விவசாயிகளின் வியர்வை... கடந்த ஆண்டை விட இலக்கை மிஞ்சி குறுவை சாகுபடியில் நடந்துள்ள சாதனை
தற்போது குறுவை சாகுபடி பணிகள் முடிவடைந்துள்ளன. அதன்படி டெல்டா மாவட்டங்களில் 5 லட்சத்து 65 ஆயிரத்து 797 எக்கரில் குறுவை சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தஞ்சாவூர்: அதிகம்ங்க... கடந்த ஆண்டை விட அதிகம்ங்க... கடுமையான உழைப்பை கொடுத்த விவசாயிகளின் சாதனையாக இது பார்க்கப்படுகிறது.
தஞ்சை மாவட்டத்தில் குறுவை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 1 லட்சம் ஏக்கரில் அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மகசூல் அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். அதன்படி குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா, தாளடி சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.
ஆனால் கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் 100 அடிக்கும் மேல் தண்ணீர் இருந்ததால் குறிப்பிட்ட தேதியில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்தவுடன் கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் ஜூன் 15ந் தேதி தண்ணீர் பிரித்து விடப்பட்டது.
இதையடுத்து பாசன வாய்க்கால்களில் தண்ணீர் கடைமடை பகுதியை சென்றடையும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து குறுவை சாகுபடி பணிகளும் தீவிரமாக நடைபெற்றது. நடவு மூலமும், நேரடி நெல் விதைப்பு மூலமும் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு தேவையான விதை நெல், உரம் மற்றும் இடுபொருட்களும் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டன.
அதன்படி ஜூலை மாதம் இறுதிவரை குறுவை சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்படும் என வேளாண்மைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்படி தற்போது குறுவை சாகுபடி பணிகள் முடிவடைந்துள்ளன. அதன்படி டெல்டா மாவட்டங்களில் 5 லட்சத்து 65 ஆயிரத்து 797 எக்கரில் குறுவை சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்மூலம் நடப்பு ஆண்டு டெல்டா மாவட்டங்களில் இலக்கை தாண்டி குறுவை சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தஞ்சை மாவட்டத்தில் 14 ஒன்றியங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் 1 லட்சத்து 91 ஆயிரத்து 125 ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தற்போது இலக்கை தாண்டி 1 லட்சத்து 97 ஆயிரத்து 500 ஏக்கரில் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதாவது 6 ஆயிரத்து 375 ஏக்கர் கூடுதல் சாகுபடி பணிகள் நடைபெற்றுள்ளன. தற்போது குறுவை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது விவசாயிகளின் கடுமையான உழைப்பை காட்டுகிறது.
தஞ்சை, ஒரத்தநாடு, பாபநாசம், திருவோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளில் குறுவை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 1 லட்சம் ஏக்கரில் குறுவை அறுவடைபணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள பகுதிகளில் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தஞ்சை மாவட்டத்தில் தற்போது எக்டேருக்கு 5,700 கிலோ சராசரியாக மகசூல் கிடைத்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக எக்டேருக்கு 7 ஆயிரத்து 510 கிலோவும், குறைந்த அளவாக எக்டேருக்கு 4 ஆயிரத்து 180 கிலோவும் மகசூல் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு குறுவையில் எக்டேருக்கு 4 ஆயிரத்து 850 கிலோ மகசூல் சராசரியாக கிடைத்தது. தற்போது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 850 கிலோ மகசூல் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு 3 லட்சத்து 7 ஆயிரத்து 623 ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான விதை நெல், உரம், வேளாண் இடுபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் ஏ.டி.டி 51, சி.ஆர். -1009, சி.ஆர். 1009 சப்-1, ஏ.டி.டி 54, ஏ.டி.டி. 52, கோ-50 பி.பி.வி. 5204 போன்ற ரகங்கள் அதிக அளவில் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
தற்போது நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவுப்பணிகள் மூலம் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது வரை 10 ஆயிரம் ஏக்கரில் சம்பா நடவுப்பணிகள் நிறைவடைந்துள்ளன. மற்ற பகுதிகளில் நடவுப்பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.





















