ஆட்டோ, விசில், பேட்... விஜய்யின் 10 சின்னம்! தேர்தல் ஆணையத்தில் தவெக
ஆட்டோ, விசில், கிரிக்கெட் மட்டை உள்ளிட்ட 10 சின்னங்களை குறிப்பிட்டு தேர்தலுக்காக தவெகவுக்கு சின்னம் ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளார் விஜய்.
2026 சட்டப்பேரவை தேர்தலை குறிவைத்து அரசியல் எண்ட்ரி கொடுத்தார் விஜய். மற்ற தேர்தல்களில் போட்டியிடாமல் நேரடியாக சட்டப்பேரவை தேர்தலில் மட்டுமே களமிறங்குவதாக ஆரம்பத்திலேயே அறிவித்துவிட்டார். சுற்றுப்பயணம், கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவதில் விஜய் தீவிரம் காட்டிய நிலையில் கரூர் சம்பவத்திற்கு பிறகு சைலண்ட் மோடுக்கு போனார்,
இந்தநிலையில் தவெகவில் தேர்தல் வேலைகள் மீண்டும் வேகமெடுத்துள்ளன. இதன் ஒரு பகுதியாக கட்சிக்கான பொது சின்னம் ஒதுக்க வேண்டுமென இந்திய தேர்தல் ஆணையத்திடம் தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கட்சியின் இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், தவெக மாநில நிர்வாகிகள் புஷ்பவனம் குப்புசாமி, அர்ஜுனமூர்த்தி, உள்ளிட்டோர் டெல்லியில் சென்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் மனுவை வழங்கியுள்ளனர்.
மனுவில் 10 விருப்ப சின்னங்களின் பட்டியலையும் தவெக கொடுத்துள்ளது. விசில், ஆட்டோ, கிரிக்கெட் மட்டை, சாம்பியன் கோப்பை உள்ளிட்ட 10 சின்னங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பு பொது சின்னம் கோரி கட்சிகள் விண்ணப்பிக்கலாம். தவெக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில் டிசம்பர் மாத இறுதிக்குள் தேர்தல் ஆணையம் சின்னத்தை ஒதுக்கும் என சொல்கின்றனர்.
234 தொகுதிகளிலும் போட்டியிட தயாராக உள்ளதால், பொது சின்னம் உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இளைஞர்களின் வாக்குகளை குறிவைத்து விஜய் களமிறங்குவதால், இளைஞர்களுக்கு நெருக்கமாக இருக்கக் கூடிய வகையில் சின்னத்தை தேர்ந்தெடுத்து விஜய் பட்டியல் கொடுத்துள்ளதாக சொல்கின்றனர். மக்களுக்கு எளிதில் நினைவில் இருக்கும் வகையிலான சின்னத்தை தேர்ந்தெடுத்து பட்டியல் தயாரானதாக சொல்கின்றனர்.
இனி வரும் நாட்களில் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என அடுத்தடுத்த வேலைகள் இருக்கும் என்பதால் முன்னதாகவே பொது சின்னத்தை வாங்கிவிடலாம் என கணக்கு போட்டு விஜய் காய் நகர்த்தியிருக்கிறார்.





















