Hyundai Creta: ஆல்வேஸ் நெம்பர்.1, காம்பேக்ட் SUV-யின் கிங்: ஜாம்பியாய் குவியும் மக்கள், அப்படி என்னதான் இருக்கு?
Hyundai Creta: இந்திய ஆட்டோமோபைல் சந்தையில் காம்பேக்ட் எஸ்யுவி பிரிவின் ராஜாவாக விளங்கும், ஹுண்டாயின் கிரேட்டா மாடல் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Hyundai Creta: ஹுண்டாயின் கிரேட்டா கார் மாடலில் கடந்த மாதம் 14 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.
ஹுண்டாய் கிரேட்டா கார் மாடல்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தினசரி பயன்பாட்டிற்கு ஏராளமான இருசக்கர வாகன ஆப்ஷன்கள் இருக்கின்றன. ஆனால், தினசரி பயன்பாட்டிற்கான ஏற்ற சரியான காரை தேர்வு செய்வது என்பது மிகவும் கடினமானதாகும். காம்பேக்ட் எஸ்யுவியை கருத்தில் கொண்டால், அட்டகாசமான டிசைன், உயர் தொழில்நுட்ப அம்சங்கள், சாலையில் வலுவான தோற்றம் ஆகியவற்றின் கலவையாக, போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளி ஹுண்டாயின் கிரேட்டா ஆதிக்கம் செலுத்துகிறது. விற்பனையிலும் இந்த பிரிவில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.
ஹுண்டாய் கிரேட்டா - ஆல்வேஸ் No.1
காம்பேக்ட் எஸ்யுவி பிரிவின் ராஜாவாக உள்ள கிரேட்டா கார் மாடல், கடந்த மே மாதத்தில் மட்டும் 14 ஆயிரத்து 860 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. முந்தைய ஏப்ரல் மாதத்தில் பதிவான 17 ஆயிரத்து 61 யூனிட்கள் விற்பனையை காட்டிலும் குறைவு என்றாலும், ஒட்டுமொத்த காம்பேக்ட் எஸ்யுவி விற்பனையில் கிரேட்டாவே மீண்டும் முதலிடம் பிடித்து வருகிறது. இன்ஜின் மட்டுமின்றி மின்சார எடிஷனிலும் கிரேட்டா விற்பனை செய்யப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 15 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகியுள்ள நிலையில், ஒரு மாதத்தின் அதிகபட்ச விற்பனையாக கடந்த ஜனவரியில் 18 ஆயிரத்து 522 யூனிட்கள் விற்பனையாகின.
ஹுண்டாய் கிரேட்டா ஏன் பெஸ்ட்?
கிரேட்டா கார் மாடல் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு ஆல்-ரவுண்ட் பெர்ஃபார்மராக கொண்டாடப்படுகிறார். சமநிலையான ஸ்டைல், அம்சங்கள், விலைக்கு ஏற்ற மதிப்பு கொண்டு, வசதியான பயணம் , தாராளமான இடவசதி, மாடர்ன் தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது. இதுபோக 50-க்கும் அதிகமான வேரியண்ட்கள், பலதரப்பட்ட இன்ஜின் ஆப்ஷன்கள், வலுவான பாதுகாப்பு அம்சங்கள் வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துகொள்ள தாராளமான வாய்ப்புகளை வழங்குகின்றன. ஹுண்டாய் நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மை மற்றும் விற்பனைக்கு பிறகான சேவையும் கிரேட்டா கார் மாடலை பிரபலமானதாக மாற்றியுள்ளது. 5 பேர் வரை அமரும் வகையிலான இருக்கை வசதிகளை கொண்டு, குடும்பங்களுக்கான சரியான தேர்வாகவும் இருப்பது கிரேட்டாவவின் விற்பனையை ஊக்குவிக்கிறது.
