பாரத்பென்ஸ் பேருந்தின் புதிய மாடல் அறிமுகம் - BB1924 பேருந்தில் சிறப்பம்சங்கள் என்னென்ன?
டெய்ம்லர் டிரக் நிறுவனம் தனது புதிய பாரத் பென்ஸ் பேருந்தான BB1924 -யை அறிமுகப்படுத்தியுள்ளது.

டெய்ம்லர் டிரக் ஏஜி நிறுவனத்தின் துணை நிறுவனமான டெய்ம்லர் இந்தியா கமர்ஷியல் வெஹிக்கிள்ஸ் தனது புதிய பாரத் பென்ஸான BB1924 ரக மேம்படுத்தப்பட்ட கனரகப் பேருந்த்தை இன்று அறிமுகப்படுத்தியது.
BB1924:
நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்தை துரிதப்படுத்த இது பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்தின் மொத்த எடை 19,500 கிலோ. அதாவது 19.5 டன். இந்த பேருந்து அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன், குறைவான இயக்கச் செலவு மற்றும் மேம்பட்ட பயணிகள் வசதி ஆகியவற்றை வழங்குகிறது. புதிய BB1924 மூலம் நகரங்களுக்கு இடையிலான ப்ரீமியம் போக்குவரத்துப் பிரிவில் முக்கிய இடத்தைப் பிடிக்க பாரத்பென்ஸ் திட்டமிட்டுள்ளது.
DICV-யின் பேருந்து வர்த்தகப் பிரிவுத் தலைவர் ஆண்டமுத்து பொன்னுசாமி கூறியதாவது, BB1924 ஒரு மிகப்பெரிய மாற்றத்தின் குறியீடாக அமைந்துள்ளது. மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள், உள்நாட்டிலேயே அதிக உதிரிபாகங்கள் தயாரிப்பு மற்றும் குறைவான 'மொத்த உரிமைச் செலவு' ஆகியவற்றின் மூலம் பாரத்பென்ஸ் புதிய தரநிலையை நிர்ணயித்துள்ளது.
இயக்கச் செலவு:
மும்பை-புனே, டெல்லி-ஜெய்ப்பூர் மற்றும் சென்னை-பெங்களூரு போன்ற முக்கிய வழித்தடங்களில் மேற்கொள்ளப்பட்ட விரிவான களச் சோதனைகளில், தற்போதுள்ள மற்ற வாகனங்களை விட இதன் இயக்கச் செலவு கணிசமாகக் குறைவாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா முழுவதும் இயங்கி வரும் பாரத்பென்ஸ் – ன் அங்கீகரிக்கப்பட்ட 398 வாடிக்கையாளர் தொடர்பு மையங்களில் இந்த புதிய BB1924 கிடைக்கும். இப்பேருந்தை வாங்கும் செயல்முறையை எளிதாக்குவதற்காக, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட முன்னணி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் பாரத்பென்ஸ் நிதி வசதிக்காக கூட்டாண்மைகளை மேற்கொண்டிருக்கிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 8.5% ல் தொடங்குகின்ற வட்டி விகிதத்தில் கடனுதவி மற்றும் 5 ஆண்டுகள் வரை நெகிழ்வான இஎம்ஐ வசதிகள் வழங்கப்படுகின்றன.
6 வருட வாரண்டி:
ஒவ்வொரு BB1924 பேருந்தும், 6 ஆண்டுகள் அல்லது 6 லட்சம் கிலோமீட்டர் வரையிலான விரிவான 'பவர்ட்ரெய்ன் வாரண்டி'யுடன் வருகிறது. நாடு முழுவதும் 24 மணி நேரமும் செயல்படும் சாலையோர சர்வீஸ் உதவி சேவையும் வழங்கப்படுகிறது.
தடையற்ற உதிரிபாகங்கள், வலுவான உள்ளூர் விநியோக அமைப்பின் மூலம், 95% உதிரி பாகங்கள் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் கிடைப்பதை இந்நிறுவனம் உறுதி செய்கிறது. இதனால் வாகனம் பழுதுபார்ப்பிற்காக நிற்கும் நேரம் குறைக்கப்பட்டு, தடையற்ற இயக்கம் உறுதி செய்யப்படும்.
தொழில்நுட்பம்:
'டெலிமேட்டிக்ஸ்' தொழில்நுட்பம் மூலம், பழுதுகளை முன்கூட்டியே கணிக்கும் 'Predictive Maintenance' சிறப்பு வசதியையும் உரிமையாளர்கள் பெறலாம். ஓட்டுநர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்காக அவரவர் பிராந்திய மொழிகளிலேயே வழங்கப்படும் விரிவான திறன் மேம்பாட்டு பயிற்சிகள், வாகனத்தின் முழுமையான செயல்திறனை வெளிக்கொணர உதவுகின்றன.
