Child Kidnap CCTV : தந்தை முகத்தில் மிளகாய் பொடிகுழந்தையை கடத்திய மர்ம கும்பல்பகீர் CCTV காட்சி
வீட்டு வாசலிலேயே வைத்து தந்தை மீது மிளகாய் பொடி தூவி மர்ம கும்பல் ஒன்று குழந்தையை கடத்தி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக களத்தில் இறங்கிய போலீசார் 2 மணி நேரத்திலேயே குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்ததை சேர்ந்த வேணு ஜனனி தம்பதிக்கு 4 வயதில் யோகேஷ் என்ற மகன் இருக்கிறார். யோகேஷ் அருகே இருக்கும் தனியார் பள்ளியில் Pre kg படித்து வருகிறார். மதியம் 12:30 மணிக்கு தனது மகனை பள்ளியில் இருந்து அழைத்து வந்த வேணு வாசலில் நின்று கொண்டிருந்துள்ளார். அங்கு ஏற்கனவே கர்நாடகா பதிவு எண் கொண்ட கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. தலைக்கவசத்துடன் காரில் இருந்து இறங்கிய மர்ம நபர் ஒருவர் வேணு மீது மிளகாய் பொடி தூவி குழந்தையை காரில் கடத்தி சென்றார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக குடியாத்தம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணையில் இறங்கினர்.
உடனடியாக வேலூர் SP மயில்வாகனன் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குழந்தை தேடப்பட்டு வந்த நிலையில் மாதனூர் தேசிய நெடுஞ்சாலையோரம் தனியாக நின்று கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. பின்னர் குழந்தை பள்ளிகொண்டா காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு வேலூர் மாவட்ட எஸ்பி மயில்வாகனின் விசாரணைக்குப் பிறகு குழந்தை பத்திரமாக பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 2 மணி நேரத்திலேயே குழந்தையை மீட்ட காவல்துறையினருக்கு பெற்றோர் கண்கலங்க நன்றி தெரிவித்தனர்.
கடத்தியவர்கள் தப்பியோடிய நிலையில், மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். குழந்தை கடத்தலுக்கான காரண குழந்தை கடத்தலுக்கான காரணமும் தெரியாததால் அதுதொடர்பான விசாரணையும் வேகமெடுத்துள்ளது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரின் நம்பர் பிளேட் போலியானது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வீட்டு வாசலிலேயே வைத்து தந்தை கண்முன்னே குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் குடியாத்தத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





















