Rahul, Priyanka Visit Sambhal : ”உள்ளே வராதீங்க ராகுல்” தடுத்து நிறுத்திய போலீசார் பாத்துக்கலாம் Bro! பிரியங்கா சவால்!
சம்பல் மாவட்டத்திற்கு செல்ல முயன்ற ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் காரை டெல்லி- உ.பி எல்லையிலேயே போலீசார் தடுத்து நிறுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் நகரில் உள்ள முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஷாஹி ஈத்கா ஜாமா மசூதியை அண்மையில் ஆய்வு செய்ய சென்றபோது அதிகாரிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஏற்கெனவே கோவில் இருந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டிருப்பதாக வந்த புகாரையடுத்து அங்கு ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டது. இது கலவரமாக மாறியதில் 4 இஸ்லாமியர்கள் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயமடைந்தனர். இந்த வன்முறை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. அதன் தொடர்ச்சியாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, உத்தரபிரதேசத்தை சேர்ந்த மற்ற 5 கட்சி எம்.பி.க்களுடன் இன்று சம்பலுக்கு சென்றார். ராகுல் காந்தியுடன் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வயநாடு எம்பி பிரியங்கா காந்தியும் உடன் சென்றுள்ளார்.
இந்தநிலையில் டெல்லி- உ.பி எல்லையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் காரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். சம்பல் மாவட்டத்தில் வெளி ஆள்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், வன்முறை பகுதியை ஆய்வு சென்ற ராகுல் காந்தி மற்றும் உடன் வந்த பிரியங்கா காந்தி வாந்த காரை வழி மறைத்து போலீசார் அங்கு தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.