6 ஆண்டுகள் அல்லது 6 லட்சம் கிலோமீட்டர் வரை செல்லுபடியாகும் பராமரிப்புத் தொகுப்பு (AMC) மற்றும் பிரத்யேக வாடிக்கையாளர் உதவி மையம் ஆகியவை ஒரு முழுமையான உரிமையாளர் அனுபவத்தை வழங்குகின்றன. பயணிகள், ஓட்டுநர்கள் மற்றும் பேருந்து சேவை நிறுவனங்கள் என அனைவரின் பாதுகாப்பிலும் எவ்வித சமரசமும் இன்றி, மிகத் துல்லியமான தொழில்நுட்பக் கட்டமைப்புடன் இந்த BB1924 பேருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதிநவீன வசதிகள்:
ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) மற்றும் எலக்ட்ரானிக் வெஹிக்கிள் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (EVSC) போன்ற நவீன தொழில்நுட்பங்கள், எத்தகைய சூழ்நிலையிலும் வாகனத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்கின்றன. துல்லியமான பிரேக்கிங் திறன். CAN தொழில்நுட்பத்துடன் கூடிய, ECU மூலம் கட்டுப்படுத்தப்படும் 5-நிலை மின்காந்த ரிடார்டர் இதில் உள்ளது. இது மோசமான சாலைகளிலும் வாகனத்தை ஓட்டுநரின் முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுவதோடு, பிரேக் பிடிக்கும் தூரத்தைக் கணிசமாகக் குறைத்து விபத்து அபாயத்தைத் தவிர்க்கிறது.
உயர் வலிமை கொண்ட எஃகு கொண்டு உருவாக்கப்பட்ட இதன் சேசிஸ், வாகனத்தின் உறுதித்தன்மையை அதிகரிக்கிறது. இது விபத்துக்களின் தாக்கத்தைத் திறம்பட எதிர்கொண்டு, பயணிகளுக்கு ஒரு பாதுகாப்பு அரணாகச் செயல்படுகிறது. தயாரிப்பு ஆலையிலேயே பொருத்தப்பட்ட மிச்செலின் ரேடியல் டியூப்லெஸ் டயர்கள், சாலையோடு சிறந்த பிடிமானத்தை வழங்குவதுடன், நீண்ட காலம் உழைக்கக்கூடியவை.
தயாரிப்பு மீதான கண்ணோட்டம்
BB1924 மாடலானது அதிக எண்ணிக்கையிலான பயணிகள் (51+1+1 இருக்கைகள் வரை) மற்றும் உடைமைகளை ஏற்றிச் செல்ல வழிவகுப்பதோடு, நகரங்களுக்கு இடையிலான பேருந்து சேவையை வழங்கும் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு பயணத்திலும் அதிக வருவாயை ஈட்டித் தருகிறது.
தொழில்நுட்ப விவரங்கள்:
• BS-VI OBD-II OM926, டர்போசார்ஜர் மற்றும் இன்டர்கூலர் கொண்ட 6-சிலிண்டர் டீசல் என்ஜின். 241hp குதிரை ஆற்றலையும், 850 Nm பிளாட் டார்க் இழுதிறன் கொண்டது.
• நெடுஞ்சாலை பயணத்திற்கேற்ப மேம்படுத்தப்பட்ட 6-வேக சின்க்ரோமேஷ் கியர்பாக்ஸ்.
• 6 ஆண்டுகள் அல்லது 6 லட்சம் கி.மீ என்ற வரம்பு வரை பவர்டிரெய்ன் வாரண்டி.
பாதுகாப்பு மற்றும் வசதிகள்
• ஆண்டி-ரோல் பார்களுடன் கூடிய முன்புற மற்றும் பின்புற நியூமேட்டிக் சஸ்பென்ஷன்.
• EBD வசதியுடன் கூடிய ABS பிரேக்கிங் சிஸ்டம்.
• 5-நிலை மின்காந்த ரிடார்டர் (இது பிரேக் தேய்மானத்தை 40% வரை குறைக்கிறது).
• எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC).
• குரூஸ் கண்ட்ரோல்
• பிரேக் ஹோல்ட் அசிஸ்ட்
• TFT டிஸ்பிளே மூலமாக ஓட்டுநருக்கான எச்சரிக்கை சமிக்ஞைகள்.
சேசிஸ் மற்றும் கட்டமைப்பு
• அதிக உறுதியுடைய எஃகு சட்டம்: 255 x 73.3 x 7 மிமீ.
• வீல்பேஸ்: 6,850 மிமீ.
• உற்பத்தி ஆலையில் பொருத்தப்பட்ட மிச்செலின் 295/80 R22.5 ரேடியல் டியூப்லெஸ் டயர்கள்.
செயல்பாட்டு அம்சங்கள்
• எரிபொருள் டேங்க் கொள்ளளவு: 380 லிட்டர் (1,300+ கி.மீ தூரம் வரை செல்லும்).
• சர்வீஸ் இடைவெளிகள்: முதல் சர்வீஸ் 60,000 கி.மீ-லும், அதன் பிறகு ஒவ்வொரு 1,20,000 கி.மீ-லும் செய்ய வேண்டும்.
• 10–15 ஆண்டுகள் வரை உழைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.





















