தஞ்சாவூர் : தென்னை விவசாயிகள் தேங்காய் உடைத்து நூதன முறையில் போராட்டம்.. கோரிக்கை என்ன?
விவசாயிகள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேங்காயை உடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த விவசாயிகள் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் அளித்தனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் தென்னை சாகுபடியில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு இருந்தனர். கஜா புயலின் போது லட்சக்கணக்கான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்ததால் விவசாயிகள் பெரியளவில் பாதிக்கப்பட்டனர். மிஞ்சிய தென்னை மரங்களை பாதுகாத்து வருகின்றனர் விவசாயிகள். இந்நிலையில் தற்போது தென்னை விவசாயிகளிடம் தேங்காய் கொள்முதல் செய்வது அடிமாட்டு விலைக்கு கேட்கப்படுகிறதாம். இதற்கு அரசு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையுடன் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தேங்காய் உடைப்பு நூதன போராட்டம் நடத்தினர். இது குறித்து தென்னை உற்பத்தியாளர் சங்க தலைவர் மல்லிப்பட்டினம் கமால் பாட்சா தலைமையில் பாசனதாரர் சங்க தலைவர் பொன்வராயன் கோட்டை வீரசேனன், ஆழ்துளை விவசாய பாசன சங்க ஒன்றிய தலைவர் முருகேசன், பாசனதாரர் சங்க தலைவர் 2ம் புலிகாடு ராமகிருஷ்ணன், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுந்தர விமலநாதன், ஆம்பலாப்பட்டு தங்கவேல் உட்பட ஏராளமான விவசாயிகள் திடீரென ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து தேங்காயை அடிமாட்டு விலைக்கு வாங்குவதால் கட்டுப்படியாவதில்லை, ரூ.8-க்கு கூட தேங்காய் விற்க முடியாததால் வாழ்வாதாரம் இழந்துள்ளோம். எனவே உரித்த தேங்காயை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதனை தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் விரைந்து வந்து உங்கள் கோரிக்கைகள் குறித்து ஆட்சியரிடம் மனுவாக கொடுங்கள் என்று கூறினர். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பின்னர் கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது.., பாசனதாரர் சங்க தலைவர் ஆம்பலாப்பட்டு தங்கவேல் கூறுகையில் .. நல்ல தரமான விதை விதைத்தால்தான் விளைச்சல் சிறப்பாக இருக்கும். பட்டுக்கோட்டை பகுதியில் விதை நெல்லில் அகத்தூய்மை, புறத்தூய்மை அகற்றாத கலப்பின நெல்விதைகளை கூடுதல் விலைக்கு தனியார் கடைகளில் விற்பனை செய்கின்றனர் என்றனர்.
தென்னை உற்பத்தியாளர் சங்க தலைவர் மல்லிப்பட்டினம் கமால்பாட்சா தெரிவித்தது : நெல், கரும்புக்கு அடுத்து பெரிய அளவில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், கடந்த ஆண்டு தேங்காய் ரூ. 22க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ. 8க்கு கூட விலை கேட்க ஆளில்லை. தென்னை விவசாயிகள் இதனால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
எனவே, நெல், கரும்புபோல தேங்காய்களையும் அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். மதுக்கூர் ராமச்சந்திரன் பேசுகையில், தேங்காய் விலை வீழ்ச்சியால் தென்னை விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதுதொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.