Paralympics 2020: தங்க மங்கைஅவானிக்கு பிரத்யேக எஸ்.யூ.வி கார் பரிசு - ஆனந்த் மகேந்திரா அறிவிப்பு!
அவானி லெகராவுக்கு பிரத்யேக எஸ்.யூ.வி காரை பரிசளிக்க விருப்பப்படுவதாக தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பாராலிம்பிக் வரலாற்றில் இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார் 19 வயதேயான அவானி லெகரா. பாராலிம்பிக் தொடர் துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் தங்கம் வென்ற அவானிக்கு நாடு முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றது.
இந்நிலையில், தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா அவானி லெகராவுக்கு பரிசளிக்க விருப்பப்படுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில், ”சென்ற வாரம்தான் மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட எஸ்.யூ.வி சொகுசு கார் வகைகளை தயாரிக்க வேண்டுமென தீபா மாலிக் தெரிவித்திருந்தார். இப்போது, எங்கள் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் வேலுவை இந்த பணியை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்த சவாலை ஏற்றுக்கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கென தயாரிக்கப்படும் முதல் எஸ்.யூ.வி சொகுசு காரை அவானி லெகராவுக்கு பரிசளிக்க விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
A week ago @DeepaAthlete suggested that we develop SUV’s for those with disabilities. Like the one she uses in Tokyo.I requested my colleague Velu, who heads Development to rise to that challenge. Well, Velu, I’d like to dedicate & gift the first one you make to #AvaniLekhara https://t.co/J6arVWxgSA
— anand mahindra (@anandmahindra) August 30, 2021
2012-ம் ஆண்டு, தன்னுடைய 11 வயதில் ஏற்பட்ட ஒரு சாலை விபத்தால், அவானிக்கு முதுகு தண்டு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், மீண்டு எழுந்த அவர் துப்பாக்கிச் சுடுதல் மற்றும் வில்வித்தை போட்டிகளில் கவனம் செலுத்தினார். பீய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ராவை முன்மாதிரியாக கொண்ட அவானி, துப்பாக்கிச் சுடுதலில் முழுமையாக கவனல் செலுத்த தொடங்கினார். 2017-ம் ஆண்டு சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்று தடம் பதித்தார். தற்போது, ரேங்கிங்கில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் அவர், எதாவது ஒரு பதக்கம் வெல்வார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அதை இப்போது உறுதி செய்துள்ளார்.
ஓடியாட வேண்டிய வயதில் ஏற்பட்ட விபத்தால் துவண்டுபோகவில்லை அவானி. மீண்டு வந்தார், படிப்பிலும் விளையாட்டிலும் இரண்டிலும் கவனம் செலுத்தினார். ஒரு புறம் விளையாட்டில் சர்வதேச ஃபோடியம்களை ஏறி வரும் அவானி, மற்றொரு புறம் சட்டப்படிப்பு படித்து வருகிறார் என்பது கூடுதல் சிறப்பு. மீண்டு எழுந்தவர், சரித்தரம் படைத்துள்ளார். வாழ்த்துகள் குவிந்து வருகிறது!