Force Gurkha: தாருக்கு போட்டியாக களமிறங்கும் ஃபோர்ஸ் கூர்கா - 5 டோர், வாகனத்தின் அம்சங்கள் என்ன?
Force Gurkha: ஃபோர்ஸ் நிறுவனத்தின் புதிய கூர்கா கார் மாடல் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், நடப்பாண்டு மத்தியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
Force Gurkha: ஃபோர்ஸ் நிறுவனத்தின் புதிய கூர்கா கார் மாடல் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், மஹிந்திராவின் தார் அர்மாடா கார் மாடலுக்கு போட்டியாக அமையும் என கருதப்படுகிறது.
ஃபோர்ஸ் கூர்கா:
Force Motors நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள Gurkha 5-door SUVயின் முதல் டீசரை வெளியிட்டுள்ளது. இந்த வாகனம் தொடர்பான சோதனை ஓட்டப் புகைப்படங்கள் வெளியாகி வந்த நிலையில், நடப்பாண்டின் மத்தியில் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
வடிவமைப்பு மாற்றங்கள்:
ஃபோர்ஸ் கூர்கா 5-டோர் மாடலானது கூர்கா 3-டோரை விட, வித்தியாசமான சில புதிய வடிவமைப்பு கூறுகளைக் கொண்டிருக்கும் என்று சோதனை ஓட்ட புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. அதன்படி வட்ட வடிவ முகப்பு விளக்குகளுக்கு பதிலாக புதிய சதுர முகப்பு விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், இரண்டு ஸ்லேட் கிரில் மேல் கொண்டு செல்லப்படும். 3-டோர் எடிஷனில் காணப்படும் 16 இன்ச் வீல்களுக்கு மாற்றாக, புதிய 5 டோட் காரில் 18-இன்ச் டைமண்ட்-கட் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டிருக்கும். முன் மற்றும் பின்புற பம்பர்களும் திருத்தப்பட வாய்ப்புள்ளது. இதோடு மேலும் இரண்டு கூடுதல் பின்புற கதவுகள் தவிர, வேறு பெரிய வெளிப்புற மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது.
7 சீட்டர் இருக்கை விவரங்கள்:
5 டோரில் ஏற்கனவே உள்ள 3 டோரை போன்ற கேபின் தளவமைப்பே தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், சென்டர் கன்சோலில் ஓட்டுநர் இருக்கைக்கு அருகே ஷிப்ட்-ஆன்-தி-ஃப்ளை 4WD குமிழ் பொருத்தப்பட்டிருக்கும் என சோதனை புகைப்படங்கள் காட்டுகின்றன. முன்னதாக, கூர்கா 3 டோரில் தனித்தனி முன் மற்றும் பின்புற டிஃப்-லாக் லீவர்களுடன், கியர் லீவரின் பின்னால் நிலைநிறுத்தப்பட்ட கைமுறையாக இயக்கப்படும் டிரான்ஸ்பர் கேசும் பொருத்தப்பட்டுள்ளது.
பல இருக்கை ஆப்ஷன்களுடன் கூர்கா 5-டோரை ஃபோர்ஸ் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, புதிய கூர்காவில் 5-சீட்டர் இரண்டு-வரிசை பதிப்பு, 6-இருக்கை மூன்று-வரிசை பதிப்பு மற்றும் மூன்றாவது வரிசையில் இரண்டு தனிப்பட்ட கேப்டன் நாற்காலிகளுடன் 7-இருக்கை மூன்று-வரிசை மற்றும் இரண்டாவது வரிசையில் ஒரு பெஞ்ச் இருக்கை ஆகிய ஆப்ஷன்களின் கிடைக்கக் கூடும். 5 டோர் வாகனமானது 2,825மிமீ நீளமான வீல்பேஸைக் கொண்டிருக்கும். அதாவது 3-டோர் பதிப்பை விட 425மிமீ நீளமானதாகும்.
இன்ஜின் விவரங்கள்:
கூர்கா 5-டோர் மாடலானது, 5-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் கூர்கா 3-டோரில் உள்ள மெர்சிடிஸை சார்ந்த 2.6-லிட்டர் டீசல் இன்ஜினை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Force Gurkha 5-door வரும் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். இந்த எஸ்யூவி விற்பனைக்கு வரும்போது நேரடி போட்டியாளர்கள் இல்லாவிட்டாலும், மாருதி சுசுகி ஜிம்னியிலிருந்து சில போட்டிகளை எதிர்கொள்ளக் கூடும். அதோடு பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள மஹிந்திரா தார் 5-டோர் அறிமுகப்படுத்தும்போது, அது கூர்கா 5 டோருக்கு கடும் போட்டியை ஏற்படுத்தலாம். தார் வாகனமானது 2024 ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது .
Force Gurkha 3-door இன் கடைசியாக அறியப்பட்ட விலை ரூ. 15.10 லட்சம் ஆகும். இருப்பினும், BS6 இரண்டாம் கட்ட உமிழ்வு விதிமுறைகள் கடந்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி அமலுக்கு வந்ததில் இருந்து, அந்த மாடல் விற்பனையில் இல்லை. இருப்பினும், SUVயின் 3-டோர் பதிப்பை விட கூர்கா 5-டோரின் விலை ரூ. 1 லட்சம் முதல் ஒன்றரை லட்சம் வரை கூடுதலாக இருக்கும் என கருதப்படுகிறது.