பயிர்க் காப்பீடே வேண்டாம் - மயிலாடுதுறை விவசாயிகள் வேதனை; காரணம் என்ன?
பயிர்க் காப்பீட்டு நிறுவனங்கள் 2,318 கோடியை பெற்றுக்கொண்டு வெறும் 560 கோடி காப்பீட்டு தொகையை வழங்கி ஊழலில் ஈடுபடுகிறது என மயிலாடுதுறையில் விவசாயிகள் குற்றச்சாட்டை தெரிவித்தனர்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் செப்டம்பர் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தின் அனைத்து வட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள், விவசாய பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் குறைகளை ஆட்சியரிடம் தெரிவித்தனர்.
இதில் விவசாயி அன்பழகன் பேசுகையில், ’’தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நெல் பயிருக்கான காப்பீட்டு ப்ரீமியமாக தமிழக அரசு 1375 கோடி ரூபாய், மத்திய அரசு 825 கோடி ரூபாய், விவசாயிகளின் பங்களிப்பாக 120 கோடி ரூபாய் என மொத்தம் 2319 கோடி ரூபாய் காப்பீட்டு நிறுவனத்துக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பான்மையான கிராமங்களுக்கு ஜீரோ பாதிப்பு என பொய்யாக கணக்கு காட்டப்பட்டு, பாதிப்புக்கான நிவாரணத் தொகையாக 560 கோடி ரூபாய் மட்டும் காப்பீட்டு நிறுவனம் வழங்கியுள்ளது.
இந்த காப்பீட்டை தமிழக அரசே எடுத்து நடத்தினால் அரசுக்காவது வருமானம் சென்று சேரும். இல்லாவிட்டால், விவசாயிகளுக்கு காப்பீடே தேவையில்லை. மற்ற மாநிலங்களில் வழங்கப்படுவதைப் போன்று குறுவைக்கு 10,000 ரூபாய், சம்பா பருவத்துக்கு 10,000 ரூபாய் வழங்க வேண்டும்’’ என்றார்.
தொடர்ந்து பேசிய விவசாயி குருகோபி கணேசன் கூறுகையில், ’’மயிலாடுதுறை மாவட்டத்தில் உதவி வேளாண் அலுவலர்கள் காப்பீட்டு நிறுவன ஊழியர்களுடன் இணைந்து முறைகேட்டில் ஈடுபடுகின்றனர் .
Mettur Dam: மேட்டூர் அணையின் நீர்வரத்து 5,299 கன அடியில் இருந்து 4,524 கன அடியாக குறைவு...
பயிர் பாதிப்பு உள்ளது போல கணக்கு காட்டுவதற்காக பணம் கொடுக்கும் கிராமங்களுக்கு மட்டும் நிவாரணத் தொகை அறிவிக்கப்படுகிறது’’ என்று மாவட்ட ஆட்சியர் முன்னிலையிலேயே பகீர் குற்றச்சாட்டு தெரிவித்தார்.
இந்த ஊழலை தடுக்க 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றும் வேளாண் அலுவலர்களை வேறு இடத்துக்கு பணிமாற்றம் செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, விவசாயிகளின் கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்துவதாகவும், உரிய விசாரணை செய்து பரிசீலித்து இந்த குற்றச்சாட்டுகள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
Rameswaram: ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை.. மணிக்கு 65 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்..
மேலும் பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்ட வழிகாட்டு நெறிமுறையின்படி 2022-23 விதைப்பு பொய்த்தல் இனத்தின் கீழ் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம் மற்றும் செம்பனார்கோயில் வட்டாரங்களில் 75 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட 87 கிராமங்களுக்கு முதல் தவணையாக 38,650 விவசாயிகளுக்கு 49.68 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதில் 95.9 லட்சம் ரூபாய், 485 விவசாயிகளுக்கு வங்கி கணக்கு சரிபார்க்க இயலாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்த இன்சூரன்ஸ் நிறுவனத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முன்னதாக, கூட்டுறவுத்துறையின் சார்பில் கிளியனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலமாக தலா 45 ஆயிரம் ரூபாய் வீதம் 24 மகளிருக்கு கறவை மாடு வாங்குவதற்காக 10.80 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயகன் அமல்ராஜ், வேளாண்மை துறை இணை இயக்குநர் சேகர், நீர்வளத்துறை செயற்பொறியாளர் சண்முகம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயபாலன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.