Destinator SUV: அட்ரா சக்க.!! 5 சீட்டர் விலையில் 7 சீட்டர் எஸ்யூவி; கெத்தாக மீண்டும் களமிறங்கிய மிட்சுபிஷி
Mitsubishi Destinator SUV: கார் மார்கெட்டை விட்டு விலகி இருந்த மிட்சுபிஷி, மீண்டும் கெத்தாக களமிறங்கியுள்ளது. 5 சீட்டரின் விலையில் 7 சீட்டர் எஸ்யூவி-யான டெஸ்டினேட்டரை அறிமுகப்படுத்தி, அசத்தியுள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த பிரபல கார் நிறுவனமான மிட்சுபிஷி, 5 சீட்டர் விலையில் ஒரு புதிய 7 சீட்டர் எஸ்யூவி-யை களமிறக்கு, கார் சந்தையை தெறிக்க விட்டுள்ளது. இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்ட மிட்சுபிஷியின் டெஸ்டினேட்டர் எஸ்யூவி குறித்து தற்போது பார்க்கலாம்.
டெஸ்டினேட்டரின் விலை என்ன.?
மிட்சுபிஷி நிறுவனம் தனது புதிய டெஸ்டினேட்டர் எஸ்யூவியை டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சினுடன் மீண்டும் களமிறங்கியுள்ளது. இந்தோனேசியாவில் வெளியிடப்பட்ட டெஸ்டினேட்டர், கம்பீரமாகத் தெரிகிறது. இது புதிய தோற்ற;ம் மற்றும் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது மற்ற எதிர்கால மிட்சுபிஷி கார்களில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக்ரோஷமாகத் தெரியும் டெஸ்டினேட்டர் 7 இருக்கைகள் கொண்ட எஸ்யூவி ஆகும். இது 20 லட்சம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இந்த விலை, 5 இருக்கைகள் கொண்ட டாப்-எண்ட் எஸ்யூவியின் விலை.
வசதிகள் என்னென்ன.?
பரிமாணங்களைப் பொறுத்தவரை, டெஸ்டினேட்டர் 4,680 மிமீ நீளம், 1,840 மிமீ அகலம், 1,780 மிமீ உயரம் மற்றும் 2,815 மிமீ வீல்பேஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது 214 மிமீ அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது. அதே நேரத்தில், 18 அங்குல அலாய் வீல்கள் இதற்கு ஒரு நல்ல தோற்றத்தைக் கொடுக்கின்றன.
உட்புறத்தில் இரட்டை மண்டல காலநிலை கட்டுப்பாடு மற்றும் 64 வண்ண சுற்றுப்புற விளக்குகள் போன்ற அட்டகாசமான அம்சங்கள் உள்ளன. 7 இருக்கைகள் கொண்ட எஸ்யூவியாக இருப்பதால், டெஸ்டினேட்டரில் போதுமான இடவசதியும் உள்ளது. மிட்சுபிஷி, இந்தியாவில் கார்களை விற்பனை செய்வதை நிறுத்திவிட்டது. மேலும், டெஸ்டினேட்டர் இந்தியாவில் செயல்பாடுகளைத் தொடங்க ஒரு சிறந்த எஸ்யூவியாக இது இருக்கலாம்.
டெஸ்டினேட்டரின் எஞ்சின்
புதிய டெஸ்டினேட்டரில், 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு MIVEC எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 120 kW சக்தி மற்றும் 250 Nm டார்க்கை வழங்குகிறது. ஸ்மூத்தான ஓட்டத்திற்கு ஏற்றவாறு ஆட்டோமேட்டிக் CVT யுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதில், 5 ட்ரைவ் மோட்-கள் உள்ளன. வெட்(ஈரம்), டார்மேக், நார்மல், க்ரேவல் மற்றும் மட்(மணல்) ஆகிய ட்ரைவ் மோட்களுடன், அனைத்து சக்கரங்களும் இயங்கும் வகையில்(All Wheel Drive) வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், எத்தகைய சாலை மற்றும் காலநிலையாக இருந்தாலும், கவலையில்லாமல் பயணிக்கலாம்.
இதில் 45 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டாங்க் கொடுக்கப்பட்டுள்ளது.
சஸ்பென்ஷன்
ஆசிய சாலைகளுக்கு ஏற்றவாறாக 214 மிமீ என்ற அதிக கிரவுண்ட் கிளியரன்சுடன், கடினமாக சாலைகளையும் எளிதாக கடக்கும் விதமாக சஸ்பென்ஷன் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறம், மேக்பெர்சன் ஸ்டர்ட் மற்றும் பின்புறம் டார்சன் பீம் கொடுக்கப்பட்டுள்ளது. முழுவதும் டிக்ஸ் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. பெரிய சக்கரங்கள், 5.4 மீட்டர் திரும்பும் ரேடியஸை வழங்குகிறது.
டெஸ்டினேட்டர் சரியான அளவு, பெட்ரோல் எஞ்சின் (ஹைபிரிட் இல்லை என்றாலும்) மற்றும் சரியான அம்சங்களைக் கொண்ட உட்புறம். மிட்சுபிஷி ஒரு காலத்தில் அதன் லான்ச்சர் மற்றும் பேஜெரோ வகைகளில் மிகவும் வெற்றிகரமாக இருந்தது.
ஆனால் அது இந்திய சந்தையின் வேகத்தைத் தக்கவைக்க முடியவில்லை, மேலும் அதன் விற்பனை மெதுவாகக் குறைந்தது. அதன் கடைசி புதிய கார் அவுட்லேண்டர் ஆகும், இது விற்பனையில் தோல்வியடைந்தது.
மறுபுறம் புதிய டெஸ்டினேட்டர் ஒரு விரும்பத்தக்க SUV ஆக இருக்கும். மேலும், இந்தியா மிகப்பெரிய வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்றாக இருப்பதால், 7 இருக்கைகள் கொண்ட SUV பிரிவில் மஹிந்திரா XUV700 மற்றும் டாடா சஃபாரி போன்ற மாடல்களுக்கு போட்டியாக இந்த மாடலை மிட்சுபிஷி களமிறக்கியுள்ளது.
32-வது பெய்கின்டோ இந்தோனேசிய சர்வதேச ஆட்டோ ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த எஸ்யூவி, கடந்த 23-ம் தேதி விற்பனைக்கு வந்துள்ளது. இந்த டெஸ்டினேட்டர் மாடல், ஆசியாவில் வியட்நாம், பிலிப்பைன்ஸ், தெற்கு அசியாவில் லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவிலும் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் உள்ள மிட்சுபிஷியின் ஆலையில் இந்த டெஸ்டினேட்டர் உற்பத்தி செய்யப்படுகிறது.





















