Nissan Micra EV: குட்டிப்பையன் இல்லை டீமன் - நிசான் மைக்ரா மின்சார கார் - அட்டகாசமான உட்புற, வெளிப்புற அம்சங்கள்
Nissan Micra EV: நிசான் நிறுவனத்தின் புதிய மின்சார கார் மாடலான மைக்ரானில் உள்ள, உட்புற மற்றும் வெளிப்புற அம்சங்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Nissan Micra EV: நிசான் நிறுவனத்தின் புதிய மின்சார கார் மாடலான மைக்ரான், இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை கொண்டுள்ளது.
நிசான் மைக்ரா EV:
நிசான் நிறுவனத்தால் அண்மையில் பொதுவெளியில் காட்சிப்படுத்தப்பட்ட முற்றிலும் மின்சார கார் மாடலான, மைக்ரா தொடர்பான உட்புற மற்றும் வெளிப்புற அம்சங்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஹேட்ச்பேக்கின் பவர்ட்ரெயின் தொடர்பான விவரங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. ரெனால்டின் 5 EV கார் மாடலுக்கு பயன்படுத்தப்பட்ட AmpR பிளாட்ஃபார்ம் தான், ஆறாம் தலைமுறையாக வெளிவரவுள்ள இந்த மைக்ரா காருக்கும் பயன்படுத்தப்பட உள்ளது. இன்ஜின் எடிஷனின்றி சந்தைக்கு வரும் நிசானின் முதல் ஹேட்ச்பேக் கார் மாடல் என்ற பெருமையும் மைக்ராவையே சென்றடைகிறது. நடப்பாண்டு இறுதியில் இந்த 5 சீட்டர் கார் சந்தைப்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
நிசான் மைக்ரா EV: இன்டீரியர், அம்சங்கள்
புதிய மைக்ராவின் டூயல் டோன் கேபினானது இன்ஃபோடெயின்மெண்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட்களுக்காக 10.1 இன்ச் ஸ்க்ரீன்களை கொண்டுள்ளது. செண்டர் கன்சோல்கள் ஓட்டுனருக்கு ஒட்டியபடி இருக்க, பிஷிகல் கண்ட்ரோல்கள் ஏர் வெண்ட்களுக்கு கீழே உள்ளன. அதோடு, எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், வயர்லஸ் சார்ஜிங் பேட், 48 நிறங்கள் அடங்கிய ஏம்பியண்ட் லைட்டிங் ஆகியவை உள்ளன. அதோடு புதிய தலைமுறை ஹேட்ச்பேக்கானது சில தனித்துவமான டிசைன்களையும் கொண்டுள்ளது. அதன்படி, தனித்துவமான அப்ஹோல்ஸ்ட்ரி, இருக்கைகளுக்கு இடையேயான சேமிப்பு இடத்தில் ஃபுஜி மலையை போன்ற மவுல்டல் சில்-ஹவுட்கள் இடம்பெற்றுள்ளன. 326 லிட்டர் பூட் ஸ்பேஸ் இருக்கும் என நிசான் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிசான் மைக்ரா EV: பேட்டரி, ரேஞ்ச் விவரங்கள்
புதிய மைக்ரா மின்சார காரில் இரண்டு பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்பட உள்ளன. அதன்படி, தொடக்க நிலை வேரியண்டானது 40 kWh பேட்டரி பேக்குடன் 122hp மற்றும் 225Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய மோட்டாரை கொண்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்யும்போது, 308 கிமீ ரேஞ்ச் வழங்கும் என நிசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. டாப் எண்ட் வேரியண்டானது 52kWh பேட்டரி பேக்குடன், 150hp, 245Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய மோட்டர் வழங்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்யும்போது, 408 கிமீ ரேஞ்ச் வழங்கும் என நிசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டாப் எண்ட் வேரியண்டானது 100kW DC ஃபாச்ட் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது. இதன் மூலம், வெறும் 30 நிமிடங்களில் 15 முதல் 80 சதவிகிதம் சார்ஜ் செய்ய முடியும். இரண்டு வேரியண்ட்களுமே V2L எனப்படும் வெஹைகிள் டு லோட் ஃபங்சனாலிட்டி, ஹீட் பம்ப் மற்றும் பேட்டரி டெப்ரேட்சர் கண்ட்ரோல் சிஸ்டம் ஆகிய அம்சங்களை கொண்டிருக்கும்.
நிசான் மைக்ரா EV: வெளிப்புற வடிவமைப்பு
புதிய மைக்ரா மாடலின் வெளிப்புற வடிவமைப்பில் நிசானின் 20-23 EV கான்செப்டின் தாக்கத்தை அதிகளவில் காண முடிகிறது. 4 மீட்டருக்கும் குறைவான நீளம் மற்றும் 1800 மிமீ அகலத்தில் கண்கவர் ஸ்டைலிங்கை கொண்டுள்ளது. செவ்வக வடிவிலான முகப்பு விளக்குகளை சுற்றிலும், பகல் நேரங்களிலும் ஒளிரக்கூடிய வட்டவடிவிலான விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன, கருப்பு நிற ரூஃப், செக்மெண்டட் சர்குலர் டெயில் லேம்ப்ஸ், 18 இன்ச் அலாய் வீல்கள், காலம் மவுண்டட் ரியர் டோர் ஹெண்டில்ஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது. 14 வெளிப்புற வண்ண ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. சன்ரூஃபிற்கு கருப்பு மற்றும் கிரே நிற ஆப்ஷன் வழங்கப்படுகிறது.
நிசான் மைக்ரா EV - வெளியீடு எப்போது?
ரெனால்டின் புதிய மைக்ரா மின்சார காரானது ஃப்ரான்சில் உள்ள டுவெய் தொழிற்சாலையில் தான் உற்பத்தி செய்யப்பட உள்ளது. நடப்பாண்டின் இறுதியில் இந்த கார் ஐரோப்பா நாடுகளில் சந்தைப்படுத்தப்பட உள்ளது. அதேநேரம், இந்திய சந்தையில் புதிய மைக்ரா மின்சார காரை அறிமுகம் செய்வது குறித்து நிசான் நிறுவனம் தற்போது வரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. முன்னதாக நான்காம் தலைமுறை மைக்ரா கார் மாடலானது, 2010 முதல் 2020ம் ஆண்டு வரை இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை புதிய மாடல் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டால், அது டாடா டியாகோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். இதன் விலை. இதனிடையே, இந்திய சந்தைக்கு ரெனால்ட் ட்ரைபர் அடிப்படையிலான மல்டி பேசஞ்சர் வெஹைகிளும், ரெனால்ட் டஸ்டரை அடிப்படையாக கொண்ட மிட்சைஸ் எஸ்யுவி ஆகியவற்றை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதை மட்டும் நிசான் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.





















