அதிக விளைச்சலை தரக்கூடிய மக்காச்சோளம் விதைகளை வழங்க வேண்டும் - தூத்துக்குடி விவசாயிகள்
ராபி பருவம் தொடங்கி உள்ள நிலையில், 2-ம் கட்ட விதைப்புக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ளதால், அரசு தற்போது போதுமான அளவு டி.ஏ.பி. இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு புதூர் பகுதிகளில் உள்ள மானாவாரி நிலங்களில் ஆடிப்பட்டம் விதைப்பு பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தின் வடக்கு பகுதியான விளாத்திகுளம், கோவில்பட்டி, புதூர் ஆகிய இடங்களில் மானாவாரி நிலங்களே அதிகமாக உள்ளன. வானம் பார்த்த பூமியான இங்கு மழையை நம்பியே விவசாயம் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் ராபி பருவ விதைப்பு பணியை விவசாயிகள் ஆடி 18-ம் பெருக்கு அன்று தொடங்குவது வழக்கம்.
இந்தாண்டு ஆடி 18-ம் பெருக்கான புதூர் பகுதி விவசாயிகள் தங்களது மானாவாரி நிலங்களில் முதற்கட்டமாக நிலக்கடலை விதைப்பு பணியை தொடங்கினர். முன்னதாக நிலத்துக்கு பூகைளை செய்து, இந்தாண்டு போதிய அளவு மழை பெய்து, நல்ல மகசூல் கிடைக்க வேண்டினர். தொடர்ந்து, டிராக்டர் மூலம் நிலக்கடலை விதைப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கு ஊடு பயிராக தட்டப்பயறு விதை தூவப்பட்டது. நிலக்கடலைக்கு மழை அதிகம் தேவைப்படாது. இருந்தாலும், கடந்த மாதம் இறுதி முதல் அவ்வப்போது மழை பெய்து வருவது நிலக்கடலைக்கு கூடுதல் பலமாக இருக்கும் என விவசாயிகள் கூறினர்.
மேலும், பயிரிடுவதற்கு முன் அடியூரமாக டி.ஏ.பி. 50 கிலோ பயன்படுத்துவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக டி.ஏ.பி. உரத்துக்கு தட்டுப்பாடு நிலவியது. இந்தாண்டாவது போதுமான அளவில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு வைக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் கூறும்போது, முதற்கட்டமாக நிலக்கடலை பயிரிடும் பணிகள் தொடங்கி உள்ளன. 2-ம் கட்டமாக புரட்டாசி மாத தொடக்கத்தில் சிறு தானியங்களான சோளம், மக்காச்சோளம், கம்பு, பயறு வகைகளான உளுந்து, பாசி மற்றும் பருத்தி, வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு பயிர் செய்வதற்கு நிலங்களை உழுது, பண்படுத்தி தயார் நிலையில் வைத்துள்ளோம். கடந்த 2 ஆண்டுகளாக கடும் மழையால் மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தாண்டு விவசாயம் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ராபி பருவம் தொடங்கி உள்ள நிலையில், 2-ம் கட்ட விதைப்புக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ளதால், அரசு தற்போது போதுமான அளவு டி.ஏ.பி. இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல், இந்தாண்டு வேளாண் விரிவாக்க மையங்களில் வழியாக மக்காச்சோளம் விதை விவசாயிகளுக்கு வழங்குவதற்காக வந்துள்ளது. நல்ல தரமான விதைகள் அதிக விளைச்சலை தரக்கூடிய விதைகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்