Mahindra XUV 3XO EV: சர்ப்ரைஸ்..! மின்சாரயமான மஹிந்த்ராவின் சப்-காம்பேக்ட் SUV - ரேஞ்ச், விலை, அம்சங்கள் வெளியீடு
Mahindra XUV 3XO EV SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மஹிந்த்ரா நிறுவனத்தின் சம்-காம்பேக்ட் எஸ்யுவி ஆன, XUV 3XO காரின் மின்சார எடிஷன் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Mahindra XUV 3XO EV SUV: மஹிந்த்ரா நிறுவனத்தின் XUV 3XO மின்சார காரின் தொடக்க விலை ரூ.13.89 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த்ராவின் XUV 3XO மின்சார எடிஷன் அறிமுகம்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தனது மின்சார பிரிவின் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தும் விதமாக, XUV 3XO காரின் மின்சார எடிஷனை மஹிந்த்ரா அறிமுகப்படுத்தியுள்ளது. இது ப்ராண்டின் நான்காவது மின்சார காராகும். AX5 மற்றும் AX7L என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த சப்-காம்பேக்ட் எஸ்யுவியின் விலை, முறையே ரூ.13.89 லட்சம் மற்றும் ரூ.14.96 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 7.2KW AC சார்ஜருக்கு கூடுதலாக 50 ஆயிரம் ரூபாய் செலவிட வேண்டும். XUV 3XO மின்சார எடிஷன் கார்களின் விநியோகம் பிப்ரவரி 23ம் தேதி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த்ராவின் XUV 3XO EV - வடிவமைப்பு விவரங்கள்
XUV 3XO மின்சார எடிஷனானது வடிவமைப்பு அடிப்படையில் அதன் இன்ஜின் எடிஷனை அப்படியே பின்தொடர்கிறது. அதேநேரம், பேட்டரி மற்றும் மின்சார மோட்டரானது XUV 400 மாடலிலிருந்து கடனாக பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய காரானது XUV 400-க்கு மாற்றாக நிலைநிறுத்தப்பட்டு, டாடாவின் நெக்ஸான் மின்சார எடிஷனுடன் நேரடியாக போட்டியிட உள்ளது.
இன்ஜின் எடிஷனிலிருந்து நேரடியாக மாற்றப்படுவதால் XUV 3XO EV ஆனது, 4.2 மீட்டர் அளவிலான XUV 400 மாடலை விட சிறியதாகும். XUV 3XO EV 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தையே கொண்டுள்ளது. எனவே இயல்பாகவே இந்த காரில் பூட் ஸ்பேஸ் XUV400 இன் 378 லிட்டரை விட குறைவாக இருக்கும். XUV 3XO EV தற்போது மஹிந்திராவின் ஒரே இன்ஜினை தழுவி உருவாக்கப்பட்டுள்ள மின்சார காராகும். மற்ற XEV 9e , XEV 9S மற்றும் BE 6 அனைத்தும் போர்ன் எலெக்ட்ரிக் எஸ்யுவிக்கள் ஆகும்.
மஹிந்த்ராவின் XUV 3XO EV: உட்புற, வெளிப்புற டிசைன்:
தோற்ற அடிப்படையில் XUV 3XO EV காரானது இன்ஜின் எடிஷனை அப்படியே குறிப்பாக RevX வேரியண்டை பிரதிபலிக்கிறது. க்ரில்லுக்கு மாதிரியான வண்ண நடைமுறை பின்பற்றப்பட்டுள்ள நிலையில், முன்புற பம்பரில் சற்றே வித்தியாசம் பின்பற்றப்படுகிறது. மற்றபடி பாடி பேனல்கள், அலாய் வீல்கள் மற்றும் லைட்டிங் சிக்னேட்சர்ஸ் ஆகியவை இன்ஜின் எடிஷனை போன்றே உள்ளன. உட்புறத்தில் டேஷ்போர்ட் லே-அவுட்டும் அப்படியே உள்ளது.
மஹிந்த்ராவின் XUV 3XO EV - அம்சங்கள்:
XUV 3XO இன்ஜின் எடிஷனில் உள்ள அம்சங்கள் அப்படியே மின்சார எடிஷனிலும் பின்தொடரப்படுகிறது. அதன்படி இந்த எஸ்யுவியில் இரண்டு 10.25 இன்ச் ஸ்க்ரீன்கள் இன்ஃபோடெயின்மெண்ட் மற்றும் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டருக்காக வழங்கப்பட்டுள்ளன. ஆன்போர்ட் நேவிகேஷன் உடன் கூடிய வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ, முற்றிலும் எல்இடி லைட்டிங், டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலெக்ட்ரானிக் பார்கிங் ப்ரேக், ஆட்டோ ஹெட்லேம்ப்ஸ் மற்றும் வைபர்ஸ், வயர்லெஸ் சார்ஜர், 6 ஏர் பேக்குகள், க்ரூஸ் கன்ட்ரோல் உடன் கூடிய ESP என பல அம்சங்கள் அடுக்கப்பட்டுள்ளன. இதுபோக, டாப் எண்ட் வேரியண்ட்களில் பனோரமிக் சன் -ரூஃப், லெதரேட் அப்ஹோல்ஸ்ட்ரி, 7 ஸ்பீக்கர் ஹர்மன் கார்டோன் ஆடியோ சிஸ்டம்,17 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் ADAS அம்சமும் இணைக்கப்பட்டுள்ளது.
மஹிந்த்ராவின் XUV 3XO பேட்டரி, பவர்ட்ரெயின்:
இந்த சப்-காம்பேக்ட் எஸ்யுவி ஆனது 39.4kWh என்ற ஒற்றை பேட்டரி ஆப்ஷனில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. ஃப்ரண்ட் எலெக்ட்ரிக் மோட்டாரை கொண்டு 150hp மற்றும் 310Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாவிட்டாலும், ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 285 கிலோ மீட்டர் வரை ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது. பூஜ்ஜியத்திலிருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை XUV 3XO மின்சார எடிஷன் 8.3 விநாடிகளில் எட்டும் என மஹிந்த்ரா தெரிவித்துள்ளது. ஃபன், ஃபாஸ்ட் மற்றும் ஃபியர்லெஸ் என மூன்று ட்ரைவ்மோட்கள் இடம்பெற்றுள்ளன. 50kW DC சார்ஜரை கொண்டு பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவிகிதத்தை வெறும் 50 நிமிடங்களில் எட்டமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





















