பனையூருக்கு வரும் 41 குடும்பங்கள்"கரூர் போகவே மாட்டிங்களா விஜய்?"வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் | Karur Stampede | TVK Vijay |
கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சென்று சந்திக்காமல் பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு அழைத்து விஜய் சந்திக்க இருக்கும் செயல் அவருக்கே பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றே கருதப்படுகிறது.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திமுக, அதிமுக போன்ற மிகப்பெரிய கட்சிகள் தமிழ்நாட்டில் இருந்தாலும் தமிழக அரசியலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் கட்சியாக உருவெடுத்திருப்பது தமிழக வெற்றிக் கழகம். அதற்கு காரணம் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய்.
கடந்தாண்டு அரசியல் கட்சி தொடங்கி ஆமை வேகத்தில் செயல்பட்ட விஜய் கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக செயல்பட்டு வந்தார். ஆனால், கரூரில் நடந்த சம்பவம் அவரது அரசியல் வாழ்வில் பெரும் துயர சம்பவமாக மாறியது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய்யைப் பார்க்க வந்த ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி பச்சிளங்குழந்தை உள்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை தமிழ்நாடு முழுவதும் உண்டாக்கியது.
இந்த மரணத்திற்கு பிறகு விஜய் மற்றும் தவெக-வின் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் மிகுந்த வேதனையையும், அதிருப்தியையும் உண்டாக்கியது. இந்த துயர சம்பவம் நடந்து ஒரு மாதமாக உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்காக விஜய் இரங்கல் தெரிவித்தார், அவர்களது வங்கிக் கணக்கிலே ரூபாய் 20 லட்சம் நிவாரணத் தொகையை தவெக வழங்கியது, பாதிக்கப்பட்ட மக்களுடன் வீடியோ காலில் பேசினார் என்றாலும், ஒரு முறை கூட அவர்களை நேரில் சென்று சந்திக்கவில்லை. இது மக்கள் மத்தியில் விஜய் மீது மிகப்பெரிய அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் நேரில் சென்று சந்திக்காமல் அவரது அடுத்தகட்ட அரசியல் பயணமும் தேங்கியுள்ளது. இந்த நிலையில், கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சென்னைக்கு அழைத்து வந்து அவர்களை விஜய் சந்திக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட 41 குடும்பத்தினரையும் நேரில் அழைத்து வந்து மாமல்லபுரத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைத்து ஒவ்வொரு குடும்பத்தினரையும் தனித்தனியாக சந்திக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. விஜய் மீண்டும் கரூருக்குச் சென்றால் மீண்டும் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் விஜய் இந்த முறையில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க உள்ளதாக தவெக தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால், ஒரு துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திக்காமல் அவர்களை வரவழைத்து துக்கம் விசாரிப்பது என்பது எந்த வகையான நாகரிகம்? என்று பலரும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். இதை கடந்து தங்களுக்கு ஒரு துயரம் என்றால் நேரில் வராமல் தங்களை நேரில் அழைப்பது விஜய்க்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை சறுக்கவே? என்று அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
விஜய் கரூர் செல்ல பல்வேறு சலுகைகளுடன் அனுமதி வழங்க வேண்டும் என்று காவல்துறையினரிடம் தவெக தரப்பில் ஏற்கனவே மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் கேட்கும் சலுகைகளை வழங்குவது என்பது சாத்தியமற்றது என்பதால் காவல்துறையினர் அவருக்கு அனுமதி வழங்க தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், தன்னுடைய அடுத்தகட்ட அரசியல் தேங்கியிருப்பதால் பாதிக்கப்பட்ட கரூர் மக்களை நேரில் வரவழைக்க விஜய் முடிவு செய்திருப்பது அவருக்கே எதிர்வினையாற்றுவதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாக இருப்பதாகவே கூறப்படுகிறது. எந்த ஒரு துயர சம்பவத்திற்கும் நேரில் வராத ஒருவர் எப்படி மக்களுக்கான தலைவராக இருக்க முடியும்? என்ற கேள்விகளே அதிகளவில் எழும்பும்.
இதனால், விஜய் இந்த விவகாரத்தை பக்குவமாக கையாண்டால் மட்டுமே அது அவரது அரசியல் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதாக மாறும். விஜய் மீது பனையூர் பண்ணையார் என்ற விமர்சனம் ஏற்கனவே உள்ள நிலையில், இந்த விவகாரத்தை இவர் இப்படி கையாண்டால் இந்த விமர்சனம் மேலும் வலுவாகும் என்பதே நிதர்சனம்.





















