தஞ்சாவூர் விவசாயிகள் வேதனை: காட்டுப்பன்றிகள் பயிர்களை அழிப்பதால் பெரும் இழப்பு, நிவாரணம் தேவை!
இருள் சூழ்ந்த பிறகு வயல்களுக்குள் புகுந்து நெல், வாழை, வெற்றிலை, பருத்தி, காய்கறி போன்ற பயிர்களில் தண்டு மற்றும் வேர் பகுதியைக் கடித்து தின்கின்றன .

தஞ்சாவூர்: இயற்கை ஒருபுறம் சோதிச்சா மறுபுறம் காட்டுப்பன்றிகளால் மகசூல் இழப்பு ஏற்பட்டு பெரும் சோதனையை அளிக்கிறது என்று விவசாயிகள் புலம்புகின்றனர்.
தஞ்சை மாவட்டத்தில் சில ஆண்டுகளாக குறுவை, சம்பா பருவங்கள் மட்டுமல்லாமல் கோடையிலும் பருவம் தவறி பெய்யும் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருக்கும் நெல் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைகின்றன. இதனால் விவசாயிகள் பொருளாதார நிலையில் பெரும் சரிவை சந்திக்கின்றனர். பயிர் சாகுபடியும், மகசூலும் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் சில ஆண்டுகளாக பூதலூர், தஞ்சை, திருவையாறு, பாபநாசம், அம்மாப்பேட்டை, கும்பகோணம், திருப்பனந்தாள் உள்ளிட்ட வட்டாரங்களிலுள்ள காவிரி, வெண்ணாறு, குடமுருட்டி, கொள்ளிடம் உள்ளிட்ட ஆற்றங்கரையோரம் மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் காட்டுப்பன்றிகள் அளிக்கும் தொல்லை விவசாயிகளை நிலைகுலைய செய்து வருகிறது.
நெற் பயிர்கள் மட்டுமல்லாமல் வாழை, வெற்றிலை, பருத்தி, காய்கறி, கீரைகள் உள்ளிட்ட பயிர்களையும் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி விடுகின்றன. அன்றாடம் வருமானத்திற்கு வழி கிடைக்கும் என்பதால் மிகுந்த சிரமத்திற்கு இடையில் காய்கறி, கீரைகளை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். இந்த வயல்களில் புகுந்து காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி விடுவதால் விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகி வருகின்றனர். இரவு நேரத்தில் கூட்டமாக வரும் காட்டுப்பன்றிகள் வயல்களில் படுத்து உருள்கின்றன. ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்வதால் பயிர்கள் சேதமடைகின்றன. அவை பயிர்களைத் உண்ணாவிட்டாலும், தண்டு மற்றும் வேர்ப் பகுதியைக் கடித்துவிடுவதால், பயிர்களின் வளர்ச்சி பாதிக்கிறது. கடன் வாங்கி காய்கறி உட்பட பல்வேறு சாகுபடிகளை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு காட்டுப்பன்றிகளால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது_
இதுகுறித்து தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத் தலைவர் முகமது இப்ராஹிம் கூறியதாவது: காட்டுப்பன்றிகள் பகலில் ஆறுகள் மற்றும் ஆற்றங்கரையில் உள்ள கோரைப்புற்கள், புதர்கள், நடமாட்டம் இல்லாத தோப்புகள் உள்ளிட்டவற்றில் பதுங்கி இருக்கின்றன. இருள் சூழ்ந்த பிறகு வயல்களுக்குள் புகுந்து நெல், வாழை, வெற்றிலை, பருத்தி, காய்கறி போன்ற பயிர்களில் தண்டு மற்றும் வேர் பகுதியைக் கடித்து தின்கின்றன .
ஒருபுறம் பருவம் தவறி பெய்யும் மழையால் பேரிழப்பு ஏற்பட்டு வரும் நிலையில், மறுபுறம் பயிர்களை காட்டுப்பன்றிகள் அழிக்கின்றன. நகைகளை அடமானம் வைத்து சாகுபடி செய்யும் விவசாயிகள் இந்த இரு இடர்பாடுகளாலும் மிகுந்த துயரத்துக்கு ஆளாகின்றனர். இதனால், விவசாயம் திருப்திகரமாக இல்லாததால், விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறுகின்றன. இந்த நிலைமை தொடர்ந்தால் உணவு உற்பத்தி வெகுவாக குறையக்கூடிய அபாய நிலை உள்ளது. தொடர்ந்து பொருளாதார இழப்பு ஏற்படுவதால் பல விவசாயிகள் சாகுபடி பணிகளை மேற்கொள்ளவே யோசிக்கின்றனர். இதனால் காய்கறி உற்பத்தியும் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து வனத்துறை அலுவலர்கள் தரப்பில் கூறுகையில், தஞ்சையில் காட்டுப்பன்றிகள் இருக்க வாய்ப்பில்லை. பன்றி வளர்ப்போர் இடம்பெயர்ந்து செல்லும்போது, பன்றிகளை விட்டுவிட்டுச் செல்கின்றனர். அவைதான் கட்டுப்பாடில்லாமல் வயல்களில் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. பாபநாசம் அருகே பண்டாரவாடையில் வயலில் மின்சாரம் தாக்கி இறந்த பன்றியின் டி.என்.ஏ., ரோமம் சேகரிக்கப்பட்டு சென்னையில் உள்ள வனவிலங்கு உயராய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்த பிறகு, அது காட்டுப்பன்றியா? என்பதை உறுதிப்படுத்த முடியும். என்றாலும், பன்றி வளர்ப்போரால் கைவிடப்பட்ட உள்ளூர் பன்றிகள்தான் பயிர்களைச் சேதப்படுத்தி வருகின்றன என்று தெரிவித்தன.
காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் பாதிப்பு சில ஆண்டுகளுக்கு முன்பு குறைவாக இருந்த நிலையில், தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே பெரும் சவாலாக மாறி வரும் காட்டுப்பன்றிகளைப் பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்கு அப்புறப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைப்பதற்கான திட்டத்தையும் அரசு அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





















