி முறுக்குவிசையை ( bottom-end torque) வழங்கும் என்று தெரிகிறது. தற்போது வரை உறுதி செய்யப்படாவிட்டாலும் ட்ரையம்ப் இன்ஜின் ஒரு DOHC யூனிட் ஆக இருக்கும் என கூறப்படும் நிலையில், ராயல் என்ஃபீல்டு வால்வ் ரயிலுக்கான SOHC கட்டமைப்புடன் இணைந்திருக்க வாய்ப்புள்ளது.
எப்போது அறிமுகம்?
ஹிமாலயன் 452 மாடல் மோட்டார்சைக்கிளானது வரும் நவம்பர் மாதத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை உள்ளிட்ட விவரங்களும் அப்போது தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.