இனி தான் ஆட்டமே... கொட்டப் போகும் பருவமழை! தீபாவளி நிலைமை என்ன?
தமிழ்நாட்டில் நாளை ஆட்டத்தை ஆரம்பிக்கிறது வடகிழக்கு பருவமழை. எந்தெந்த இடங்களில் மழை வெளுத்து வாங்கப் போகிறது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல் தீபாவளி அன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டிற்கு அதிகபடியான மழையை தரக்கூடிய பருவமழையாக வடகிழக்கு பருவமழை இருக்கிறது. வழக்கமாக வடகிழக்கு பருவமழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களுக்கு பெய்யக்கூடும். பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே தமிழகத்தில் மிதமான மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு மிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் சென்னையில் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான - கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பாகவும், இயல்பை விட அதிகமாகவும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தீபாவளியையொட்டி வடகிழக்கு பருவமழை ஆரம்பமாவதால் தீபாவளி அன்று மழை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்தநிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தீபாவளி அன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். வட மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தீபாவளி நேரத்தில் பருவமழை தொடங்குவதால் வியாபாரிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.





















