GST Cut on Cars: கார், பைக்குகளுக்கு குறைந்த ஜிஎஸ்டி, மின்சார வாகனங்களுக்கு அடித்த ஜாக்பாட் - எந்த காரை வாங்கலாம்?
GST Reforms on Automobile Industry: புதிய ஜிஎஸ்டி திருத்தத்தில் ஆட்டோமொபைல் துறையில் கார் மற்றும் பைக்குகளின் மீதான வரி கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

GST Reforms on Automobile Industry: புதிய ஜிஎஸ்டி திருத்தத்தில் மின்சார வாகனங்கள் மீது அதே 5% வரி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி திருத்தம் - ஆட்டோமொபைல் துறை:
மக்களின் மீதான வரிச்சுமையை குறைக்கும் நோக்கில் மத்திய அரசு, ஜிஎஸ்டி வரி அடுக்குகளை நான்கில் இருந்து இரண்டாக குறைத்துள்ளது. அதன்படி, இனி 5 மற்றும் 18 சதவிகிதம் என்ற இரண்டு வரி அடுக்குகள் மட்டுமே பின்பற்றப்பட உள்ளன. இந்த திருத்தத்தில் ஆட்டோமொபைல் துறையில் பெரிய தாக்கம் இருக்கும் என்றும், மின்சார வாகனங்கள் மீது வரி உயர்த்தப்படலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால், மக்கள் பணத்தை சேமிக்கும் வகையில் வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மின்சார வாகனங்கள் மீதான 5 சதவிகித வரியில் எந்தவித மாற்றமும் இன்றி அப்படியே தொடரும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
28%-லிருந்து 18% ஆக வரிக்குறைப்பு
- பெட்ரோல், பெட்ரோல் ஹைப்ரிட், எல்பிஜி, சிஎன்ஜி கார்கள் (1200சிசி & 4000 மிமீ மிகாத கார்கள்)
- டீசல், டீசல் ஹைப்ரிட், கார்கள் (1500சிசி & 4000 மிமீ மிகாத கார்கள்)
- 3 சக்கர வாகனங்கள்
- மோட்டார் சைக்கிள் (350 சிசி மற்றும் அதற்கும் குறைவான திறன் கொண்டவை)
- சரக்கு போக்குவரத்திற்கான மோட்டார் வாகனங்கள்
ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்டு வந்து 28 சதவிகித வரியானது, வரும் செப்டம்பர் 22ம் தேதி முதல் 18 சதவிகிதமாக குறைய உள்ளது. குறிப்பாக 4 மீட்டருக்கும் குறைவான உயரம் கொண்ட அதாவது சப்-4 மீட்டர் கார்களின் விலை கணிசமாக குறைய உள்ளது.
40% வரியை எதிர்கொள்ளும் கார்கள்:
- 1200cc க்கு அதிகமான திறன் அல்லது 4000 mm க்கு மேல் நீளம் கொண்ட பெட்ரோல் இன்ஜின்கள் கொண்ட ஹைப்ரிட் கார்கள்
- 1500cc-க்கு அதிகமான திறன் அல்லது 4000 mm க்கு மேல் நீளம் கொண்ட டீசல் ஹைப்ரிட் கார்கள்
- 350cc க்கு மேல் செயல் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள்
ஆகியவற்றின் மீதான வரி 28 சதவிகிதத்திலிருந்து 40 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது மக்கள் பெரும்பாலும் விரும்பி வாங்கும் க்ரேட்டா, நெக்ஸான் போன்ற பல கார்களின் விற்பனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷாக் அடிக்காத மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி
அனைத்து விதமான மின்சார வாகனங்களுக்கு இதுநாள் வரை 5 சதவிகித வரி மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், புதிய பரிந்துரையில் 20 லட்சம் முதல் 40 லட்சம் வரையிலான விலை கொண்ட கார்களுக்கு 18% வரி வசூலிக்கவும், 40 லட்சத்திற்கும் அதிகமான விலை கொண்ட கார்களுக்கு 40 சதவிகிதம் வரி வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதனால், மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் அரசின் இலக்கு பாதிக்கப்படும் என பல்வேறு தரப்பினரும் எச்சரித்தனர். இதனால், அனைத்து வகையான மின்சார வாகனங்கள் மீதான வரியிலும் எந்தவித மாற்றமும் இன்றி, அதே 5 சதவிகித வரி அப்படியே தொடரும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.




















