ரிதன்யா புது ஆடியோ? கணவர் பகீர் புகார்! தோழிகளிடம் பேசியது என்ன?
தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என ரிதன்யா தனது தோழியிடம் பேசிய ஆடியோ இருப்பதாக நீதிமன்றத்தை நாடியுள்ளார் கணவர் கவின்குமார். ரிதன்யாவின் செல்போன்களை ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 27 வயதான ரிதன்யா திருமணமான சில நாட்களிலேயே வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டு உருக்கமான ஆடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார் ரிதன்யா. தனது கணவர் கவின்குமாரும், அவரது குடும்பத்தினரும் எந்த அளவுக்கு கொடுமைப்படுத்தினார்கள் என்று பேசியிருந்தது அனைவரையும் கண்கலங்க வைத்தது.
இந்த வழக்கில் கணவா் கவின்குமாா், மாமனாா் ஈஸ்வரமூா்த்தி, மாமியாா் சித்ரா தேவி ஆகியோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மூன்று பேரும் ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடிய நிலையில், 3 பேருக்கும் நிபந்தனை ஜாமின் கிடைத்தது. இந்தநிலையில் மகளை பறிகொடுத்த தந்தை அண்ணாதுரை ஜாமினுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ரிதன்யா வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற அவரது கோரிக்கைக்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
இந்தநிலையில் ஜாமினில் வெளியே வந்த கவின்குமார் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். வீட்டிற்கு வந்த பிறகு ரிதன்யாவின் 2 செல்போன்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், செல்போன்களை ஆய்வு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை நீதிமன்றத்திற்கு வந்த போது, திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என ரிதன்யா தனது தோழிகளிடம் பேசிய ஆதாரங்கள் இருப்பதாக கவின்குமார் தரப்பில் வாதிடப்பட்டது. அதேபோல் செல்போன்களை ஆய்வு செய்ய காவல்துறையினரிடம் கூறியபோது அவர்கள் மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் செல்போன்களை புலன் விசாரணை அதிகாரியிடம் ஒப்படைத்தால் அவை ஆய்வு செய்யப்படும் என காவல்துறை தரப்பில் பதில் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து ரிதன்யாவின் 2 செல்போன்களையும் தடயவியல் சோதனைக்கு உட்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரிதன்யா ஆடியோ தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், கவின்குமார் புதிய ஆடியோ இருப்பதாக நீதிமன்றத்தில் சொல்லியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.





















