குறுவை பருவத்திற்கேற்ற நெல் இரகங்கள் அவற்றின் குணாதிசயங்கள்: விதைப் பரிசோதனை அலுவலர் ஆலோசனை
குறுவை பருவத்திற்கேற்ற நெல் இரகங்கள் அவற்றின் குணாதிசயங்கள் மற்றும் விதைப்பரிசோதனை முறைகள் குறித்து விவசாயிகளுக்கு தஞ்சாவூர் விதைப் பரிசோதனை அலுவலர் குப்புசாமி ஆலோசனைகள் வழங்கி உள்ளார்.
தஞ்சாவூர்: குறுவை பருவத்திற்கேற்ற நெல் இரகங்கள் அவற்றின் குணாதிசயங்கள் மற்றும் விதைப்பரிசோதனை முறைகள் குறித்து விவசாயிகளுக்கு தஞ்சாவூர் விதைப் பரிசோதனை அலுவலர் குப்புசாமி ஆலோசனைகள் வழங்கி உள்ளார்.
தஞ்சை மாவட்டத்தில் நடப்பாண்டு மேட்டூர் அணை கடந்த 12ம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் 182040 ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
குறுவை நெல் சாகுபடியில் உயர் விளைச்சல் பெற விதை பரிசோதனை அவசியம். தரமான விதைகளின் குணாதிசயங்களான நல்ல முளைப்புத் திறன், பிறரக கலப்பு இல்லாமை, தூய்மை மற்றும் பூச்சி நோய் தாக்கம் இல்லாத விதைகளாக தேர்ந்தெடுத்து விதைத்தல் அவசியமாகும். தரமான அதிக முளைப்புத்திறனுடைய விதைகளை விதைப் பரிசோதனை செய்து விதைப்பு மேற்கொண்டால் வயலில் தகுந்த பயிர் எண்ணிக்கையை பராமரித்து உயர் விளைச்சலைப் பெறலாம்.
நடப்பாண்டில் குறுவை நெல் சாகுபடிக்கு உகந்த நெல் இரகங்களான ஏடீடி-36, ஏடீடி-37, ஏடீடி-43, ஏடீடி (ஆர்)-45, ஏடீடி-47, ஏடீடி-48, ஏடீடி-53 ஏடீடி-55, ஏடீடி-57, ஏஎஸ்டி-16, கோ-51, TPS 5 மற்றும் MDU 6 ஆகிய இரகங்களில் தரமான விதைகளை தேர்ந்தெடுத்து விதைப்பு பணிகளை மேற்கொள்ளுதல் இன்றியமையாததாகும்.
குறுவை பருவத்திற்கேற்ற இரகங்களும் அவற்றின் குணாதிசயங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஏடிடி 36 : வயது 105 நாட்கள், மத்திய சன்ன வெள்ளை அரிசி இரகத்தை சேர்ந்தது. குலை நோய்க்கு எதிர்ப்பு திறன் கொண்டது. குறுவை மற்றும் கோடை பருவத்திற்கு ஏற்ற ரகம். இதேபோல் ஏடிடி 37க்கு வயது 105 நாட்கள். குட்டை பருமனான வெள்ளை அரிசி இரகத்தை சேர்ந்தது. இட்லி குண்டு என்று அழைக்கப்படும் அரிசி. இட்லிக்கு உகந்தது. குறுவை மற்றும் கோடை பருவத்திற்கு ஏற்ற ரகம். ஏடிடி 43 வயது 105 – 110 நாட்கள் ஆகும். மத்திய சன்ன வெள்ளை அரிசி இரகத்தை சேர்ந்தது. குருத்துப்பூச்சி ஆனைக்கொம்பனிற்கு எதிர்ப்புத்திறன் கொண்டது. குறுவை மற்றும் கோடை பருவத்திற்கு ஏற்ற ரகம். ஏடிடி(ஆர்) 45க்கு வயது 110 நாட்கள். மத்திய சன்ன வெள்ளை அரிசி இரகத்தை சேர்ந்தது. ஆனைக்கொம்பன் மற்றும் குருத்துப்பூச்சி ஆகியவற்றிற்கு எதிர்ப்புதிறன் கொண்டது. குறுவை மற்றும் கோடை பருவத்திற்கு ஏற்ற ரகம்.
மேலும் ஏடிடி47க்கு வயது 115 – 120 நாட்கள். அதிக தூர்கட்டும் திறன் கொண்டது. மழையில் சாயாத தன்மையுடையது. அதிக புரோட்டீன் (9.04%) அமைலோஸ் (20.4%) உடையது. மத்திய சன்ன இரகத்தினை சார்ந்தது. இலை உறை அழுகல் மற்றும் துங்ரோவைரஸிற்கு எதிர்ப்பு திறன் கொண்டது. இதேபோல் மற்ற ரகங்களும் அடங்கும்.
நெல் பயிருக்கு குறைந்த பட்சம் 80 சதவீத முளைப்புத்திறன் இருக்க வேண்டும். ஈரப்பதம் அதிகபட்சமாக 13 சதவீதம் இருக்க வேண்டும். விதைகளின் தரத்தை அறிந்து கொள்ள விவசாயிகள் மற்றும் விதை உற்பத்தியாளர்கள், விதை விற்பனையாளர்கள் தங்கள் வசம் உள்ள விதை இரகங்களில் 100 கிராம் என்ற அளவில் மாதிரிகள் எடுத்து விதை மாதிரிகளுடன் தங்கள் பெயர், இருப்பிட முகவரி மற்றும் பகுப்பாய்வு கட்டணமாக ரூ.80 ஐ தஞ்சாவூர் காட்டுத்தோட்டத்தில் இயங்கி வரும் விதைப்பரிசோதனை நிலையத்தில் செலுத்தி விதைகளின் தரத்தினை பகுப்பாய்வு மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
இதனால் விதைக்கானை செலவைக் குறைத்துக் கொள்வதுடன் அதிக மகசூலை பெற்று பயனடையலாம். இவ்வாறு அவர் ஆலோசனை வழங்கி உள்ளார்.