ஹுண்டாய் கிரேட்டா அம்சங்கள்:
சொகுசு வசதிகளை விரும்பும் கார் பிரியர்களுக்காகவே கிரேட்டா வடிவமைக்கப்பட்டுள்ளது. சாஃப்ட் டச் மெட்டீரியல்ஸ், வாய்ஸ் எனேபிள்ட் பனோரமிக் சன்ரூஃப், வெண்டிலேடட் சீட்ஸ் மற்றும் ஆம்பியண்ட் லைட்டிங் ஆகியவை கிரேட்டாவில் மேற்கொள்ளும் பயணத்தை சிறந்ததாக மாற்றுகிறது. ஆப்பிள் கார்பிளே உடன் கூடிய 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ப்ளூலிங்க் கனெக்டட் தொழில்நுட்பமானது பயணத்தின் போது உங்களுக்கான பொழுதுபோக்கு வாய்ப்புகளை வழங்குகிறது. ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், பவர்ட் ஃப்ரண்ட் சீட்ஸ், வயர்லெஸ் சார்ஜிங், ட்ரைவ் மோட், க்ரூஸ் கண்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட்ஸ், 360 டிகிரி கேமரா, டிராக்ஷன் கண்ட்ரோல் மோட் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் என ஏராளமான தொழில்நுட்ப அம்சங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
ஹுண்டாய் கிரேட்டா பாதுகாப்பு அம்சங்கள்:
கிரேட்டா கார் மாடலானது 6 ஏர் பேக்குகளை ஸ்டேண்டர்டாக கொண்டுள்ளன. இதுபோக ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங், பாதுகாப்பான எக்சிட் வார்னிங், ரியர் கிராஸ் ட்ராஃபிக் கொலிசியன் அவாய்டன்ஸ் அசிஸ்ட் உள்ளிட்ட அம்சங்களை கொண்டு பயணத்தை பாதுகாப்பானதாகவும் மாற்றுகிறது. தேசிய பாதுகாப்பு தரப்பரிசோதனையில் பெரியவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு 3 ஸ்டார்களை பெற்றுள்ளது.
ஹுண்டாய் கிரேட்டா இன்ஜின் விவரங்கள்:
ஹுண்டாய் நிறுவனம் எப்போதுமே தனது வலுவான இன்ஜின் ஆப்ஷன்களால் வாடிக்கையாளர்களை ஆச்சரியமூட்டுகிறது. அந்த வகையில் கிரேட்டாவில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. கூடுதல் செயல்திறனுக்காக 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை தேர்வு செய்யும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. 6 ஸ்பீட் மேனுவல், CVT, 7 ஸ்பீட் DCT ஆகிய கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் அநாயசமான பயணத்தை மேற்கொள்வதற்காக வழங்கப்படுகின்றன. நகர்ப்புற நெரிசலில் பயணிக்கவும், தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக பயணிக்கவும் கிரேட்டா சிறந்த திறனை கொண்டுள்ளது. கிரேட்டா கார் மாடலானது சராசரியாக 17.4 முதல் 21.8 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹுண்டாய் கிரேட்டா விலை விவரங்கள்:
இந்திய சந்தையில் மொத்தமாக 54 வேரியண்ட்களில் கிடைக்கும் கிரேட்டா கார் மாடலின் விலை, சென்னையில் ரூ.13.81 லட்சம் தொடங்கி ரூ.25.85 லட்சம் (ஆன் - ரோட் விலை) நீள்கிறது. உள்நாட்டில் கியா செல்டோஸ், மாருதியின் கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், ஹோண்டா எலிவேட், வோக்ஸ்வேகன் டைகன் மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகிய கார் மாடல்களிடம் கடும் போட்டியை எதிர்கொள்கிறது. நிசான் மற்றும் ரெனால்ட் நிறுவனங்களும் போட்டியை மேலும் தீவிரப்படுத்தும் புதிய SUVகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன. ஆனாலும் இந்திய சந்தையில் காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் கிரேட்ட தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.





















