HONDA ADVENTURE BIKE: ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட ஹோண்டா அட்வென்ச்சர் மோட்டார் சைக்கிள்..! இவ்வளவு சிறப்புகளா..?
ஹோண்டா நிறுவனம் தனது புதிய அட்வென்ச்சர் மோட்டார் சைக்கிளை, ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தியுள்ளது.
ஆட்டோ எக்ஸ்போ 2023
பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது புதிய வாகனங்கள் மற்றும் எதிர்கால திட்டங்களை, அறிவிக்கும் வகையில் கிரேட்டர் நொய்டா பகுதியில், ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சி கடந்த 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 18ம் தேதி வரையில் நடைபெறும் இந்த பிரமாண்ட ஆட்டோ எக்ஸ்போவில், முன்னணி நிறுவனங்கள் பங்கேற்காவிட்டாலும், மாருதி சுசுகி, ஹுண்டாய், டாடா மோட்டார்ஸ், கியா, எம்ஜி மற்றும் டொயோட்டா உடன், ஒரே ஒரு சொகுசு கார் நிறுவனமாக லெக்சஸ் நிறுவனம் பங்கேற்று உள்ளன.
அதோடு, இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களில் பெனெல்லி, கீவே, ஜோன்டெஸ், மோட்டோ மோரினி, மேட்டர், டார்க் மற்றும் அல்ட்ரா வயலட் ஆகியவை பங்கேற்றுள்ளன. நிகழ்ச்சியில் பல நிறுவனங்களும் தொடர்ந்து தங்களது புதிய கார் மற்றும் மோட்டர் சைக்கிள்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், ஹோண்டா நிறுவனம் தனது ஹோண்டா XRE300 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்ச்சியில், பார்வையாளர்களுக்காக காட்சிப்படுத்தியது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடந்த பென்ச்மார்க்கிங்கின் போது இந்த வாகன மாடக், கேடிஎம் 390 அட்வென்ச்சர் மற்றும் பிஎம்டபிள்யூ G310GS ஆகிய மாடல்களுடன் காட்சியளித்தது குறிப்பிடத்தக்கது.
இன்ஜின் விவரங்கள்:
ஏற்கனவே பிரேசில் நாட்டில் விற்பனை செய்யப்படும், ஹோண்டா XRE300 மாடல் மோட்டார் சைக்கிளில் 291.6சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஃபிலெக்ஸ் ஃபியூவல் யூனிட் ஆன இந்த இன்ஜின் பெட்ரோல் மற்றும் எத்தனால் உள்ளிட்டவைகளில் இயங்கும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. பெட்ரோலில் இயங்கும் போது இந்த யூனிட் 25.4 ஹெச்பி பவர், 27.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும். எத்தனாலில் இயங்கும் போது 25.6 ஹெச்பி பவர், 28 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறனை இந்த இன்ஜின் கொண்டுள்ளது.
சிறப்பம்சங்கள்:
இந்த பைக் உயரமான ஸ்டான்ஸ் பெற்றுள்ளது. இதன் முன்புற ஃபேரிங் தவிர மோட்டார்சைக்கிளின் ஒட்டுமொத்த தோற்றமும் மெல்லியதாகவே காட்சியளிக்கிறது. புதிய ஹோண்டா XRE300 மாடலில் ஃபுல் எல்.ஈ.டி விளக்குகள், உயரமான ஃபெண்டர் பீக், அசத்தலான முகப்பு விளக்கு கவுல், ஸ்கல்ப்ட் செய்யப்பட்ட ஃபியூவல் டேன்க், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், அண்டர்சீட் எக்சாஸ்ட் மற்றும் லக்கேஜ் ராக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளன.
இந்தியாவில் அறிமுகம் எப்போது:
புதிய ஹோண்டா XRE300 அட்வென்ச்சர் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால், இந்திய சந்தையில் இது ஹோண்டா நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளாக நிலை நிறுத்தப்படலாம். இந்தியாவில் எண்ட்ரி லெவல் அட்வென்ச்சர் பிரிவு தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இந்த பிரிவில் ஹோண்டா ஏற்கனவே XRE300 மாடலை இந்தியாவில் டிரேட்மார்க் செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
விலை விவரம்:
வெளிநாட்டு சந்தையில் ரூ.4.08 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் நிலையில், இந்திய சந்தையில் ரூ.3 லட்சத்திற்கு இந்த மோட்டார் சைக்கிள் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. டூயல் ஸ்போர்ட் பைக் என்ற வகையில், ஹோண்டா XRE300 மாடல் ரோடு-சார்ந்த மாடல்களான கேடிஎம் 390 அட்வென்ச்சர் மற்றும் பிஎம்டபிள்யூ G310GS போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைய வாய்ப்புள்ளது.