மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - பாசன விவசாயிகள் மகிழ்ச்சி
டெல்டா பாசன பகுதியில், குருவை சாகுபடிக்காக காவிரி ஆற்றில், 27 ஆயிரத்து, 787 கன அடி தண்ணீரும் நான்கு பாசன கிளை வாய்க்காலில், 1,020 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. காலை 6:00 மணி நிலவரப்படி, 28 ஆயிரத்து, 807 கன அடி ஆக தண்ணீர் வரத்து அதிகரித்தது. டெல்டா பாசன பகுதியில், குருவை சாகுபடிக்காக காவிரி ஆற்றில், 27 ஆயிரத்து, 787 கன அடி தண்ணீரும் நான்கு பாசன கிளை வாய்க்காலில், 1,020 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
அணைக்கு வரும் தண்ணீர் அளவைப் பொறுத்து கடந்த 20 நாட்களாக அதிகபட்சமாக 2,500 கன அடி முதல் 200 கன அடி வரை முறை வைத்து தண்ணீர் திறக்கப்பட்டது. அமராவதி அணை நிரம்பும் நிலையில் கரூர் மாவட்டத்தில், ஆற்றுப் பாசன பகுதிகளில், விவசாயிகள் நெல் சாகுபடிக்காக பணிகளை தொடங்கியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி அணைக்கு, வினாடிக்கு 949 கனஅடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு 400 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில், 400 கன அடியும் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம், 88.59 அடியாக இருந்தது. அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் கரூர் அருகே, பெரியாண்டாங்கோவில் தடுப்பணைக்கு, வினாடிக்கு 306 கன அடி தண்ணீர் வந்தது.
நங்காஞ்சி அணை திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட நங்காஞ்சி அணை நீர்மட்டம் தற்போது 33.92 அடியாக உள்ளது. நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் க. பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை நிலவரப்படி தண்ணீர் அணைக்கு வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 16.23 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 15 நாட்களுக்கும் மேலாக கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளுக்கும் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்திருந்தது. 2 தினங்களுக்கு முன்பு மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து படிப்படியாக சரிந்து கொண்டே வந்தது. இதனால் பாசன விவசாயிகள் மிகுந்த சோகத்தில் இருந்தனர். தற்போது மாயனூர் ஆற்றுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்