ஆப்புவைத்த சொந்த கட்சியினர்! விழிபிதுங்கி நிற்கும் தேஜஸ்வி! காரை மறித்து போராட்டம்
யாருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்பதில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவையே மிரட்ட ஆரம்பித்திருக்கிறார்கள் சொந்தக் கட்சி நிர்வாகிகள். லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவின் வீட்டிற்கே சென்று கட்சிக்காரர்கள் போராட்டம் நடத்துவது பரபரப்பை கிளப்பியுள்ளது.
243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்றத்துக்கு அடுத்த மாதம் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6ம் தேதியும், 122 தொகுதிகளுக்கு நவம்பர் 11ம் தேதியும் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனை தொடர்ந்து நவம்பர் 14ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணியும், தேஜஸ்வி யாதவ் தலைமையில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியும், பிரசாந்த் கிஷோர் தனித்தும் களத்தில் மோதுகின்றனர்.
தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி வேட்பாளர்கள் அக்டோபர் 17ம் தேதிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் தலைமையிலான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு 135ல் இருந்து 140 இடங்களும், காங்கிரஸுக்கும் 50ல் இருந்து 52 இடங்களும் ஒதுக்க முடிவாகியுள்ளதாக பேச்சு இருக்கிறது. அதேபோல் தங்கள் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவையே முன்னிறுத்த ராகுல்காந்தி முடிவெடுத்துள்ளதாக சொல்கின்றனர்.
இந்தநிலையில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் பூகம்பம் வெடிக்க ஆரம்பித்துள்ளது. தங்களுடைய ஆதரவாளரை தான் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என ராஷ்டிரிய ஜனதா தளம் நிர்வாகிகளும் தொண்டர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். தேஜஸ்வி யாதவின் பெற்றோரும் முன்னாள் முதலமைச்சர்களுமான லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி வீட்டின் முன்பு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தேஜஸ்வி யாதவின் வீட்டின் முன்பும் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டது. சொந்த கட்சியினரே தேஜஸ்வி யாதவின் காரை வழிமறித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
கடந்த தேர்தலில் சீட் கொடுத்த சிலரின் பணிகள் தொண்டர்களுக்கு திருப்தியாக இல்லாததால் இந்த தேர்தலில் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க கூடாது என தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். தங்களுக்கு ஆதரவாக இருக்கும் நபர்களுக்கே சீட் கொடுக்க வேண்டும் என தலைமைக்கே மிரட்டும் விடுக்கும் வகையில் கொந்தளித்து வருகின்றனர். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் ஜனநாயக முறைப்படி தான் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்போம், ஒவ்வொரு முறையும் இப்படி போராட்டம் நடத்துவது வழக்கமாக நடக்கும் ஒன்று தான் என அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். இருந்தாலும் கட்சிக்குள்ளேயே ஒற்றுமை இல்லை என எதிர் தரப்பினர் தேஜஸ்வி யாதவிற்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.





















