Bajaj Platina : புதிய பிளாட்டினா பைக்கை அறிமுகப்படுத்திய பஜாஜ் நிறுவனம்.. கூடுதல் விவரங்கள் உள்ளே
பஜாஜ் நிறுவனம் தனது புதிய பிளாட்டினா 110 ABS மாடல் மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய பிளாட்டினா மோட்டார் சைக்கிள் அறிமுகம்:
மலிவு விலை, நீண்ட மைலேஜ் போன்ற பல்வேறு காரணங்களால், இன்றளவும் பஜாஜ் நிறுவனத்தின் பிளாட்டினா மாடல் மோட்டார்சைக்கிள் வாடிக்கையாளர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தொடர்ந்து, பல்வேறு அப்டேட்களை வழங்குவதன் மூலம், சந்தையில் தனக்கான இடத்தையும் பிளாட்டினா மாடல் பைக் தொடர்ந்து தக்க வைத்துள்ளது. அந்த வகையில் தான், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ABS வசதி கொண்ட தனது பிளாட்டினா 110 ABS மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது.
இன்ஜின் விவரங்கள்:
புதிய பிளாட்டினா மாடல் பைக்கில் 115.45சிசி ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 8.44 குதிரைகளின் திறன், 9.81 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை ஆகிய திறனை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. எண்ட்ரி லெவல் கம்ப்யுட்டர் பிரிவில் இத்தகைய பாதுகாப்பு வசதியுடன் அறிமுகமாகி இருக்கும் ஒரே மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை புதிய பிளாட்டினா 110 ABS பெற்று இருக்கிறது. புதிய பிளாட்டினா 110 மாடலில் பஜாஜ் நிறுவனம் சிங்கில் சேனல் ABS வழங்கப்பட்டு இருப்பதன் மூலம், அதன் பாதுகாப்பு அதிகரித்துள்ளது.
வாகனத்தின் சிறப்பம்சங்கள்:
புதிய பிளாட்டினா 110 ABS மாடலில் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. அதோடு, ABS இண்டிகேட்டர், கியர் பொசிஷன் இண்டிகேட்டர், கியர் கைடன்ஸ் போன்ற அம்சங்களும் உள்ளன. இவை தவிர 17 இன்ச் அளவில் வீல்கள், டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், டூயல் ஸ்ப்ரிங்குகள், ஹாலோஜன் முகப்பு விளக்கு, எல்.ஈ.டி டிஆர்எல், 11 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஃபியூவல் டேன்க், செமி டிஜிட்டல் கன்சோல் ஆகியவையும் வழங்கப்பட்டு உள்ளன. புதிய பஜாஜ் பிளாட்டினா 110 ABS மாடல் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ், ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ் மற்றும் ஹோண்டா CD 110 டிரீம் போன்ற வாகன மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது..
விலை விவரங்கள்:
புதிய பஜாஜ் பிளாட்டினா 110 ABS மாடலின் விலை இந்திய சந்தையில் ரூ. 72 ஆயிரத்து 224, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பிளாட்டினா சீரிசில் விலை உயர்ந்த மோட்டார்சைக்கிளாக பிளாட்டினா 110 ABS மாடல் மாறியுள்ளது . இந்திய சந்தையில் புதிய பிளாட்டினா 110 ABS மாடல் எபோனி பிளாக், கிளாஸ் பீவ்டர் கிரே, காக்டெயில் வைன் ரெட் மற்றும் சஃபயர் புளூ என நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இவை தவிர புதிய பிளாட்டினா 110 மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாமல், முந்தைய மாடலில் உள்ள வடிவமைப்புகளே பின்பற்றப்பட்டுள்ளன.