”ஐயா நல்லா இருக்கீங்களா” ராமதாஸ்-க்கு திருமா CALL! கூட்டணி கணக்கு என்ன?
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ராமதாஸை செல்போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார் திருமாவளவன். ராமதாஸ் விவகாரத்தில் திருமாவளவன் நிலைப்பாடு என்ன என்று பாமக மற்றும் விசிக வட்டாரத்தில் விவாதம் எழுந்துள்ளது.
உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாமக நிறுவனர் ராமதாஸை முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் உடனடியாக அங்கு வந்த பாமக தலைவர் அன்புமணி, ராமதாஸை சந்திக்காமல் திரும்பினார். தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதால், அவரை நேரில் பார்க்க முடியவில்லை டாக்டரிடம் தான் பேசினேன் என அன்புமணி தெரிவித்தார்.
திமுக மற்றும் அதிமுக தரப்பில் இருந்து ராமதாஸை சந்திக்க வந்ததை பார்க்கும் போது சில கூட்டணி கணக்குகளுக்கான அறிகுறிகளும் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது. அந்தவகையில் ராமதாஸை விசிக தலைவர் திருமாவளவன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளது பாமக, விசிக வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. ராமதாஸிடம் உடல்நலம் தொடர்பாக திருமாவளவன் விசாரித்துள்ளார். ராமதாஸ் முழுமையாக நலம்பெற வேண்டுமென விசிக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்தேன் என திருமாவளவன் கூறியுள்ளார்.
ராமதாஸ் திமுக கூட்டணி பக்கம் சாய்வதற்கு விரும்புவதாக கடந்த சில மாதங்களாகவே பேச்சு இருக்கிறது. ஆனால் ராமதாஸ்-ன் விருப்பத்திற்கு தடையாக இருப்பது விசிக தலைவர் திருமாவளவன். என்ன ஆனாலும் சரி, பாமக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்காது என்பது திருமாவளவனின் அஜெண்டாவாகவே இருக்கிறது. ஆனால் சமீபத்தில் ராமதாஸ்-க்கு ஆதரவாக கருத்து தெரிவித்த திருமாவளவன், ந்தை என்கிற முறையிலும், அனுபவம் பெற்றவர் என்ற முறையிலும் அவரது சொல்லுக்கு கட்டுப்பட்டு அன்புமணி கட்சியை நிர்வகிக்க வேண்டும் என அட்வைஸ் கொடுத்தார். பாமகவை பந்தாடி வந்த திருமாவளவன், ராமதாஸ்-க்கு ஆதரவாக பேசியதை வைத்து அவர் கூட்டணிக்கு தயாராகி விட்டாரா என்ற கேள்வி வந்தது. அதன்பிறகும் பாமக கூட்டணிக்கு வந்தால் விசிக உடனே வெளியேறிவிடும் என்பதில் பிடிவாதமாக இருந்தார் திருமாவளவன்.
தற்போது ராமதாஸிடம் திருமாவளவன் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. ராமதாஸ் விவகாரத்தில் திருமாவளவனின் நிலைப்பாடு என்ன என்று பேசி வருகின்றனர். இருந்தாலும் பாமகவுடன் திருமாவளவன் கூட்டணி வைக்க மாட்டார், மரியாதை நிமித்தமாக தான் ராமதாஸிடம் அவர் நலம் விசாரித்ததாக விசிகவினர் சொல்லி வருகின்றனர்.





















