”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஏற்பாடு செய்துள்ள ஈரோடு பொதுக்கூட்டம் விஜய்க்கு டர்னிங் பாயிண்டாக இருக்கும் என தவெகவினர் நம்பிக்கையுடம் இருக்கின்றனர். பொதுக்கூட்டத்தில் 10 நிமிடங்கள் மட்டும் பேசுவது எந்த பலனையும் கொடுக்காது, குறைந்தது 30 நிமிடங்களாவது பேசுங்கள் என விஜய்க்கு செங்கோட்டையன் அட்வைஸ் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தவெக தலைவர் விஜய் 2026 தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், நாளை ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இந்த ஈரோடு கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மிகத் தீவிரமாகச் செய்து வருகிறார். இதற்காக விஜயபுரி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான மைதானத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. கொங்கு மண்டலம் அரசியல் ரீதியாக மிக முக்கியமானது என்பதால், அங்கு தனது செல்வாக்கை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் விஜய் உள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தவெகவில் செங்கோட்டையனும் கொங்கு மண்டலத்தை தனது இடத்தை பிடிப்பதற்கான கட்டாயத்தில் இருக்கிறார்.
கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு ஒரு திறந்தவெளி மைதானத்தில் விஜய் பங்கேற்கும் முதல் பெரிய பொதுக்கூட்டம் இது என்பதால், காவல்துறை பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தக் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் விஜய் அதிக நேரம் பேச வேண்டும் என மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அவருக்கு அட்வைஸ் கொடுத்துள்ளதாக சொல்கின்றனர். விக்கிரவாண்டி மாநாட்டில் 46 நிமிடங்களும், மதுரை மாநாட்டில் 35 நிமிடங்களும் விஜய் பேசியிருந்தார். அதன்பிறகு பிரச்சார பயணங்களில் 10 நிமிடங்களுக்கும் குறைவாகவே பேசியிருந்தார். சமீபத்தில் நடந்த புதுச்சேரி பொதுக்கூட்டத்திலும் 12 நிமிடங்கள் மட்டுமே பேசியிருந்தார். விஜய்யின் பேச்சை கேட்பதற்காக கால்வலிக்க நீண்ட நேரம் காத்திருக்கும் தொண்டர்களுக்கு இந்த 10 நிமிட உரை ஏமாற்றத்தையே கொடுக்கிறது.
அதனால் ஈரோடு பொதுக்கூட்டத்தில் ஒரு மாற்றமாக குறைந்தது 30 நிமிடங்களாவது விஜய் பேசுவார் என சொல்கின்றனர். அதனால் ஈரோட்டில் விரிவான அரசியல் கருத்துகள் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பாக விஜய் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.





















