Dragon Fruit: கொஞ்சம் தண்ணீர் நிறைய மகசூல், மக்களுக்கு மகத்துவம் தெரியாததால் விலை இல்லை - விவசாயி வேதனை
மொரப்பூர் அருகே போதிய மழை மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால், மருத்துவ குணம் வாய்ந்த ட்ராகன் பழ சாகுபடிக்கு மாறி, குறைந்த தண்ணீரில் ‘டிராகன்’ பழ சாகுபடி செய்யும் விவசாயி-போதிய விலை இல்லை என வேதனை.
தர்மபுரி மாவட்டத்தில் போதிய பருவமழை இன்மை நீர் பாசன திட்டங்கள் இல்லாததால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாய பயிர்கள் போதிய மகசூல் இல்லாமல் வேலை கிடைக்காமல் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மொரப்பூர் அடுத்த செட்ரப்பட்டியை சேர்ந்த விவசாயி தமிழ்மணி, தனது நிலத்தில் நெல், மஞ்சள், மரவள்ளி போன்ற பயிர்களை சாகுபடி செய்து வந்துள்ளார்.
தண்ணீர் தேவை மிகவும் குறைவு
ஆனால் தண்ணீர் பற்றாக்குறையால், வருவாய் இல்லாமல் ஆண்டுதோறும் நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிப்பதற்காகவும், வறட்சி மிகுந்த மாவட்டத்தில் அதிக நீர்வளம் இல்லாத, வறட்சியை தாங்கும் வகையிலும், நவீன சூழலில் சந்தை வாய்ப்புக்கு ஏற்ற வகையிலுமான டிராகன் பழம் குறித்து அறிந்து, அதனை ஓசூரிலிருந்து ஒரு செடி 50 ரூபாய் என சுமார் 1000 செடிகளை வாங்கி, 1 ஏக்கர் நிலத்தில் வைத்து, அதற்கு சிமெண்ட் கால் வைத்து பராமரித்துள்ளார்.
ஓராண்டுக்குப் பிறகு பலன்
தொடர்ந்து டிராகன் பழ செடிகள் நடவு செய்த 1 ஆண்டுகளுக்கு பிறகே பலன் தரத் தொடங்கியுள்ளது. மேலும் ஒரு முறை டிராகன் பல செடிகள் நட்டு வைத்தால் 15 ஆண்டுகள் வரை இதில் அறுவடை செய்து கொள்ளலாம். அதேப்போல் ஆண்டுக்கு ஒரு முறை கவாத் செய்ய வேண்டும்.
இதில் வெட்டி எடுக்கின்ற தண்டுகளை பதியும் போட்டு மற்ற இடங்களுக்கும் செடி வைத்து சாகுபடி பரப்பை விரிவுப்படுத்த கொள்ளலாம். இந்தச் செடிகளுக்கு ஈரப்பதம் மட்டும் இருந்தால் போதும்.
கோடை வெயில் நேரத்தில் செடிகளுக்கு வெயிலின் தாக்கத்தால் காயும் சூழல் ஏற்பட்டு விடுகிறது. மீண்டும் மழை வருகின்ற பொழுது செடியில் துளிர் விட்டு வருகிறது. நோய்த் தாக்குதல் எதுவும் இல்லை என்பதால் பூச்சிக்கொல்லி தெளிப்பும் இல்லை.
செவ் எறும்புகளால் பாதிப்பு
சில நேரம் செவ்வெறும்புகளாலும், வேர்ப்புழுக்களாலும் செடிகளுக்கு சேதம் ஏற்படும். அதை மட்டும் முறையாக நிர்வகித்து கட்டுப்படுத்த வேண்டும். ஏப்ரல் தொடங்கி அக்டோபர் வரை இந்த பழங்களுக்கான சீசன். பூ தருணத்தில் செயற்கை மகரந்த சேர்க்கை மேற்கொண்டால் பழங்களின் அளவு பெரிதாகக் கிடைக்கும். ஒரு மொக்கு பூவாகி, காயாகி பழமாக 27 நாட்கள் தேவைப்படும்.
டிராகன் கால்சியம் வைட்டமின் நிறைந்த பழம்
இந்த பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி-3 போன்ற சத்துக்கள் இருப்பதாகவும், ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற பிரச்சினை உள்ளவர்களுக்கும் சிறந்த பலன் தருவதாகவும் மருத்துவ உலகம் கூறுவதால் டிராகன் பழங்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நிலத்தில் விளையும் பழம் ரூ.40 முதல் ரூ.50 எனவும், கிலோ ரூ.100 வரையிலான விலையில் விற்பனை செய்துள்ளனர். ஆனால் வாங்கிச் செல்லும் வியாபாரிகள் பழம் ரூ.100 வரை கூட விற்பனை செய்கின்றனர்.
சரியான விலை கிடைக்காததால் விவசாயி வேதனை
மேலும் கட்டுப்படி ஆகும் விலையில் விற்பனை செய்தால் அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த பழத்தின் நன்மைகள் சென்றடையும் என்பதால், லாப நோக்கத்தை தவிர்த்து குறைந்தபட்ச விலையில் விற்பனை செய்கின்றனர். மேலும் பராமரிப்பு செலவு அதிகமாக இருப்பதால், விலை குறைவாக இருந்து வருகிறது. இதனால் போதிய வருவாய் கிடைக்கவில்லை.
டிராகன் பழம் கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்தால், நல்ல வருவாய் கிடைக்கும். மேலும் இந்த பழத்தின் மகத்துவம் மக்களுக்கு தெரிய வரும் நாட்களில், டிராகன் பழத்திற்கு நல்ல சந்தை வாய்ப்பும், நல்ல விலையும் கிடைக்கும் என விவசாயி தமிழ்மணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.